முத்தான முதல் வெற்றி
- பாராலிம்பிக் இந்திய வரலாற்றில், பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற நிலையை அடைந்த போதே சாதனைப் படைத்து விட்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயதான துளசிமதி முருகேசன். மகளிர் ஒற்றையர் எஸ்யு 5 இறுதிப் போட்டியில், சீன வீராங்கனையிடம் போராடி தோற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
- அறிமுக பாராலிம்பிக் தொடரிலேயே, பாட்மிண்டன் விளையாடி பதக்கம் வெல்வது சுலபம் அல்ல. துளசிமதியின் போராட்டக் குணமும் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பும் ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அதைக் காப்பாற்றியிருக்கிறார். இதற்கு முன்பே 2023 ஆசிய விளையாட்டு பாரா பாட்மிண்டன் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப் பாரா பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளார் துளசிமதி.
- காஞ்சிபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட துளசிமதிக்கு பிறக்கும்போதே இடது கையில் குறைபாடு இருந்துள்ளது. அதோடு தசை, நரம்பு பாதிப்புகளும் இருந்ததால் இடது கையை முழுவதுமாகப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் மனம் தளராமல் சிறு வயது முதலே விளையாட்டில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
- தந்தையின் உந்துதலும் வழிகாட்டலும் ஐந்து வயதிலேயே பாட்மிண்டன் ராக்கெட்டைப் பிடிக்க வைத்தது. மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு ஹைதராபாத்திலுள்ள கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதை இறுகப் பற்றிக்கொண்ட துளசிமதி, இன்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)