- மகாராஷ்டிரத்தில் சிவசேனையைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவைச் சந்தித்திருக்கிறது. சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டே, அவருக்கு ஆதரவான எம்எல்ஏ-க்களுடன் 2022 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் இணைந்ததுபோல, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பாஜக கூட்டணிக்குள் இணைந்து, துணை முதல்வராகியிருக்கிறார். அவரை ஆதரிப்பதாகக் கூறப்படும் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களில் 8 பேர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
- 2019இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியானது முதலே மகாராஷ்டிரத்தில் அரசியல் கட்சிகள் அரசியல் தார்மிகத்தைக் கடைப்பிடிக்காமல் ஜனநாயகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தத் தொடங்கின. பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற பின்னர் முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது சிவசேனை.
- காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து, சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். சிவசேனையின் குறுக்குவழியால் பாஜக பாதிக்கப்பட்டதைப் போல, சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய குறுக்குவழி, உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு முடிவுகட்டியது.
- ஏக்நாத் ஷிண்டே அணியை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டதன் மூலம், உத்தவ் தாக்கரேவுடனான அரசியல் கணக்கை பாஜக நேர்செய்துகொண்டது. ஷிண்டே உள்ளிட்ட சிவசேனை எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதிநீக்க விவகாரத்தில், சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் முடிவை அறிவிக்கலாம் எனும் நிலையில், அஜித் பவார் மூலம் அடுத்த அரசியல் சதிராட்டத்தை பாஜக தொடங்கியிருப்பதாகப் பேசப்படுகிறது.
- மாநிலத்தின் நன்மைக்காகவே பாஜக கூட்டணியில் இணைந்திருப்பதாக அஜித் பவார் கூறியிருக்கிறார். ஆனால், அரசியலில் அவரை வளர்த்தெடுத்த சரத் பவாரிடமிருந்து கட்சியைப் பறிக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். ஒரு சட்டமன்றக் காலம் முடிவதற்குள் வெவ்வேறு கூட்டணியில் இடம்பெற்று, மூன்றாவது முறையாகத் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றிருப்பது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் உச்சம். தேசியவாத காங்கிரஸில் நிலவும் குடும்ப அரசியலுக்கும் இவற்றில் பங்கிருப்பதை மறுத்து விட முடியாது.
- பாஜக கூட்டணியில் இணைந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியினரில் சிலர், மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்டு வருபவர்கள். எனவே, இந்த அரசியல் நகர்வு, மத்தியப் புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் பாஜக மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.
- இந்த விமர்சனத்தை எதிர்கொள்வதை பாஜகவால் தவிர்க்க முடியாது. மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றங்கள், அந்த மாநிலத்தைத் தாண்டி தேசிய அளவிலும் தாக்கம் செலுத்தக்கூடும். இன்னும் 10 மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், எதிர்க்கட்சிகள் இணைந்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஓர் அணியைக் கட்டமைக்க முயல்கின்றன. அதில் முக்கிய அங்கமான தேசியவாத காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு, அந்த முயற்சிகளுக்கு ஒரு பின்னடவை ஏற்படுத்தக்கூடும். பிற கட்சிகளிலும் இது போன்ற பிளவுகள் நிகழலாம் என்ற அச்ச உணர்வு எதிர்க்கட்சிகளிடம் உருவாகலாம்.
- அரசியலில் தூய்மைவாதம் பற்றிப் பேசப்படும் சூழலில், அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் மகாராஷ்டிரத்தில் அரங்கேறும் அரசியல் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட வேண்டும். அரசியல் தலைவர்கள் மக்களின் தீர்ப்பை உதாசீனம் செய்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நன்றி: தி இந்து (07 – 07 – 2023)