TNPSC Thervupettagam

முதல்வரின் பயணம் முதலீடுகளை அள்ளித் தரட்டும்!

September 19 , 2024 69 days 120 0

முதல்வரின் பயணம் முதலீடுகளை அள்ளித் தரட்டும்!

  • தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட 17 நாள் அரசு முறைப் பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் ரூ.7,618 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக முதல்வர் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் தொழில் வளம் மேலும் மேம்படும் என்னும் நம்பிக்கையும் உருவாகியிருக்கிறது.
  • இந்திய அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகம் தான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக இருந்துவந்தது. கடந்த நிதியாண்டில் கர்நாடகம், 10.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடுகளைப் பெற்றது.
  • ஆனால், இந்த நிதியாண்டில் அம்மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடு 37 சதவீதம் குறைந்துள்ளது. மறுபுறம், மத்திய தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் அறிக்கையின்படி தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு முதலீடு 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த நிதியாண்டில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகமாகப் பெற்றதன் அடிப்படையில், தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், முதல்வரின் அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு முதலீட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தப் பயணத்தின் மூலம், அமெரிக்காவின் 19 நிறுவனங்களுடன் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் ரூ.7,618 கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 11,516 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ‘ஃபோர்டு’, சென்னை மறைமலை நகரில் உற்பத்தி ஆலையை அமைத்திருந்தது. ஆனால், 2022இல் அந்த ஆலையை மூடி உற்பத்தியை நிறுத்திவிட்டது. முதல்வரின் இந்தப் பயணம் மூலம், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் மறைமலைநகர் ஆலையைத் திறந்து, ஏற்றுமதி செய்வதற்கான கார்களை உற்பத்திசெய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 2,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள இந்த ஒப்பந்தம் இந்தப் பயணத்தில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
  • திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின்னணுக் கருவி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஜபில் நிறுவனத்துடன் (Jabil Inc.) கையெழுத்தாகி இருக்கிறது. ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மின்னணுக் கருவித் தொழில் உற்பத்திச் சேவைகள், தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஜபில், அமெரிக்காவின் சிறந்த 500 நிறுவனங்களில் 121 ஆவது இடம் வகிப்பதாக ‘ஃபார்ச்சூன்’ இதழால் 2020 இல் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் திருச்சியில் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழக இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நிறைவேறிச் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழ்நாட்டுக்கு வேலைவாய்ப்பும் நிதியும் கிடைக்கும். முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் போதிய முதலீடுகள் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை முழுமையாகச் சாத்தியமாக்குவார் என நம்புவோம்!

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories