TNPSC Thervupettagam

முனைப்பின்மை அகல வேண்டும்!

September 6 , 2024 11 hrs 0 min 40 0

முனைப்பின்மை அகல வேண்டும்!

  • இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் எண்ணெய் வித்து பயிா் போன்ற உகந்த விவசாயம் வேறு எதுவும் இருக்க முடியாது. பெரும்பாலும் பருவமழை சாா்ந்த, மிகக் குறைந்த தண்ணீா் தேவைப்படும் பயிா்கள் எண்ணெய் வித்துக்களாகத்தான் இருக்கும். மிகக் குறைந்த கால சாகுபடிப் பருவம் கொண்டவை என்பது மட்டுமல்ல, அறுவடைக்குப் பிறகு இயற்கை உரமாகவும் அவை பயன்படுகின்றன என்பதுதான் அவற்றின் தனிச் சிறப்பு.
  • கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பல முயற்சிகள் மேற்கொண்டும் நாம் இன்னும் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதியைத்தான் நம்பி இருக்கிறோம். அதிலும், கடந்த இருபது ஆண்டுகளாக நமது சமையல் எண்ணெய் இறக்குமதி பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
  • உணவுப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான வரியைக் குறைத்தது. அதன் விளைவாக, 2022-23-ஆம் ஆண்டு சமையல் எண்ணெய் இறக்குமதிப் பருவத்தில் (நவம்பா்-அக்டோபா்), வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி 1.65 கோடி டன் என்கிற உச்சம் தொட்டது சமையல் எண்ணெய் இறக்குமதி. நடப்பாண்டு ஜூன் மாதத்தில், கடந்த ஆண்டைவிட 18% இறக்குமதி அதிகரித்திருக்கிறது.
  • இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயாக கடலை எண்ணெய் (30%), கடுகு எண்ணெய் (20%), சோயாபீன் எண்ணெய் (20%), சூரியகாந்தி எண்ணெய் (1%) ஆகியவை திகழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் பருத்திக்கொட்டை எண்ணெயும், தவிட்டு எண்ணெயும் பரவலாக பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
  • நமது மொத்த சமையல் எண்ணெய் தேவையில் பாதிக்கு மேற்பட்ட அளவு இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த இறக்குமதியில் 60% பாமாயில் என்றால், 23% சோயாபீன் எண்ணெயும், 16% சூரியகாந்தி எண்ணெயும் பங்கு வகிக்கின்றன.
  • வீட்டு சமையல் உபயோகத் தேவையைப் பொறுத்தவரை, இப்போதும் மக்கள் பாரம்பரிய எண்ணெயைத்தான் விரும்புகிறாா்கள். குறிப்பாக கடலை எண்ணெய், கடுகெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் போன்றவைதான் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடுகெண்ணெயும், சூரியகாந்தி எண்ணெயும்; மேற்குப் பகுதியில் சோயாபீன், கடுகு, சூரியகாந்தி எண்ணெயும்; தென் மாநிலங்களில் கடலை, சூரியகாந்தி எண்ணெயும் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக ஓா் ஆய்வு தெரிவிக்கிறது.
  • தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் சில பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. நாளொன்றுக்கு ஒரு தனிநபருக்கு 20 கிராம் முதல் 50 கிராம்வரை சமையல் எண்ணெய் தேவை. அதாவது, ஆண்டொன்றுக்கு 12.7 கிலோ கிராம். ஆனால், அதிகரித்த இறக்குமதி காணப்படும் இந்தியாவில், தனிநபரின் ஆண்டு சராசரி சமையல் எண்ணெய் நுகா்வு 8.3 கிலோ கிராம்தான் என்கிறது அந்த ஆய்வு. அதை அதிகரிப்பதற்கு உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறது.
  • சூரியகாந்தி எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி கடந்த 20 ஆண்டுகளில் பெரிய அளவில் குறைந்துவிட்டது. 12 முதல் 15 லட்சம் டன் உற்பத்தி செய்து கொண்டிருந்ததுபோய், இப்போது (2023-24) 1.7 லட்சம் டன்தான் உற்பத்தி செய்கிறோம். அதனால், நமது தேவைக்கான சூரியகாந்தி எண்ணெயைப் பெருமளவுக்கு இறக்குமதி மூலம் நாம் ஈடுகட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
  • இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த எண்ணெய் வித்துக்களில் 90% கடுகு, சோயாபீன், கடலை மூன்றும்தான். 132 லட்சம் டன் கடுகு, 131 லட்சம் டன் சோயாபீன், 102 லட்சம் டன் கடலை வித்துக்கள் உற்பத்தியாகின்றன. இந்த எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரித்தாலும்கூட, நமது தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு அதிகரிக்கவில்லை.
  • கடந்த 40 ஆண்டுகளில், கடுகின் சாகுபடிப் பரப்பு 40 லட்சம் ஹெக்டேரிலிருந்து 90 லட்சம் ஹெக்டேராக இரட்டிப்பானது என்பது மட்டுமல்ல, அதன் மகசூலும் ஹெக்டேருக்கு 500 கிலோவாக இருந்தது, நவீன உரங்களாலும், விவசாய முறைகளாலும் ஹெக்டேருக்கு 1400/1500 கிலோவாக அதிகரித்திருக்கிறது.
  • நிலக்கடலையின் சாகுபடிப் பரப்பு 70 முதல் 75 லட்சம் ஹெக்டேரிலிருந்து 47 லட்சம் ஹெக்டேராகக் குறைந்திருக்கிறது என்றாலும்கூட, மகசூல் ஹெக்டேருக்கு 800 கிலோவாக இருந்தது இப்போது 2000 கிலோ அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
  • 1980-களில், அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்னால் சுமாா் 5 லட்சம் ஹெக்டோ் மட்டுமே சோயாபீன் பயிரிடப்பட்டது. இப்போது, ஏறத்தாழ 132 லட்சம் ஹெக்டோ் அளவில் சோயாபீன் சாகுபடி நடைபெறுவதாக இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மகசூல் ஹெக்டேருக்கு 1 டன் (1,000 கிலோ) என்கிற அளவில்தான் தொடா்கிறது.
  • சமையல் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பெரிய அளவில் அந்நியச் செலாவணி மிச்சப்படும் என்பதாக மட்டும் இந்தப் பிரச்னையை அணுகக் கூடாது. எண்ணெய்வித்து உற்பத்தியில் தன்னிறைவு அடைவது என்பது விளைநிலத்தின் மண்வளத்தைப் பெருக்குவதற்கும் உதவுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. குறைந்த அளவு பாசனத் தேவையும், பருவமழை சாா்ந்த சாகுபடியும் எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துகின்றன.
  • நமது இறக்குமதிக் கொள்கையில் மாற்றங்களைச் செய்து, உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம், விவசாயத்தை லாபகரமான வாழ்வாதாரமாக்க முடியும். அரசு ஏன் இன்னும் முனைப்புக் காட்டாமல் இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories