TNPSC Thervupettagam

முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

November 2 , 2023 437 days 260 0
  • இரண்டாவது பாலஸ்தீன இண்டிஃபாதாவுக்குள் ஹமாஸ் எவ்வாறு நுழைந்தது என்று பார்க்கத் தொடங்கி, பின்னோக்கி நெடுந்தூரம் சென்று விட்டோம். ஷேக் அகமது யாசின் முதல் யாஹியா அயாஷ் வரை, இஸ்லாமிய காங்கிரஸ் முதல் சொந்த ஆயுத ஃபேக்டரி வரை நிறையவே கண்டோம்.
  • அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இன்றைய ஹமாஸின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது சிரமம் என்பதுதான் காரணம். இதில் நாம் பார்க்காமல் மீதம் வைத்த விஷயங்கள் இன்னும் இரண்டு இருக்கின்றன. முதலாவது, ஹமாஸின் தற்கொலைப் படை. இரண்டாவது, இயக்கத்தை நடத்தும் செலவுக்கு எப்படிப் பணம் வருகிறது என்பது. அதையும் பார்த்து விடலாம். அப்போதுதான் பாலஸ்தீன பிரச்சினையின் இருபத்தோறாம் நூற்றாண்டு சரித்திரம் இன்னும் எளிதாகப் புரியும்.
  • இந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கி, நடைமுறைக்குக் கொண்டு வந்தது ஹமாஸ்தான். பிறகு உலகெங்கும் உள்ள பல்வேறு இயக்கங்கள் இதனைத் தேவைக்கேற்பப் பயன் படுத்த ஆரம்பித்துவிட்டன. ஆனால் முதல் முதலில் ஒரு தற்கொலைப் படை வீரனை உருவாக்க அவனிடம் எம்மாதிரியெல்லாம் பேசியிருப்பார்கள்!
  • அது குறித்த ஆதாரங்கள் ஏதும் நமக்குக் கிடைப்பதில்லை என்றாலும் அந்த முதல் சம்பவம் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன. அது நடந்தது, ஏப்ரல் 16, 1993. கவனியுங்கள். அந்தச் சம்பவம் இஸ்ரேலுக்குள் நடக்கவில்லை. ஹமாஸ் அதனை டெல் அவிவில் நடத்த விரும்பவில்லை. மாறாக, மேற்குக் கரையில் உள்ள மெஹோலா என்கிற இடத்தில் நடத்தினார்கள். அது ஏராளமான யூதக் குடியேற்றங்கள் அமைந்திருந்த பகுதி.
  • இதன் பொருள் என்னவென்றால், தாக்குதல் யூதர்களின் மீதுதான். ஆனால் விடப்படும் எச்சரிக்கை யாசிர் அர்ஃபாத்துக்கு. ஓஸ்லோ ஒப்பந்தம் வேண்டாம். கையெழுத்திட்டீர்கள் என்றால் விளைவுகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும்.
  • ஒரு புராதனமான, கழித்துக் கட்டப்பட்ட வேனில் கொஞ்சம் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு மனிதன் அந்த இடத்துக்குச் சென்றான். ஜங்ஷனை அடையும் வரை தள்ளாடி, தடுமாறி, மெதுவாகச் சென்று கொண்டிருந்த அந்த வேன், ஜங்ஷனில் 2 பேருந்துகள் அருகருகே சென்று கொண்டிருந்ததைக் கண்டதும் வேக மெடுக்கத் தொடங்கியது. பின்னால் வந்து கொண்டிருக்கும் வேனில் ஏதோ பிரச்சினை, பிரேக் பிடிக்கவில்லையோ என்னவோ என்று எண்ணி 2 பேருந்துகளின் டிரைவர்களும் தத்தமது வண்டிகளைச் சாலையோரம் விலக்க நினைத்து ஸ்டியரிங்கை வளைத்த போது நடுவே கிடைத்த இடைவெளி யில் அவன் தனது வேனைக் கொண்டு போய்ச் செருகினான். மறுகணம் தன்னைத் தானே வெடிக்கச் செய்து, வேனையும் சேர்த்து வெடித்தான்.
  • அதற்கு முன் கேட்டிராத அதிபயங்கரமான சத்தம் விண்ணைப் பிளக்க, சாலை முழுவதும் புகை மண்டலமாகிவிட்டது. இரண்டு பேருந்துகளும் சிதறின. சாலையில் போய் கொண்டிருந்த மக்கள் அலறிக் கொண்டு ஓடத் தொடங்க, நூற்றுக் கணக்கானோர் மிதிபட்டே விழுந்தார் கள். புகை சற்று அடங்கி, சுற்றிலும் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்க முடிந்த போது எங்கெங்கும் ரத்த வெள்ளத்தில், வலியில் கதறிக் கொண்டிருந்த மக்களே தென்பட்டார்கள்.
  • ஹமாஸின் அந்த முதல் தற்கொலைத் தாக்குதலுக்கு பலியா னது பொதுமக்கள் தரப்பில் ஒரே ஒருவர்தாம். ஆனால், அந்தச் சம்பவம் உண்டாக்கிய தாக்கம் மிகப் பயங்கர மானது. இஸ்ரேலியத் தரப்பிலும் சரி; மேற்குக் கரை பாலஸ்தீனப் போராளி இயக்கங்களின் தரப்பிலும் சரி. இப்படியொரு தாக்குதலை நிகழ்த்த முடியுமா என்று திகைத்து விட்டார்கள். சம்பவம் நடந்தது மேற்குக் கரை என்பதால், உடனடியாக பிஎல்ஓ.வின் உறுப்பு இயக்கங்களைக் குறி வைத்து இஸ்ரேலியப் படை வேட்டையாட வந்து விட்டது. ஹமாஸ் பொறுப்பேற்கும் வரை யாசிர் அர்ஃபாத் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதானது.
  • இதன் பிறகுதான், இச்சம்பவம் உண்டாக்கிய அதிர்ச்சி ஒரு யுத்தம் தருகிற அதிர்ச்சியினும் பெரிது என்பது புரிந்த பின்புதான் ஹமாஸில் தற்கொலைப் படை என்ற தனிப் பிரிவுஒன்றை உருவாக்க முடிவு செய்தார்கள். பாலஸ்தீனம் முழு வதும் இதற்கெனத் தனியே ரகசியப் பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித் தார்கள்.
  • சுதந்திர பாலஸ்தீனம் என்கிற கனவுடைய யார் வேண்டுமானாலும் வரலாம். தற்கொலைப் படையில் இணையலாம். நேரடியாகப் போர்க் களம் செல்ல இயலாதவர்கள் - ஆனால் போர் புரிய வேண்டும், மண்ணுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அத்தனை பேரையும் சேர்த்துக் கொண்டு பயிற்சி தருகிறோம்.
  • தகவல் காட்டுத் தீயைப் போல பாலஸ்தீனம் முழுதும் பரப்பப்பட்டது. ஒரு நம்ப முடியாத சம்பவம் அப்போது நடந்தது. ஹமாஸின் தற்கொலைப் படைப் பிரிவில் சேர வந்தவர்களுள் சரி பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருந்தார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories