TNPSC Thervupettagam

முருகன் என்னும் தொன்மம்

August 22 , 2024 144 days 297 0

முருகன் என்னும் தொன்மம்

  • கடைச் சங்க காலத்துக்குப் பிறகு தோன்றிய தொன்மங்கள் முருகப் பெருமான் தொடர்பான பல புனைவுகளை உருவாக்கியிருந்தாலும், தற்காலத்தில் முருக வழிபாடு தமிழ் மக்களின் வழிபாடாகவே பெருமளவில் காணப்படுகிறது. உலகளாவிய நிலையில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் முருக வழிபாடு நடைபெறுகிறது.
  • முருகன் என்னும் கடவுள் சார்ந்த நம்பிக்கை ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையாகவே கருதப்பட்டு வந்துள்ளது. ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயங்களுள் கௌமாரம் என்பது முருகனை முழுமுதற் கடவுளாகப் போற்றிப் பின்பற்றுவதாகும். சைவம் என்பதுதனி மதமாகப் போற்றப்பட்டாலும், கௌமாரம் (முருக வழிபாடு), காணாபத்தியம் (கணபதி வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு) ஆகியன தனித்த வழிபாட்டு முறைகளாகவே இருந்துள்ளன.
  • என்றாலும் தற்காலத்தில் முருக வழிபாட்டை ஒரு தனிமதம் சார்ந்த வழிபாடாக யாரும் பின்பற்றுவதில்லை. இந்து மத அமைப்பின்படி இந்த ஆறு சமயங்களும் ஒரே இந்து என்னும் பிரிவின்கீழ் வந்து விடுகின்றன. எனவே தற்காலத்தில் கௌமாரம் என்னும் மதநெறி, தனிப்பிரிவுடைய மதமாக வளர்ச்சி அடையவில்லை.
  • முருகனுடைய வரலாற்றில் குறிப்பிடப்படும் வழிபாட்டிடங்கள் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன.கர்நாடகா, ருத்ரபிரயாக், கேரளம், தமிழ்நாட்டுக்கு அப்பால் தமிழரின் வாழ்விடங்களாக அல்லது பூர்வீக இடங்களாகக் கருதப்படும் இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முருகனுக்கென்று தனிக் கோயில்கள் அமைந்துள்ளன. முருக வழிபாடு என்பதுதமிழ் மக்களின் வழிபாடாகவே உலகளாவிய நிலையில் அறியப்படுகிறது.
  • தமிழர் வகைப்படுத்தியுள்ள ஐவகை நிலவகைப்பாட்டில் குறிஞ்சி நிலக் கடவுளாகமுருகன் போற்றப்படுகிறார். குறிஞ்சி என்பது மலைப்பகுதி என்ற காரணத்தால்தான் ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்’ என்னும் சொல்லாட்சி, பயன்பாட்டில் உள்ளது. தொல்காப்பியம் முருகனைச் சேயோன் என்று குறிப்பிடுகிறது.
  • சேயோன் என்பது மக்கள் பெருந்தொகுதியாக வாழும் சமநிலப்பரப்பிலிருந்து உயர்ந்த மலைப்பகுதியில் இருப்பவர் என்னும் பொருளையும், செந்நிறம் கொண்டவர் என்னும் பொருளையும், சிவபெருமானின் சேய் என்னும் பொருளையும் வழங்குகிறது.
  • முருகன் என்ற சொல், சங்க இலக்கியங்களில் வெளிப்படையாக வந்துள்ளது. பத்துப்பாட்டு நூல் தொகுப்பில் முதலாவதாக இடம்பெறும் திருமுருகாற்றுப்படை என்னும் நூலின் தலைப்பிலேயே ‘முருகு’ என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. அகநானூற்றில் பல இடங்களில் முருகன் என்னும் சொல்லும் (1, 59, 158) முருகு என்னும் சொல்லும் (28, 137, 288) இடம்பெற்றுள்ளன.
  • இதைப் போல் புறநானூற்றிலும் முருகன் என்னும் சொல்லும் முருகனைக் குறிக்கும் வேறு சொற்களும் வந்துள்ளன. மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை முதலானவற்றிலும் முருகு என்னும் சொல் வந்துள்ளது. முருகனுக்கு விழா எடுப்பவரை வேலன் என்னும் பெயரால் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
  • முருகன் என்னும் வழிபாட்டு மரபு கடைச் சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் வழிபாட்டில் இடம்பெற்றிருக்கிறது எனத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கந்த புராணம் முதலான தொன்மங்கள் நமக்கு வழங்கும் வரலாற்றில் கயிலாய மலையோடும் இமய மலையோடும் முருகனைத்தொடர்புப்படுத்திக் காணமுடிகிறது.
  • சிவன்இருக்கும் இடமாகக் கயிலாய மலையும்பார்வதியின் தந்தையான இமவான் இருக்கும் இடமாக இமயமலையும் குறிப்பிடப்படுவதால் முருகனையும் கயிலாய மலைக்குக் கொண்டு சென்று தொடர்பு கொள்கிறோம்.
  • மாணிக்கவாசகர், திருவாசகத்தில் பல இடங்களில் சிவபெருமானை மகேந்திர மலையில் வீற்றிருப்பவர் என்றுதான் பாடியுள்ளார்.

மன்னு மாமலை மகேந்திர மதனில்

சொன்ன ஆகமம் தோற்றளித் தருளியும் (9-10)

என்னும் கீர்த்தி திருஅகவல் அடிகளிலும்

மந்திர மாமலை மகேந்திர வெற்பன்

அந்தமில் பெருமை அருளுடை அண்ணல் (100-101)

என்னும் அடிகளிலும் சிவபெருமானை மகேந்திர மலையில் வீற்றிருப்பவர் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். சிவபுராணத்தில்

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே (90-91)

  • என்னும் அடிகளில் தென்பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இப்படித் தென்பாண்டி நாட்டுடனும் குமரிக் கண்டத்தில் இருந்ததாகக் கருதப்படும் மலைகளுள் ஒன்றான மகேந்திர மலையுடனும் தொடர்பு கொண்டசிவபெருமானைக் கயிலை மலையுடன்பிற்காலத் தொன்மங்கள் தொடர்புகாட்டியுள்ளன.
  • நக்கீரர், இறையனார் களவியல் என்னும்நூலுக்கு உரை எழுதியுள்ளார். அதனை இறையனார் களவியல் உரை என்று போற்றுகிறோம். இந்த இறையனார் களவியல் என்னும்நூலில் இடம்பெற்றுள்ள ‘களவியல்’ என்பதுபண்டைத் தமிழரின் காதல் வாழ்க்கையைத் தெரிவிக்கிறது. களவியல் என்னும் நூலைப் படைத்தவன் இறையன் என்னும் புலவன். அந்த இறையனைத் தான் சிவபெருமான் என்று சங்க வரலாற்றில் நக்கீரர் குறிப்பிட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டில் இருந்ததாக அறியப்படும் மூன்று சங்கங்களுள் முதல் இரு சங்கங்களும் குமரிக் கண்டத்தில் இருந்தவை. மூன்றாவது சங்கம்தான் இப்போதுள்ள மதுரையில் இருந்ததாக அறிய முடிகிறது. முதல் சங்கம், குமரிக் கண்டத்தில் இருந்த தென் மதுரையில் இருந்தது. அந்தச் சங்கத்தில் இருந்த புலவர்களைக் குறிப்பிட்டுக் கூறும்போது நக்கீரர், அகத்தியனாரும் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் என்று குறிப்பிட்டுள்ளார். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் குற்றெறிந்த முருகவேளும் முதல் சங்கப் புலவர்களாகத் தென்மதுரையில் வீற்றிருந்தவர்கள் என்றால் அவர்கள் இருவரும் குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்கள் என்று புரிந்து கொள்ள இயலும்.
  • குமரிக் கண்டத்தின் தென்மதுரையில் இயங்கிய முதல் சங்கத்தில் இருந்த சிவபெருமானும் முருகப் பெருமானும் தொன்ம மாந்தராகத் தமிழ் மக்களால் போற்றப்பட்டு மூன்றாம் சங்க காலத்தில் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட காலத்தில்தான் நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் படைக்கிறார்.
  • பரிபாடலில் செவ்வேள் என்னும் முருகன் தொடர்பான சங்கப்பாடல்கள் படைக்கப்பட்டுள்ளன. நக்கீரரே சிவபெருமான் படைத்த களவியல் நூலுக்கும் உரை எழுதியுள்ளார். இந்தக் கடைச் சங்க காலத்துக்கு, நீண்ட காலத்துக்குப் பின்னர் தோன்றிய தொன்மங்கள், முருகன் தொடர்பான பல புனைவுகளை உருவாக்கியுள்ளன.
  • எத்தகைய புதிய புனைவுகள் தோன்றினாலும் தற்காலத்திலும் முருக வழிபாடு, தமிழ் மக்கள் வழிபாடாகவே பெருமளவில் காணப்படுகிறது. சிவபெருமான் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் தமிழ்நாட்டில்தான் நிகழ்த்தப்பட்டுள்ளன. குமரிக் கண்டம் பற்றிய தொன்மத்தை நாம் மீட்டெடுக்கும்போது முருகன் தொடர்பான செய்திகளும் சிவபெருமான் தொடர்பான செய்திகளும் மேலும் வெளிச்சம் பெறும் என்று நம்பலாம்.
  • பழநிமலை உறையும் முருகா வா வா: முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும்தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். ‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ என்னும் எழுத்து ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ என்னும் எழுத்து கமலனான நான்முகனையும் (பிரம்மதேவர்) குறிப்பிடுகின்றன.
  • ‘முருக’ என்கிற பெயரை உச்சரிக்கும்போதும் முருகப் பெருமானை அழைக்கும்போதும், மும்மூர்த்திகளின் அருளும் நமக்கு கிடைக்கிறது. ஆறு முகங்களைக் கொண்டதால் முருகப் பெருமானை ‘ஆறுமுகன் என்று அழைத்தாலும், அவர் ஆறு பகைவர்களை அழிக்கிறார் என்பதை அறிகிறோம். இன்னும் பல தகவல்களுடன் அரிய தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories