முட்டைகள் பலவிதம்!
- பறவைகள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கக் கூடியவை. ஒரு குஞ்சு உருவாவதற்குத் தேவையான சத்துகள் அனைத்தும் ஓரிடத்தில் வைக்கப்பட்டு, உறுதியான மேலோட்டினால் மூடப்பட்டு முட்டை உருவாகிறது. ஒவ்வொரு வகைப் பறவைக்கும் முட்டையின் அளவும் வண்ணமும் வேறுபடும்.
- பொதுவாக ஒரு பறவையின் எடையில் 1 முதல் 3 சதவீதம் வரை முட்டையின் எடை இருக்கும். மிகப் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் முட்டை 1.4 கிலோ முதல் 2.3 கிலோ வரை எடை இருக்கும். வளர்ந்த நெருப்புக்கோழியின் எடை 70 முதல் 140 கிலோவாக இருக்கும். 1.5 கிலோ எடை இருக்கும் வாத்து, 70 கிராம் எடையுள்ள முட்டையை இடுகிறது.
- இந்த ஒப்பீடு பொதுவாகப் பல பறவைகளுக்குப் பொருந்தும். ஆனால் இவற்றில் சில பறவைகள் வேறுபடும். கிவியின் எடையையும் அதன் முட்டையின் எடையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந்த விகிதம் மற்ற பறவைகளைவிட அதிகமாக இருக்கிறது. இரண்டரை கிலோ எடை இருக்கும் கிவி, 450 கிராம் எடை கொண்ட முட்டையை இடுகிறது.
- கிவி தன் கூட்டை நிலத்துக்கு அடியில் உருவாக்குகிறது. முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வந்தவுடன் சூழ்நிலைக்குத் தாக்குப்பிடித்து வளரக்கூடிய தகவமைப்பு தேவைப்படுவதால் இது அதிக எடை கொண்ட முட்டையை இடுகிறது.
- பறக்க, நீந்த வேண்டிய தேவை பறவைகளுக்கு இருப்பதால் உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கின்றன.
- நான்கு கிலோ வரை கோழிகளின் எடை இருக்கும். வாத்து அதிகபட்சம் ஒன்றரை கிலோ எடைதான் இருக்கும். வாத்துக்கு நீந்த வேண்டிய தேவை இருப்பதால் அதன் உடல் எடை கூடுவது இல்லை. கோழியைவிட வாத்து பெரிய பறவை என்பதால், கோழியைவிட முட்டை சற்றுப் பெரிதாக இருக்கும்.
- வாத்து முட்டையின் மஞ்சள் கரு கோழி முட்டையின் மஞ்சள் கருவைவிடப் பெரிதாக இருக்கும். கோழிக்குத் தேவைப்படும் சத்துகளைவிட வாத்து முட்டையிலிருந்து உருவாகும் குஞ்சுக்கு அதிகமான சத்துகள் தேவைப்படுகின்றன.
- பறவைகள் அனைத்தும் மனிதர்களைப் போல வெப்ப ரத்தப் பிராணிகள். தான் எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும் உடல் வெப்பநிலையைக் குறிப்பிட்ட வெப்பநிலையிலேயே அவை பராமரிக்கின்றன. மனிதனின் உடல் வெப்பநிலையைவிடப் பறவைகளின் சராசரி உடல் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். பறவைகளின் உடல் வெப்பநிலை 102-108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை மாறுபடும். பறவை ஓய்வில் இருக்கும்போது அதன் சராசரி உடல் வெப்பநிலை, பறக்கும் போது இருப்பதைவிடச் சற்றுக் குறைவாக இருக்கும்.
- குளிர்ப் பிரதேசங்களில் இருக்கும் பறவைகள் உடல் வெப்பநிலையைக் குறிப்பிட்ட வெப்ப நிலையில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காக அதிகமாக உணவை உட்கொள்ளுதல், கூட்டமாக அமர்ந்து வெப்பக் கசிவைக் குறைத்தல், உடலை நடுங்க வைத்தல் போன்ற பல உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
- முட்டையில் இருக்கும் கரு வளர்ச்சி அடைவதற்குக் குறிப்பிட்ட வெப்பநிலை அவசியம். முட்டைகள் மீது அமர்ந்து தாய்ப் பறவை அடைகாக்கும்போது முட்டைகளுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கிறது. முட்டைகளை அடைகாக்கும் காலமும் பறவைகளுக்குப் பறவை வேறுபடும். பெரிய பறவைகளுக்கு இந்த அடைகாக்கும் காலம் அதிகமாகவும், சிறிய பறவைகளுக்குக் குறைவாகவும் தேவைப்படும்.
- கடல் பறவையான அல்பட்ராஸ் 11 வாரங்கள் வரை முட்டையை அடைகாக்கும். சிட்டுக்குருவி 2 வாரங்கள் மட்டுமே அடைகாக்கும். தாய்ப் பறவை மட்டும் அல்லாமல் ஆண் பறவையும் சேர்ந்து அடைகாக்கும் பறவைகளும் இருக்கின்றன. சில பறவைகள் தினமும் ஒரு சில மணி நேரம் மட்டுமே அடைகாக்கும் வேலையைச் செய்கின்றன. சில பறவைகள் இடைவெளி இல்லாமல் சில நாள்கள் வரை தொடர்ந்து அடைகாக்கும். ஒரு பறவை உணவு தேடிவிட்டு வந்தவுடன் அடுத்த பறவை அடைகாக்கும் வேலையைத் தொடர்கிறது.
- ஒரே நேரத்தில் நிறைய முட்டைகளை இடும் பறவைகள் அதிக நேரத்தை முட்டையை அடைகாப்பதில் செலவிடுவது இல்லை. சில முட்டைகள் சேதம் அடைந்தாலும், மீதி முட்டைகள் அதன் அடுத்த சந்ததி உருவாவதை உறுதி செய்துவிடுகின்றன. ஆனால், ஒன்று, இரண்டு முட்டைகள் மட்டும் இடும் பறவைகளுக்கு அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அவை அதிக நேரம் அடைகாக்கும்.
- கோழி தினமும் ஒரு முட்டை எனக் குறிப்பிட்ட காலத்துக்கு இடுகிறது. காட்டுக்கோழி ஒரே நேரத்தில் சில முட்டைகளை இடுகிறது. அல்பட்ராஸ் ஒரு முட்டைதான் இடுகிறது. கழுகு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடும்.
- முட்டையிடுவதற்குத் தேவையான சூழ்நிலையைப்பொறுத்து முட்டையிடும் அளவும் மாறுபடுகிறது. அதிகமாக உணவு கிடைக்கும் இடங்களில் அதிகமான முட்டைகள் இடப்படுகின்றன. முட்டைகளை அடைகாப்பதற்குக் கூடு கட்டும் பறவைகளும் இருக்கின்றன. மற்ற பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பறவைகளும் இருக்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2024)