- மார்க்கண்டேயன் கதை பல்வேறு வடிவங்களில் சொல்லப்படுகிறது. சிவனருளால் அவன் என்றும் பதினாறாக இருந்தான் என்பதுதான் இங்கு முக்கியம். புறநானூற்றில் 365வது பாடலைப் பாடியவர் பெயர் மார்க்கண்டேயனார். இன்றும் முதுமையிலும் இளமையாகத் தோற்றமளிப்பவரை மார்க்கண்டேயன் என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இந்தத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் ‘ரயிலில் சிரஞ்சீவி’ (1942) என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார்.
- தமிழ்ச் சூழலில் க.நா.சு. ஒரு விமர்சகராகவே அறியப்படுகிறார். சிறுகதை, நாவல் என்று அதிக அளவில் எழுதியிருந்தாலும், அவரது புனைகதைப் பங்களிப்புகள் குறித்துக் குறைந்த அளவே பேசப்பட்டிருக்கிறது. ‘பொய்த்தேவு’, ‘ஒருநாள்’ போன்ற அவரது நாவல்கள் பேசப்பட்ட அளவுக்குக்கூட, அவரது சிறுகதைகள் சார்ந்து வாசிப்பு நிகழ்த்தப்படவில்லை.
- மார்க்கண்டேயன் வரலாறு மகாபாரத காலத்துக்கும் முற்பட்டது. இவர் பாண்டவர்களுக்குத் தருமம் பற்றி அறிவுரை கூறியிருக்கிறார். இத்தகைய மார்க்கண்டேயன் இன்றும் வாழ்ந்துகொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்கிற எண்ணம்தான் க.நா.சு.வை இப்படியொரு சிறுகதை எழுத வைத்திருக்கிறது. 16 வயது நிறைவடையும் அன்று அமிர்தகடேசுவரர் கோயிலை விட்டு மார்க்கண்டேயன் வெளியே வரவில்லை; கருவறைக்குள் ஒளிந்துகொள்கிறார்.
- எமன் மீதான பயத்தால் சிவலிங்கத்தைக் கட்டிக்கொள்கிறார். சிவபக்தி தன்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறார். எமன், மார்க்கண்டேயனைப் பிடிக்க முடியாமல் திரும்பிப் போகிறார். யுகங்கள் கடந்தன. ஒரு நாள் கதைசொல்லி பட்டினியால் நொடிந்துபோன மார்க்கண்டேயனை ரயிலில் சந்திக்கிறார்.
- ‘அந்தச் சிவபெருமானே உத்தரவிட்டாலொழிய எமன் என்னை அணுக மாட்டான் என்று தோன்றுகிறது. பழைய வரத்தை ரத்துசெய்து என்னை அழைத்துப்போக எமனுக்கு உத்தரவிட வேண்டும் என்று சிவபெருமானை நோக்கித் தவம் புரியச் செல்லுகிறேன்’ என்கிறார். காலணா பிச்சை கேட்கிறார். பிச்சைக்காக அவர் இந்தக் கதையைச் சொல்வதாகக் கதைசொல்லி நினைக்கிறார். ஆனால், திருக்கடையூர் வந்ததும் அவர் இறங்கிச் செல்கிறார். இதுதான் ‘ரயிலில் சிரஞ்சீவி’ கதையின் சுருக்கம்.
- இந்தக் கதையில் வரும் அமிர்தகடேசுவரர் கோயில் திருக்கடையூரில்தான் இருக்கிறது. இத்தலத்தில்தான் சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்து அருளினார் என்று நம்பப்படுகிறது. காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் குறித்துத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியிருக்கிறார்கள். ‘அபிராமி அந்தாதி’ இத்தலத்தில்தான் பாடப்பட்டிருக்கிறது. இந்த ஊரில்தான் க.நா.சு.வின் மார்க்கண்டேயன் இறங்கிச் செல்கிறான்.
- மார்க்கண்டேயன் கதையை க.நா.சு. அப்படியே புனைவுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். புனைவின் இறுதியில்தான் அதன்மீது ஒரு மறுவாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார். வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு தொன்மத்தைப் புனைவாக எழுதிய க.நா.சு., அதில் சமகால சமய அரசியலையும் இடையில் செருகி நவீனப்படுத்தியிருக்கிறார். சிவபெருமானின் இருப்பைக் காலந்தோறும் நிறுவிக்கொள்ள இதுபோன்ற கதைகள் சமயவாதிகளுக்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன.
- ‘பூலோகத்தில் தங்களுடைய மதமும் மார்க்கமுமே சிறந்தது என்று நிரூபிக்க சிவபக்தர்களுக்கு இன்னொரு ருஜு கிடைத்துவிட்டது’ என்று க.நா.சு. எழுதியிருக்கிறார். திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் தற்போதும் இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது. தொன்மம் ஒரு கட்டத்தில் சடங்காக மாறி நிலைபெற்றுவிடும்.
- மார்க்கண்டேயன் சிவபெருமானிடம் வாங்கிய வரம், ஒரு சாபம் என்ற க.நா.சு.வின் பார்வை நவீனத்தன்மை கொண்டது. பிறந்தவர்கள் இறப்பதுதான் இயற்கை. இயற்கைக்கு எதிராக வரம் பெற்றவர்கள் உளம் நொந்தே செத்திருக்கிறார்கள். பீஷ்மர் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். பீஷ்மரின் தந்தையான சாந்தனு, சத்தியவதி என்ற மீனவப் பெண்ணை விரும்பினார். சத்தியவதியைத் தந்தையுடன் சேர்த்துவைக்க இல்லறத்தையும் அரச உரிமையையும் இழந்தார் பீஷ்மர். அதன் பயனாகச் சாந்தனு பீஷ்மருக்கு ஒரு வரத்தை அளித்தார். ‘மரணதேவன் உன் விருப்பத்தை அறிந்தே உன்னை அணுக முடியும்’ என்று சாந்தனு அளித்த வரமே பீஷ்மருக்குச் சாபமாக அமைந்துவிடுகிறது.
- மரணம் என்பது ஒரு விடுதலை. அந்த விடுதலையை வரத்தின் மூலம் இல்லாமலாக்கிக் கொண்டவர் பீஷ்மர். பீஷ்மர் பாரதப் போரில் இறக்கும்போது குறைந்தபட்சம் அவருக்கு 101 வயது இருந்திருக்க வேண்டும் என்று கணக்கிடுகிறார் ஆய்வாளர் இராவதி கார்வே. இயல்பாக நடந்திருக்க வேண்டிய பீஷ்மரின் மரணத்தைச் சாந்தனு கொடுத்த வரம் மிகக் கொடூரமானதாக மாற்றிவிடுகிறது. பீஷ்மர் ஒரு சபிக்கப்பட்ட பிறப்பாகவே வாழ்ந்திருக்கிறார்.
- பொறுப்புத் துறப்பைப் பற்றிச் சிந்திக்க முடியாத அளவுக்குப் பீஷ்மருக்கு நெருக்கடி வந்துகொண்டே இருந்திருக்கிறது. எந்தக் குலத்தை நிலைநிறுத்துவதற்காகத் தன் வாழ்நாளை ஒப்புக்கொடுத்தாரோ; அவ்வளவு துயரங்களை எதிர்கொண்டாரோ; அது நிகழவே இல்லை. அந்தக் குலத்தின் அழிவைக் கண் முன்னே பார்த்துவிட்டுத்தான் பீஷ்மர் இறந்துபோனார். பீஷ்மர் இறப்பதற்கு முன்பு, அவர் வீட்டுப் பெண்களின் மரண ஓலத்தை அம்புப்படுக்கையில் படுத்துக்கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தார்.
- க.நா.சுப்ரமண்யம், ‘ரயிலில் சிரஞ்சீவி’ என்கிற இச்சிறுகதையில் இயல்புக்கு முரணான வாழ்க்கையின் பின்விளைவுகளை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு மார்க்கண்டேயன் தொன்மத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். வரங்களே சாபமாக மாறிய புராணக் கதைகள் நிறைய உள்ளன. இயற்கைக்கு மாறாக மனிதர்கள் பெற்றுள்ள கூடுதல் தகுதிகள் அவர்களுக்குள் ஆணவத்தையே உருவாக்குகின்றன.
- இந்த ஆணவம் இறுதியில் அவர்களை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்கிறது என்ற வாசிப்பையும் இக்கதையின் மீது நிகழ்த்தலாம். காலத்தைக் கடந்து உயிர் வாழ்தல் ஒரு சாபம். சமூகத்துக்குள் அது எவ்வளவு பெரிய இடையீடுகளை உருவாக்கும் என்கிற உச்சத்துக்கெல்லாம் க.நா.சு. இப்புனைவைக் கொண்டு செல்லவில்லை. வரத்தைத் திருப்பி அளிக்கும் எளிய முடிவுடன் க.நா.சு. புனைவை முடித்துக்கொள்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 03 – 2024)