முதல் நாளில் என்ன செய்யப் போகிறார் டிரம்ப்?
வாஷிங்டன்:
- அமெரிக்க அதிபர் தேர்தலில், அந்நாட்டு குடிமக்களின் 74.6 மில்லியன்(7.46 கோடி) வாக்குகளைப் பெற்று(மொத்த வாக்குகளில் 50.5 சதவீதம்), 312 பிரதிநிதிகள் வாக்குகளுடன் பெரும் வெற்றி பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
- அடுத்த கட்டமாக, அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதும் முதல் நாளில் டொனால்ட் டிரம்ப் என்ன செய்யப்போகிறார் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
- டொனால்ட் டிரம்ப்பின் திட்டப்படி, அதிபராகப் பதவியேற்றதும் இரண்டே விநாடிகளில், தனக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்த சிறப்பு கவுன்சிலை நீக்குவதாக அதிரயாகக் கூறியுள்ளார்.
- அகதிகளாக அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களை வெளியேற்றப் போவதாகவும், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, மிகப்பெரியளவிலான நடவடிக்கையாக இது அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார் டிரம்ப். அகதிகள் ஊடுருவாமல் தடுக்க பிற நாடுகளுடனான அமெரிக்க எல்லைகளை மூடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
- ஆனால், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தஞ்சமடைந்திருக்கும் சுமார் 11 மில்லியன் மக்களையும் ஒரே நாளில் பிற நாடுகளுக்கு வெளியேற்றுவது, சாத்தியமற்ற நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
- கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக நாடாளுமன்றத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிரணியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள், வலதுசாரி தீவிர செயல்பாட்டாளர்கள் பலர் வெள்ளை மாளிகை அருகே திரண்டதில் வன்முறை மூண்டது. அதில் தொடர்புடையதாக, 1,500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
- இந்த நிலையில், வெள்ளை மாளிகை கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களை ‘தேசப் பற்றாளர்கள்’ என அழைத்துவரும் டிரம்ப், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
- மிக முக்கிய நடவடிக்கையாக, அரசு நிர்வாகத்தில் தனக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை நீக்குவதும், டிரம்ப்பின் முதல் நாள் நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும். டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கையால், ஆயிரக்கணக்கான ஃபெடரல் பணியாளர்கள் பணியிழக்கும் சூழல் உருவாகலாம்.
- தொழில் துறையில் முக்கிய நடவடிக்கையாக, இறக்குமதியாகும் பொருள்கள் மீது வரி விதிப்பதும், அதிலும் குறிப்பாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.
- அமெரிக்காவில் உற்பத்தி தொழில்துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று டிரம்ப் தரப்பில் பார்க்கப்படுகிறது.
- கல்வித் துறையிலும் காலநிலை விவகாரங்களிலும் ஜோ பைடன் அரசின் கொள்கைகளில் தான் மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாகவும், உள்நாட்டில் நிலத்தடியிலிருந்து கிடைக்கும் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தேர்தல் பிரசாரத்தின்போது உறுதியளித்துள்ளார் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்ப்.
- முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபோது, அதிபராக முதல் நாளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். அதில், வர்த்தக ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை, அகதிகள் வெளியேற்றம், அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழலைக் களைய நடவடிக்கைகள் ஆகியன அடங்கும். ஆனால், இவையனைத்தையும் ஒரேயடியாக டிரம்ப் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமணி (11 – 11 – 2024)