TNPSC Thervupettagam

முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி

February 22 , 2024 186 days 275 0
  • மனிதர்களுக்கு ஒழுக்கம் மிகவும் இன்றியமையாததாகும். அது தான் உயர்ந்த நெறி என்பது நம் முன்னோர் கருத்து. தனிமனித வாழ்க்கையில் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டியவை நேர்மையும் ஒழுக்கமும் ஆகும். ஒருவர் ஒழுக்கத்தை இழந்தால், அவர் தன் வாழ்க்கையையே இழப்பார்.
  • இன்றைய இளைஞர்கள் எதிர்மறை கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தவறான பாதையில் பயணிக்கின்றனர். அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி, அரசுப் பணிக்கான போட்டித் தேர்வாளர்களை ஏமாற்றும் செய்திகள் நாளும் அரங்கேறி வருகின்றன. மத்திய, மாநில அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஒழுக்கக் கேடுக்களில் சிலர் ஈடுபடுவதால், திறமையற்ற தேர்வாளர்கள் பணியில் சேர்ந்து அரசுப் பணிகளை சரிவர ஆற்றுவதில்லை. இவர்களே ஊழலில் ஈடுபடுகிறார்கள். இதனால், போட்டித் தேர்வுகள் குறித்தான ஐயப்பாடு திறமையான மாணவர்களிடையே நிலவுகிறது.
  • முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசுப் பணிகளில் சேர்பவர்கள், ஒழுங்காக படித்து சிறந்த மதிப்பெண்களைப் பெறும் திறன் வாய்ந்த மாணவர்களின் வாய்ப்பையும் பறித்துக் கொள்கிறார்கள். இதனால், வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்கள் கிடைத்தற்கரிய காலத்தையும், அரசுப் பணியின் மீதான நம்பகத்தன்மையையும் இழக்கிறார்கள்.
  • ராஜஸ்தான், ஹரியாணா, குஜராத், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற வேண்டிய ஆசிரியர்கள், குரூப் - டி பணியிடங்கள், காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகளின் வினாத்தாள்கள் அண்மையில் வெளியாகின. இதனால், அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
  • அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளின்போது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிய விடுவது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களில் சில கெடுமதி படைத்தவர்கள் திட்டமிட்டு ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதுபோன்ற முறைகேடான செயல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது, அத்தேர்வுகள் ரத்துச் செய்யப்படுவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அரசு அதிகாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் மாணவர்கள் இதன் மூலம் மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.
  • இவ்வாறு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா 2024-ஐ மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்ததை மக்களவையும், மாநிலங்களவையும் விவாதங்களுக்குப் பிறகு ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா சட்டமாகும்.
  • அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்தல், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருதல், இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. திறமை வாய்ந்த மாணவர்களின் நம்பிக்கையை "பொதுத் தேர்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா 2024' உறுதி செய்யும்.
  • இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு உதவி செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இம்மசோதா வழிவகை செய்கிறது. மேலும், தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில், சில போட்டித் தேர்வுகள் நகருக்கு வெளியே இயங்கும் கல்லூரிகளில் கணினி வழியாக நடத்தப்படுகின்றன.
  • அங்கு கணினி வழியிலான தேர்வுகளை மிகவும் பாதுகாப்பாக நடத்துதல், தேர்வு மையங்களில் மின்னணு கண்காணிப்பை உறுதி செய்தல், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை வகுத்தல், தேசிய தரநிலைகள், சேவைகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களை ஆராய்ந்து, பரிந்துரைகளை அளிப்பதற்காக தேசிய அளவிலான உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்கவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இம்மசோதாவின்படி தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
  • "இளைய சமுதாயத்தின் சக்தி நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நபர்களைத் தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். திட்டமிட்ட குற்றங்கள் செய்பவர்களுக்காக, சிறந்த மதிப்பெண் பெறும் திறமையான மாணவர்களைத் தியாகம் செய்ய முடியாது.
  • வேலை தேடும் இளைஞர்களும், நேர்மையாக, திறமையுடன் தேர்வெழுதும் மாணவர்களும், இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை நாம் இன்று தொடங்கி வைத்துள்ளோம்' என மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இம்மாசோதா மீதான விவாதத்தின்போது தெரிவித்தார்.
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி), வங்கிப் பணியாளர் தேர்வு அமைப்பு (ஐபிபிஎஸ்) தேசிய தேர்வுகள் முகமை (என்இஏ) உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளுக்கு இந்த மசோதா பொருந்தும்.
  • மேலும், நாளேடுகளில் வரும் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களைக் கண்டு இளைஞர்கள் பலர் ஏமாந்துவிடுகிறார்கள். மோசடியாளர்களிடமிருந்து இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், அரசு அல்லது தனியார் துறை வேலைவாய்ப்பு விளம்பரங்களை அளிக்கும் நிறுவனம், அமைப்பு, கல்வி நிலையம், தனிநபர் குறித்த நம்பகத்தன்மையை செய்தித்தாள் நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டுமென இந்திய பத்திரிகை கவுன்சில் (பிசிஐ) அச்சு ஊடகங்களை அறிவுறுத்தியுள்ளது. மோசடியாளர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம்.
  • ஒரு மாணவர் தன் அறிவால், ஆற்றலால், உழைப்பால் மட்டுமே முன்னுக்கு வர வேண்டும் என்பதற்கு இம்மசோதா வழிவகை செய்கிறது. ஒழுக்கமான வாழ்வே வெற்றியைத் தரும் என்பதை போட்டித் தேர்வர்கள் உணர வேண்டிய தருணம் இது.

நன்றி: தினமணி (22 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories