நிதி ஒதுக்கீடு
- கரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%, இங்கிலாந்து அரசு 12.5% ஒதுக்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு, முதற்கட்டமாக கரோனா தடுப்பு உபகரணங்களுக்காக ஒதுக்கிய ரூ.15,000 கோடியையும், நிவாரணத்துக்காக ஒதுக்கிய ரூ.1.75 லட்சம் கோடியையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சில வட்டிக்குறைப்புகளையும் சேர்த்தால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 2-3%-க்குள்தான் வருகிறது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதவே போதாது.
நிதிப் பற்றாக்குறை உச்சவரம்பைத் தளர்த்திக்கொள்ளலாம்
- 2003-ன் நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை (எஃப்ஆர்பிஎம்) சட்டமானது, நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%-ஐத் தாண்டக் கூடாது என்று உச்சவரம்பை நிர்ணயிக்கிறது. என்றாலும் போர், தேசியப் பேரிடர், விவசாய நெருக்கடி போன்றவை ஏற்படுகிறபோது இந்த உச்சவரம்பைத் தளர்த்திக்கொள்ளலாம் என்று விதிவிலக்கையும் இச்சட்டம் அனுமதிக்கிறது.
- மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் கேரளம் முதன்முதலாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ‘இந்த நிதி ஒதுக்கீடு போதாது; இந்த ஏப்ரலுக்குள்ளேயே கேரள அரசு ரூ.12,500 கோடி நிதி திரட்டியாக வேண்டும்; ஆகையால், எஃப்ஆர்பிஎம் சட்டத்தின் விதிவிலக்கைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என மத்திய அரசிடம் அது கோரிக்கை வைத்துள்ளது.
- தமிழக அரசும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.3,800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மத்திய அரசிடம் ரூ.9,000 கோடி நிதியுதவி கோரியுள்ளது. மேலும், மொத்த மாநில உற்பத்தியில் ஏறத்தாழ 33% நிதிப் பற்றாக்குறை என்ற அளவுக்கு, எஃப்ஆர்பிஎம் சட்டத்தின் விதிவிலக்குப் பலனைப் பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. இது போக, மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
- ஏற்கெனவே 2008-2009 ஆண்டு நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 6.2%-ஆகத் தளர்த்திக்கொண்டது. மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையை மொத்த மாநில உற்பத்தியில் 3.5%-ஆகவும், அடுத்த நிதியாண்டில் 4%-ஆகவும் இருப்பதற்கு அனுமதியளித்தது. இந்த நிதியாண்டிலும்கூட மத்திய அரசு பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதற்காக 3% உச்சவரம்பை ஏற்கெனவே தளர்த்திக்கொண்டிருக்கிறது. கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் அதைத் தளர்த்துவதுதான் இப்போதைக்கு நம் முன்னால் இருக்கும் ஒரே வழி. நிதியறிக்கை சமநிலையைக் காட்டிலும் மனிதவளத்தைப் பாதுகாப்பதே முக்கியமானது.
நன்றி: தி இந்து (06-04-2020)