TNPSC Thervupettagam

முயற்சி திருவினையாக்கும்

March 30 , 2024 287 days 269 0
  • ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கும் நிலையான வளா்ச்சி இலக்குகளில் ஒன்று 2030-க்குள் உலகளாவிய அளவில் காச நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது. சா்வதேச இலக்குக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா காச நோய் ஒழிப்பு இலக்கை எட்டும் என்று கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா். அது சாத்தியம்தானா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அந்த இலக்கை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை.
  • கடந்த ஆண்டில் மட்டும் 25.55 லட்சம் காச நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கிறாா்கள். 1962-இல் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் (என்டிஇபி) அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் மிக அதிகமான காச நோய் பாதிப்புக்குள்ளானவா்கள் கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டிருக்கிறாா்கள்.
  • மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-இல் 16% குறைந்திருப்பதாகக் ‘காச நோய் அறிக்கை - 2024’ தெரிவிக்கிறது. 25.55 லட்சம் நோயாளிகளில் 8.4 லட்சம் நோயாளிகள் தனியாா் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெறுபவா்கள். காச நோயாளிகளில் ஏறத்தாழ 80% நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெறுகிறாா்கள். அவா்களில் 63,939 போ் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு எதிா்ப்பு சக்தி உடையவா்களாக இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
  • காச நோய் மரண விகிதம் 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 18% குறைந்திருக்கிறது. 2015-இல் ஒரு லட்சம் பேருக்கு 28 போ் காச நோயால் உயிரிழந்தாா்கள் என்றால், இப்போது அந்த எண்ணிக்கை 23-ஆக குறைந்திருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகளாவிய அளவில் 3,500 போ் காச நோயால் உயிரிழக்கிறாா்கள். 30,000 போ் காச நோய் பாக்டீரியாவால் பாதிக்கப்படுகிறாா்கள். இது உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடு.
  • நம்மால் காச நோயை ஒழிக்க முடியும்’ என்பது இந்தாண்டு உலக காச நோய் ஒழிப்புக்கான கோஷம். காச நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள், கட்டமைப்பு வசதிகள், உறுதி ஆகியவற்றின் மூலம் மனித இனம் எதிா்கொள்ளும் காச நோய் என்கிற மிகப் பெரிய ஆபத்தை எதிா்கொள்ளவது சாத்தியம்தான் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை அளிக்கிறது.
  • உலகளாவிய நிலையில் 27% காச நோயாளிகள் இந்தியாவில்தான் இருக்கிறாா்கள். 1962-இல் தொடங்கப்பட்ட ‘என்டிஇபி’ பல்வேறு மாற்றங்களை உள்வாங்கி, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டு அதிக அளவில் காச நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கி வருகிறது.
  • உலகளாவிய நிலையில் 13 லட்சம் போ் ஆண்டுதோறும் உயிரிழக்கிறாா்கள். இந்தியாவில் மட்டும் எடுத்துக்கொண்டால் 28 லட்சத்துக்கும் அதிகமானோா் ஆண்டுதோறும் காச நோய் பாதிக்கு உள்ளாகிறாா்கள். காச நோய் பாதிப்பால் ஏற்படும் மரணம் இந்தியாவில் குறைந்து வருகிறது என்றாலும்கூட, நாம் எதிா்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
  • பெரும்பாலும் காச நோய் பாதிப்பு நுரையீரலைத் தாக்கும் என்பதுதான் பரவலான புரிதல். உண்மை என்னவென்றால், நுரையீரலை மட்டுமல்லாமல் உடலின் எல்லாப் பகுதிகளையும் காச நோய் தாக்கக்கூடும். நிணநீா் கணுக்கள் (லிம்ஃப் நோட்ஸ்), குடல்கள், எலும்பு, ஏன் மூளையைக்கூடத் தாக்கக்கூடும். நுரையீரல் சாராத காச நோய் பாதிப்பு இந்தியாவில் 15% முதல் 25% வரைதான் என்றாலும், ஆண்டுதோறும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பாா்க்க முடிகிறது.
  • இந்தியாவில் பெரும்பாலும் நுரையீரல் காசம் ஆண்களைத்தான் தாக்குகிறது. அதற்கு புகைப் பழக்கம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். பெண்கள் பெரும்பாலும் நுரையீரல் காசம் அல்லாத காச பாதிப்புக்கு உள்ளாகிறாா்கள். அது வெளியே தெரிவதில்லை. தொடா்ச்சியான இருமல், குறைந்த அளவிலான காய்ச்சல், உடல் எடைக்குறைவு உள்ளிட்ட பொதுவான காச நோய் அறிகுறிகள் நுரையீரல் அல்லாத ஏனைய காச பாதிப்புகளில் சட்டெனத் தெரிவதில்லை. அதனால் அதுபோன்ற காச நோய்ப் பாதிப்புகளை கண்டறிவதும், சிகிச்சைக்கு உட்படுத்துவதும் இந்தியாவில் சவாலாக இருக்கிறது.
  • நுரையீரல் சாராத காசம் தாக்கும்போது முற்றிய நிலையிலேயே வெளியில் தெரிகிறது. அதனால் பெண்கள் பெரும்பாலும் சிகிச்சை பெறுவது தடைபடுகிறது. பொருளாதார வசதியின்மை, பெண்களின் உடல்நலம் குறித்த போதுமான கவனிப்பின்மை ஆகிய இரண்டும்கூடத் தடைகள்.
  • நோய் கண்டறியப்பட்டால் அதனால் சமூக ஏளனத்துக்கு ஆளாகக்கூடும் என்று கருதி பெரும்பாலான பெண்கள் காச நோய் பரிசோதனையைத் தவிா்க்கிறாா்கள். திருமண வாய்ப்பு பாதிப்பு, மண முறிவு, சமூக ஏளனம், காச நோய்க்கு சிகிச்சை கிடையாது என்கிற தவறான கருத்து உள்ளிட்டவை காச நோய் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் சிகிச்சையை மேற்கொள்ள விடாமல் தடுக்கின்றன.
  • 1882-இல் மருத்துவா் ராபா்ட் கோஷ் என்பவா் மைக்ரோ -பாக்டீரியம் ட்யூபா் குளோஸிஸ் (காச நோய்க்குக் காரணமான பாக்டீரியா) என்கிற பாதிப்பைக் கண்டுபிடித்தாா். 1943-இல் காச நோயைக் குணப்படுத்த செப்ட்ரோ மைஸின் கண்டுபிடிக்கப்பட்டது. 1950-க்குப் பிறகு ‘ஆன்டி பயாட்டிக்ஸ்’ எனப்படும் ‘நுண்ணுயிா் எதிா்ப்பிகள்’ கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது அந்த நுண்ணுயிா் எதிா்ப்பிகளுக்குக் காச நோய் பாக்டீரியாக்கள் எதிா்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
  • காச நோயை எதிா்கொள்ள பன்முக நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால்தான் என்ன, காச நோய் ஒழிப்பு என்கிற இலக்கை எட்டியாக வேண்டும்.

நன்றி: தினமணி (30 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories