TNPSC Thervupettagam

முறைகேடுகளுக்கு முடிவு வரட்டும்

June 27 , 2024 3 days 45 0
  • எங்கும் இதே பேச்சாக இருக்கிறது. மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் இந்த ஆண்டின் முறைகேடுகள் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கின்றது. 2017-ஆம் ஆண்டு தொடங்கி "நீட்' நடைமுறையில் ஆண்டுதோறும் புதியபுதிய முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
  • கடந்த 2017-இல் தமிழ்நாட்டில் நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கையானது ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு வினாத் தாளை முன்கூட்டியே வெளியிட்டது, ஆள் மாறாட்டம் செய்தது என ஏறக்குறைய 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இவர்களில் பெரும்பாலோர் வடமாநிலங்களில் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மருத்துவ மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொர் ஆண்டும் முறைகேடுகளுக்காகக் கைது செய்யப்படுபவர்கள் என்ன ஆனார்கள் என்பது கைது செய்தவர்களுக்கே வெளிச்சம்.
  • இந்த ஆண்டு நீட் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் தேசிய தேர்வு முகமையோடு பயிற்சி மையங்களும் இணைந்து ஏராளமான முறைகேடுகளைச் செய்துள்ளன என்பது இப்போது தெரிகிறது.
  • குஜராத் மற்றும் பிகார் மாநிலங்களில் நீட் தேர்வு மைய அதிகாரிகளே பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு கேள்வித் தாளைக் கசியவிட்டுள்ளனர். ஹரியாணா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் தொடர்ச்சியான தேர்வெண்களைக் கொண்ட 6 பேர் 720/720 பெற்றுள்ளனர். 1,563 பேருக்கு விதிமுறைகளை மீறி "கருணை மதிப்பெண்'கள் அளிக்கப்பட்டுள்ளன.
  • தேர்வு நடத்தும் நிறுவனமே தேர்வுகள் நடைபெறும் முன் அதன் விதிமுறைகளையும், மதிப்பெண் பற்றிய விவரங்களையும் வெளியிட வேண்டும். தேர்வு நடந்து முடிந்த பிறகு எந்த ஒரு விதியையும் தளர்த்தவோ, நீக்கவோ, சேர்க்கவோ முடியாது. ஆனால் தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டு கருணை மதிப்பெண் அளித்து செயல்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
  • நீட் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. 2016-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டது. மருத்துவப் படிப்பில் சேர உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 50 விழுக்காட்டுக்குக் குறைவாக எடுத்த மாணவர்கள் மருத்துவம் சேர முடியாது.
  • மேலும் 2016 வரை பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றவர்களின் குறைந்த மதிப்பெண்கள் சராசரியாக 200-க்கு 180-க்கு மேல் இருந்திருக்கிறது. எனவே குறிப்பிட்ட 3 பாடங்களிலும் 180 மதிப்பெண்களுக்கு மேல் (அதாவது 90 விழுக்காடு) எடுப்பவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றனர்.
  • ஆனால் நீட் தேர்வில் குறைந்தது 40 முதல் 50 வரை மதிப்பெண் எடுப்பவர்கள்கூட எம்.பி.பி.எஸ். சேரமுடியும். இதனால் பணம் இருந்தால் நீட் தேர்வில் 16 விழுக்காடு முதல் 25 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்கள்கூட தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரமுடியும். 350 எடுத்த ஏழை மாணவனுக்குப் பணம் இல்லையென்றால் மருத்துவப் படிப்பு மறுக்கப்படும்.
  • ""தகுதியுள்ள மாணவர்களுக்கு பணவசதி இல்லையென்றாலும்கூட மருத்துவ இடம் கிடைக்க வேண்டும். வணிகமயமாக்கப்பட்ட மருத்துவக் கல்விச் சூழலில் இத்தகைய மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்'' என்று டாக்டர் ரஞ்சித் ராய் செüத்ரி குழுவும், சுகாதாரம் குறித்த 92-ஆவது நாடாளுமன்ற நிலைக்குழுவும், உச்சநீதிமன்றமும், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை நடத்த வலியுறுத்தின.
  • ஆனால், அதற்கு மாறாக நீட் தேர்வில் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளையும் இணைத்ததன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பதை மத்திய அரசு தடுத்து வருகிறது.
  • நீட் தேர்வில் 24 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 12.5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 1,563 பேருக்கு மட்டும் "கருணை மதிப்பெண்' என்று விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருவகை முறைகேடு என்றே தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகின்றனர்.
  • இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 5 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பே பிகார் மாநில தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்த முறைகேடு தொடர்பாகவும், தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • நீட் தேர்வில் இரண்டு விதமான முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டார். இதனிடையே நீட் தேர்வில் 1,563 பேருக்கு மட்டும் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
  • அதேபோல நாடு முழுவதும் 9 லட்சம் பேர் எழுதிய தேசிய தகுதித் தேர்வையும் (நெட்) மத்திய அரசு ரத்து செய்தது. இந்தத் தேர்வு ஜூன் 18 அன்று நடைபெற்ற நிலையில் அடுத்த நாளே அதை ரத்து செய்தது. இந்தத் தேர்வு நேரடி எழுத்துத் தேர்வு முறையில் நடத்தப்பட்டதாயினும், தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வுப் பிரிவு அளித்தத் தகவலின் அடிப்படையில் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடுகள் காரணமாக தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் சுபோத்சிங் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் "கட்டாயக் காத்திருப்பு' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இந்திய வணிக ஊக்குவிப்பு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலா கூடுதல் பொறுப்பாக என்டிஏ தலைமை இயக்குநர் பதவியை வகிப்பார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளைச் சீரமைக்க இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதி தேர்வு (நெட்) முறைகேடுகள் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
  • என்டிஏ சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நேர்மையாக, எந்தவித சர்ச்சைகளும் இன்றி நடத்தவும், தேர்வு நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யவும் இந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முழுமையான ஆய்வு மேற்கொண்டு தேர்வு நடைமுறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், என்டிஏ கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
  • இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.ஜே.ராவ், தில்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரண்தீப் குலேரியா, பேராசிரியர் கே.ராமமூர்த்தி, பங்கஜ் பன்சல், ஆதித்ய மிட்டல், கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
  • கடந்த மே 5 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு கடந்த ஜூன் 23 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.
  • சண்டீகர், சத்தீஸ்கர், குஜராத், மேகாலயம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 7 மையங்களில் மறுதேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 1,563 மாணவர்கள் மறுதேர்வு எழுத தகுதி பெற்றிருந்த போதிலும் 813 பேர் (52 விழுக்காடு) மட்டுமே மறுதேர்வில் பங்கேற்றனர். 750 பேர் (48 விழுக்காடு) தேர்வெழுத வரவில்லை என்று தேசிய தேர்வு முகமை அறிக்கை கூறுகிறது. இதற்கு என்ன காரணம்?
  • இப்போது புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகப்படியாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதுபற்றி அரசுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) சட்டம் அண்மையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • எத்தனை சட்டங்கள் வந்தாலும் மக்கள் மனம் மாறவேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்களாகும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. முறைகேடுகளுக்கு ஒரு முடிவு வரும். அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்தால் தவறுகளுக்கே வழிவகுக்கும்.

நன்றி: தினமணி (27 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories