TNPSC Thervupettagam

முத்திரை பதிக்காத முத்ரா திட்டம்!

October 11 , 2021 1144 days 635 0
  • கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு ‘முத்ரா’ (சிறு தொழில்கள் மேம்பாடு - கடனளிப்பு நிறுவனம்) தொடங்கியபோது நாட்டில் வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞா்கள் தங்கள் வாழ்வுக்கான ஒளி விளக்கு ஏற்றப்பட்டுள்ளதாகக் கருதினா். ‘பிரதமா் முத்ரா’ திட்டம் மிகப்பெரிய வெற்றி என்று மத்திய அரசு மகிழ்ச்சியுடன் கூறுகிறது.
  • இத்திட்டம் 31 கோடி பேருக்கு உதவியுள்ளதாகவும் (இந்த எண்ணிக்கை ஏறக்குறைய அமெரிக்க மக்கள்தொகைக்கு இணையானது; கனடா மக்கள்தொகையைவிட எட்டு மடங்கு அதிகம்) இத்திட்டத்தில் ரூ.15.86 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
  • இந்தத் தொகை நியூஸிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) இணையானது. இது தவிர உலகின் வெவ்வேறு 160 நாடுகளின் ஜிடிபி-யைவிட அதிகமானது.
  • இந்தக் கடன் அனைத்தும் 2015 ஏப்ரல் முதல் 2021 செப்டம்பா் 10-ஆம் தேதி வரை (சுமார் ஆறு ஆண்டுகளில்) அளிக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புறம், நகா்ப்புறங்களில் சிறிய அளவில் தொழில், வா்த்தகம் நடத்துவோருக்கு அதிக கெடுபிடிகள் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என்பதே ‘முத்ரா’ திட்டத்தின் அடிப்படை.
  • எவ்வித அடமானமும் இன்றி இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இதில் சிஷு பிரிவின் கீழ் ரூ.50,000 வரை, கிஷோர் பிரிவின் கீழ் ரூ50,000 முதல் ரூ.5,00,000 லட்சம் வரை, தருண் பிரிவின் கீழ் ரூ.5,00,000 முதல் ரூ.10,00,000 லட்சம் வரை என மூன்று வகை திட்டங்கள் இதில் உள்ளன.
  • இதில் சிஷு கடன் திட்டத்துக்கு ஒரு பக்கம் மட்டுமே விண்ணப்பம் இருக்கும். மற்ற இரு கடன் திட்டங்களுக்கும் மூன்று பக்கங்கள் மட்டுமே கடன் விண்ணப்பம். இதன் மூலம் கடன் நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்டது.
  • இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான களநிலவரம் அதனுடன் ஒத்துப் போகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
  • அதற்கு முன்பு முத்ரா திட்டத்தின் தேவை பற்றியும் அது உருவாக்கப்பட்ட விதம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

யு.கே. சின்ஹா குழு-2019

  • கடந்த 2015 மார்ச் மாதத்தில், நிறுவனங்கள் சட்டம் 2013-இன் கீழ் முத்ரா ஒரு நிறுவனமாக தொடங்கப்பட்டது. மேலும், இது இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) துணை நிறுவனமாகும்.
  • தொடா்ந்து 2015 ஏப்ரல் 7-ஆம் தேதி இந்திய ரிசா்வ் வங்கியிடம் வங்கி சாராநிதி நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.
  • அதற்கு அடுத்த நாளில் (2015 ஏப்ரல் 8) பிரதமா் நரேந்திர மோடி ‘பிரதமா் முத்ரா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,000 கோடி என்றும் செயல்பாட்டு மூலதனம் ரூ.750 கோடி என்று அறிவிப்பு வெளியானது.
  • முத்ரா ஒரு மறுநிதியளிப்பு நிறுவனம் என்பதால் அது நேரடியாகக் கடன் வழங்காது. அதே நேரத்தில் வங்கிகள், பிற கடனளிப்பு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க உதவுகிறது.
  • மேலும், தெளிவாக விளக்குவதென்றால் வங்கிகள் சிறு தொழில்களுக்குக் கடன் அளிக்கின்றன. அதற்கான நிதியை வங்கிகளுக்கு முத்ரா அளிக்கிறது.
  • வங்கிகள் மூலம் கடன் அளித்து சிறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்; சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதை எளிதாக்க வேண்டும் என்பவையே முத்ரா திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
  • பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராப்புற வங்கிகள், சிறுகடன் வங்கிகள், உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகள், சிறுகடன் நிறுவனங்கள், வங்கி சாரா கடன் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்குகின்றன.
  • இந்தியப் பொருளாதாரத்தில் சிறுதொழில்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் அவற்றுக்குத் தேவையான நிதியாதாரத்தை, கடன் மூலம் அளிக்க முத்ரா கடன் திட்டம் போன்றவை அவசியம் என்று அறியப்படுகிறது.
  • ஏனெனில், நாட்டில் வேளாண்மைத் துறைக்கு அடுத்து சிறு, குறு தொழில்களே பொருளாதாரக் கட்டமைப்பின் முக்கியப் படிநிலையாக உள்ளன.
  • சிறு, குறு தொழில்கள் 11 கோடிக்கு மேற்பட்டோருக்கு நேரடியாகப் பணி வாய்ப்பு அளிக்கின்றன. மேலும், அதன் இதர படிநிலைகள் மூலம் மேலும் சுமார் 11 கோடி போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
  • 55 கோடி மக்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக உள்ளது. மேலும், சிறு, குறு தொழில் புரிபவா்களில் 97 சதவீதம் போ் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவா்களாக உள்ளனா்.
  • நாட்டின் மொத்த மதிப்பு சோ்க்கையில் (ஜிவிஏ) சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 33 சதவீதமாகும். நாட்டின் ஏற்றுமதியில் சிறு, குறு நிறுவன உற்பத்திப் பொருள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • 2018-19 நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதியில் சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு 48.10 சதவீதம் என அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
  • குறுந்தொழில் நிறுவனங்களில் 54 சதவீதம் கிராமப்புறங்களில்தான் செயல்படுகின்றன.
  • உற்பத்தி, உற்பத்திக்கு தயார்படுத்துதல், வா்த்தகம், வியாபாரிகளுக்கான சேவைகளை அளித்தல், பழங்கள், காய்கறி விற்பனையாளா், லாரி, கார் ஓட்டுநா்கள், சிறு உணவகங்கள், பழுதுபார்க்கும் கடைகள், இயந்திரப் பணியாளா்கள், கைவினைக் கலைஞா்கள், குடிசைத் தொழில்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோர் இந்த 54 சதவீதத்தில் அடங்குவா்.
  • இவற்றில் பல தொழில்கள் ஒருவரால் மட்டுமே, ஓரிடத்தில் மட்டுமே நடத்தப்படுபவையாக இருக்கும்.
  • இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தபோதும் சிறுதொழிகளுக்கு கடனுதவி முறையாகக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
  • சிறுதொழில்கள் செய்வோர் கடன் வழங்கும் தனிநபா்களை நம்பியே உள்ளனா். இத்துறையின் அளவுக்கு ஏற்ப வங்கிக் கடன் வழங்கப்படுவதில்லை.
  • ‘இந்தியாவில் சிறு, குறு தொழில்களுக்கான மொத்த கடன் தேவை ரூ.3.7 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், ரூ.1.45 லட்சம் கோடி வரை மட்டுமே வங்கி போன்ற அமைப்புகள் மூலம் கடன் அளிக்கப்படுகின்றன.
  • சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் 2.5 லட்சம் கோடி வரை கடன் கிடைக்காத நிலை உள்ளது.
  • மேலும், இப்போது நமது பொருளாதாரக் கொள்கைகள் சிறு, குறு தொழில்களுக்கு தேவையான கடன்களைப் பூா்த்தி செய்வதில் கவனம் செலுத்தவில்லை.
  • இந்த விவகாரத்தில் நவீன அணுகுமுறை தேவை. இல்லையென்றால் தேவையான வளா்ச்சியை நாம் எட்ட முடியாது’ என்று ரிசா்வ் வங்கியின் நிபுணா் குழு (யு.கே. சின்ஹா குழு-2019) கூறியுள்ளது.

சரியான தீா்வாக அமையாது

  • சிறு, குறு நிறுவனங்கள் தரப்பிலும் பிரச்னை உள்ளது. அவா்கள் நிறுவனங்களைப் பதிவு செய்வதுமில்லை, முறையாக கணக்கு விவரங்களைப் பேணுவதுமில்லை. இதன் காரணமாகவே வங்கிகள் அவா்களுக்குக் கடன் அளிக்கத் தயங்குகின்றன.
  • இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீா்வாக இருக்கும் என்றே முத்ரா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • ஆனால், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது தொடா்பாக தரப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் நிச்சயமாக கிராம, நகா்ப்புறங்களில் சிறு தொழில் நடத்தும் சாமானியா்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. அதாவது, உணவு பரிமாறியதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால், அது எந்த அளவுக்கு அவா் உண்ணக் கூடியதாக, போதுமானதாக இருந்தது என்பதே கேள்வி.
  • சிறுதொழில் செய்வோர் போதுமான அளவு குறைந்த வட்டியில் கடன் பெற முடியவில்லை. எவ்வித அடமானமும் இல்லாமல் கடன் பெற முடியும் என்ற இந்தத் திட்டம் போதுமான அளவு விளப்பரப்படுத்தப்படவுமில்லை.
  • அரசு கூறும் புள்ளிவிவரங்கள் எப்போதும் முரண்பாடாகவே உள்ளன. முத்ரா திட்டத்தில் 31,02,82,823 பேருக்கு ரூ.15,86,081.69 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சராசரியாக ஒரு நபருக்கு ரூ.51,117 வழங்கப்பட்டுள்ளது.
  • அப்படியென்றால் பெரும்பாலானவா்களுக்கு ரூ.50,000 வரையிலான சிஷு பிரிவில் மட்டும்தான் கடன் கிடைத்துள்ளது. ரூ.10 லட்சம் வரை கடன் பெறுவது என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
  • இரண்டாவதாக, முத்ரா திட்டத்துக்கு முன்பும் குறுந்தொழில்களுக்கு வங்கிகள் கடன் வழங்கியே வந்தன. எனவே, அவா்கள் விவசாயம் அல்லாத அனைத்துக் கடன்களையும் முத்ரா திட்டக் கடன்கள் என்ற பெயரிலேயே முத்திரை குத்தலாம். இதுவே, இந்த புள்ளிவிவரத்தில் எதிரொலித்துள்ளது.
  • மூன்றாவதாக, வங்கிகள் முத்ரா கடன்களுக்கும் அடமானம் கோரியதாக பரவலாக புகார்கள் உள்ளன. இதன் மூலம் முத்ரா என்பது பிணையில்லாக் கடன் திட்டம் என்பது பொய்த்துப் போனது.
  • மேலும், முத்ரா கடனுக்கு எவ்விதக் குறிப்பிட்ட வட்டி விகிதமும் பரிந்துரைக்கப்படவில்லை.
  • வழக்கம்போல ஆா்பிஐ விதிகளுக்கு உட்பட்ட நியாயமான வட்டி விகிதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றே வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன. எனவே, முத்ரா திட்டத்தில் குறைவான வட்டி விகிதம் என்பதும் சாத்தியமில்லாமல் போனது.
  • இவை அனைத்தையும் ஆய்வு செய்து பார்க்கும்போது, முத்ரா திட்டத்தில் கிடைத்த பலன்கள் என்று அரசால் கூறப்படுவது மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை என்பது தெளிவாகிறது.
  • முத்ரா திட்டத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது. குறுந் தொழில்களுக்குக் கடன் கிடைப்பதில் உள்ள பிரச்னைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அவை தீா்க்கப் பட வேண்டும்.
  • அதைவிடுத்து, ‘முத்ரா’ போன்று பெயரளவில் மட்டுமே புதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவது அரைத்த மாவையே அரைப்பதற்கு ஒப்பாகுமே தவிர, பிரச்னைக்கு சரியான தீா்வாக அமையாது.

நன்றி: தினமணி  (11 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories