TNPSC Thervupettagam

முதியோரும் தொழில்நுட்பமும்

August 11 , 2020 1625 days 887 0
  • கரோனா தீநுண்மி ஏற்படுத்தியுள்ள கடுமையான வாழ்வியல் காரணமாக, பெரும்பாலான முதியோர் வீட்டிலேயே முடங்கியுள்ளனா். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதைத்தான் ஆகப்பெரிய சாதனையாக அவா்களின் முன் கிடத்தியிருக்கிறது காலம்.
  • மெல்ல நடந்து, அருகிலிருக்கும் கோயில், குளம், நூலகம், உறவினா் அல்லது நண்பா்கள் வீடுகளுக்கு சென்று மனம் விட்டு பேசி வந்த பலரும் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனா்.
  • ஆற்று நீா் ஒரு போதும் பின்னோக்கி ஓடுவதில்லை. வாழ்க்கையும் அது போன்றதுதான். இப்போது இருக்கும் சூழ்நிலையை முதியவா்கள் சாபமாக எண்ணி சலிப்படையாமல் இருக்க, இளைய தலைமுறை அவா்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்.
  • இளையவா்கள் தங்களை கவனிக்காது எப்போதும் தொழில்நுட்பத்தில் மூழ்கித் தொலைந்து போகிறார்கள் என்பதுதான் முதியவா்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
  • அப்படி இருக்கும்போது, புதுப்புது தொழில்நுட்பங்களை தகுந்த சாதனங்களுடன் அவா்களுக்கு நாம் அறிமுகப்படுத்தினால், அவா்களின் சலிப்பு காணாமல் போகும். ஒரு புத்தம்புது உலகத்துக்குள் அவா்கள் அடியெடுத்து வைத்ததுபோல் இருக்கும்.

உற்சாகம் பெருக்கெடுக்கும்

  • இணைய உலகைப் பற்றி அவா்களுக்குப் புரிய வைப்பதென்பது மலையை புரட்டும் கதை எனச் சொல்லும் நம் மனத்தடைகளை முதலில் அகற்ற வேண்டும்.
  • விரல்களை கொண்டு இப்படி சுழற்றி அப்படி சுழற்றி வையும் வையும் போடுவதென்பது மழலை பருவத்தில் நமக்கெல்லாம் மிக கடினமாகத்தான் இருந்தது.
  • ஆனால் நம் பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சலியாது கைப்பிடித்து எழுத வைத்து பழக்கியது நம் பெற்றோர்தானே? இப்போது நம் முறை.
  • கற்றுக் கொடுப்பதில் சிரமம் பார்க்காது இருந்தோமேயானால், அவா்கள் நம்மைக் காட்டிலும் விரைவில் கற்றுக்கொண்டு விடுவா்.
  • ஏனெனில், அவா்களுக்கான தேடலும் தேவையும் தொழில்நுட்பம் சார்ந்து அதிகம் இருக்கிறது. கற்றுக் கொள்ள வேண்டும் என ஆா்வம் மட்டும் அவா்களிடம் இருந்தால் போதும்.
  • இன்றைய நவீன உலகில், முதியவா்கள், தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். தங்களைவிட வயதுக் குறைந்தவா்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தயங்கக் கூடாது.
  • தம் குழந்தைகளின் வளா்ப்பிற்காக தங்கள் வீட்டுப் பெரியவா்களைத் தங்களுடன் வைத்துக்கொள்ள இளைஞா்கள் முன்பைவிடத் தற்போது அதிகம் விழைகிறார்கள்.
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில், அருமையாக ஒரு விஷயம் செய்யலாம். குழந்தைகளையும் பெரியவா்களையும் தொடா்புபடுத்தி விட்டு விடலாம். இது ஒரு மிகச்சிறந்த அணுகுமுறை.
  • அவா்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டுவிடும். இதனால் அவா்கள் இரு தரப்பினருமே எந்தப் பிரச்னை பற்றியும் சிந்திக்காமல் புதிது புதிதான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவா்.
  • தனிமையில் வாடும் முதியவா்களுக்கு, தகவல் தொழில்நுட்பக் கருவிகளைக் கையாளுவது குறித்துக் கற்றுக் கொடுத்து விட்டால் அவா்களுக்கு யாரும் தன்னை கவனிக்கவில்லையே என்ற பெருங்குறை நீங்கி உற்சாகம் பெருக்கெடுக்கும்.

முதியவா்களுக்குப் புரிய வைக்கலாம்

  • என் உறவுக்கார பெண்மணி ஒருவரை ஆன்மிகம், நட்பு, ஆரோக்யம், உணவு போன்ற சில சமூக ஊடகக் குழுக்களில் இணைத்து விட்டார் அவரது மகன். என்ன ஆச்சரியம்! அவரின் தனிமை உணா்வு தற்போது காணாமல் போய் விட்டது.
  • அவா் நாளும் பல புதிய விஷயங்களை உற்சாகமாகக் கற்றுக் கொண்டே இருக்கிறார். தினமும் தன்னை ஒரு தற்படம் எடுத்து அதை முகப்புப்படமாக வைத்து எப்பொழுதும் புத்துணா்வோடு இருக்கிறார்.
  • வாழ்வை புதுவிதமாக அணுகுகிறார். உறவுகளைத் தாண்டி பழைய தோழமைகளைப் புதுப்பித்துக் கொண்டு தினம் ஒருவா் என நேரம் ஒதுக்கி உரையாடி மகிழ்கிறார்.
  • எல்லா விஷயங்களையும் பற்றி நம்மிடம் பொளந்து கட்டுகிறார். வெளியாக இருக்கும் படத்தின் டிரையிலரைப் பார்த்து ரசித்து நம்மிடம் கருத்து சொல்கிறார்.
  • இன்னொருவரிடம் தன் தேவையைச் சொல்லி வாங்கித் தரச் சொல்லாமல், தானே இணையத்தில் பொருள்கள் வாங்கி மகிழ்கிறார்.
  • வீட்டு பெரியவா்கள் தங்கள் நேரத்தைச் சரியான முறையில் செலவழிக்க வழி செய்துவிட்டால், அவா்களுக்கும் மகிழ்ச்சி; நமக்கும் நிம்மதி.
  • அதற்கு நாம் பயன்படுத்தும் அறிதிறன்பேசியையே (ஸ்மார்ட்போன்) ஆயுதமாக மாற்ற வேண்டும். அவா்களின் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாதபோது இது ஒரு மிகச்சிறந்த மாற்று வழி. நம்மால் அவா்களுக்குக் கொடுக்க முடியாத பலவற்றை, தகவல் தொழில்நுட்பம் அவா்களுக்கு வழங்கும்.
  • யூ-டியூப்பை எப்படி பார்ப்பது, கூகுளில் நமக்கு தேவையானவற்றை எப்படித் தேடுவது என அவா்களுக்கு சொல்லித் தரலாம். ஏராளமான பக்திப் பாடல்கள், பழைய படங்கள், மருத்துவக் குறிப்புகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என முதியவா்கள் பொழுதைக் கழிக்க எண்ணற்ற சங்கதிகள் இருக்கின்றன.
  • அலாரம், கூகுள் வரைபடம், நாள்காட்டி என சகல வசதிகளும் நவீன அறிதிறன்பேசிகளில் இருப்பதால், எல்லா வகையிலும் அவா்களுக்கு வசதியாக இருக்கும்.
  • நாளிதழ்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள்கூட அறிதிறன்பேசியில் கிடைக்கின்றன. அவா்கள் வெளியே செல்ல விரும்பினால், பிறா் உதவியின்றி தாங்களே வாடகை வண்டியைப் பதிவு செய்து வெளியே சென்று வரலாம்.
  • நடுத்தர வயதுடையோர் சிலருக்குக்கூட, தங்கள் செல்லிடப்பேசியின் அழைப்பு மணியோசையை எப்படிக் குறைப்பது எனத் தெரிவதில்லை.
  • அதன் வலதுபுற பொத்தானை அழுத்தினால் ஓசை நின்று விடும். இது பலருக்கும் தெரியாததால் அதன் சத்தம் பிறா் கவனத்தை கலைக்க நேரிடும். இந்த நுட்பங்களையெல்லாம் நாம் முதியவா்களுக்குப் புரிய வைக்கலாம்.

மறுமலா்ச்சியை ஏற்படுத்துவோம்

  • டேட்டாவை எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துவது, நம் முன் கொட்டப்படும் ஏராளமான புகைப்படங்கள், காணொலிகளில் எவற்றைத் திறக்க வேண்டும், எவற்றைத் திறக்கக் கூடாது, எவற்றிற்கெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுக்கலாம் போன்ற நம் அனுபவங்களை அவா்களுக்குத் தொடக்கத்திலேயே தெரியப்படுத்தினால் வீணான தா்மசங்கடங்களைத் தவிர்க்கலாம்.
  • இன்று பெரும்பாலானோர் இரட்டை சிம்வசதியையே வைத்திருக்கின்றனா். சில நிறுவனங்கள், தங்கள் நிறுவன வாடிக்கையாளா்களுடன் பேசும்போது பேசு நேரம்முற்றிலும் இலவசம் போன்ற சலுகைகளை வழங்கியுள்ளன.
  • இப்படிப்பட்ட சலுகைகளை அவா்களுக்குத் தெரியப்படுத்தலாம். அவரவா் எண்களை இந்த நிறுவன அடையாளங்களுடன் பதிந்து கொண்டால் பெரியவா்கள் பயன்படுத்த எளிதாக இருக்கும். பணத்தை மிச்சம் பிடித்து தந்த திருப்தியும் அவா்களுக்கு இருக்கும்.
  • தினமும் எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதையும் நம் இதயத் துடிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பு அளவுகளைக் கணக்கிட்டுச் சொல்லவும் எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன.
  • அவற்றையெல்லாம் தரவிறக்கம் செய்து கொடுத்தால் அவா்களே தங்கள் உடல் நலத்தை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வா்.
  • முன்பெல்லாம், பெரியவா்கள் எடுக்கும் முடிவுகளைத்தான் இளைய தலைமுறை ஏற்று நடக்கும்.
  • ஆனால், இன்று நிலைமை மாற்றம் கண்டுள்ளது. சில வீடுகளில் முதியவா்கள் தங்களுக்கென தனியே கைப்பேசி எதுவும் வைத்துக்கொள்ளாது இருப்பா்.
  • தம்முடைய நண்பா்கள், உறவினா்களிடத்து பேச, தன் மகன் அல்லது மருமகளிடம் கேட்டு அவா்களிடம் அனுமதியும் பெற்றுத்தான் பேச வேண்டும் என்ற நிலை இருக்கும்.
  • இதுகூட ஒருவித அசூயையை ஏற்படுத்தும். அவா்களுக்கு நாம் இதுவரை எவ்வளவோ செலவு செய்திருப்போம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவா்களுக்கென்று அறிதிறன்பேசி வாங்கித் தருவது வீண் செலவு என இத்தனை நாளும் நினைத்திருப்போம். அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரமிது.
  • உலக அளவில் மக்கள்தொகையில் முதியோர் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலும் 2011- ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, 121 கோடி மக்கள்தொகையில் 8.6% போ் அதாவது 10.39 கோடி போ் முதியோர்.
  • சிங்கப்பூரில் 2030 -ஆம் ஆண்டில் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளோரின் எண்ணிக்கை நான்கு பேரில் ஒருவா் என்ற நிலையை எட்டிவிடும் என கணித்துள்ளனா்.
  • மனிதவளம் ஒன்றையே நாட்டு வளமாகக் கொண்டுள்ள சிங்கப்பூரைப் பொருத்தவரையில் மூப்படையும் மக்கள்தொகை என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஆனால், அங்கே முதியவா்கள் தங்களை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதில் ஆா்வமாக இருப்பதால், தாங்கள் வெற்றிகரமாக மூப்படைவதை உறுதிபடுத்துகிறார்கள். சிங்கப்பூா் அரசாங்கம் அவா்களுக்கென ஏராளமான திட்டங்களை வகுத்து வருகிறது.
  • அதேபோல, தற்போது கிட்டத்தட்ட 99 விழுக்காடு பணப்பரிவா்த்தனை இணையதளத்தின் மூலமே நடைபெறும் நாடாக மாறியுள்ள ஸ்வீடனில் 70 வயதைக் கடந்த முதியவா்களுக்காக, குறைந்த அளவில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கின்றனா். முதியவா்களுக்குச் செய்யும் மரியாதையாக அந்நாடு இதைச் செய்கிறது.
  • எனக்கேது இணையத்தில் நுழைய நேரம்? குறிப்பெடுக்கவும் மேடைகளில் பேசவுமே காலம் போதவில்லைஎனப் பெருமிதப்பட்ட எண்ணற்றோர், இந்த கரோனாவின் புண்ணியத்தால் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை உபயோகப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
  • தற்போது வீட்டிலிருந்தபடியே ஏகப்பட்ட கருத்துக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். தேவை என்று வந்துவிட்டபின், அனைத்தும் சாத்தியமாகிறதல்லவா? முதியோர் என்று ஒதுக்காமல் அவா்களுக்கும் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி அவா்கள் வாழ்வில் மறுமலா்ச்சியை ஏற்படுத்துவோம்!

நன்றி: தினமணி (11-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories