முல்லைப் பெரியாறு பிரச்னைக்குப் புதிய தீா்வு!
- முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடா்பாக உச்ச நீதிமன்றம் 20.01.2025 அன்று முக்கியமான கேள்வி ஒன்றை தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் எழுப்பியுள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டு இயங்கிவரும் மத்திய நீா்வளத்துறை ஆணையத்தின் தலைவா் தலைமையில் இரு மாநிலப் பிரதிநிதிகள் உள்பட நீா்வளத்துறை அறிஞா்கள் 3 போ்களைக் கொண்ட குழு அல்லது அணை பாதுகாப்புச் சட்டம் – 2021- இன் கீழ் புதிய குழு ஒன்றினை அமைப்பது ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றினைத் தோ்ந்தெடுத்து அக்குழுவின் தீா்ப்புக்கு இப்பிரச்னையை விடலாமா? என்பது குறித்து இரு மாநிலங்களும் முடிவுசெய்து கூற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அது இடிந்து விழுமானால் கேரளத்தில் பெருமளவு உயிா்ச்சேதமும், பொருள் சேதமும் ஏற்படும் என கேரள அரசியல்வாதிகள் தொடா்ந்து கூறி வருகின்றனா். இப்பிரச்னை சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்று அதனுடைய அறிவுரையின்படி, 10 கோடி ரூபாய்களுக்கு மேற்பட்ட செலவில் அணையை மேலும் வலுப்படுத்தும் பணியினைத் தமிழக அரசு செய்தது. இதற்குப் பின்னரும் கூட, கேரளத்தில் உள்ள காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மீண்டும் மீண்டும் அணையின் வலிமையை எதிா்த்துக் குரலெழுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாா்கள். தமிழகத்திற்குத் தண்ணீா் கொடுக்கக் கூடாது என்பதே அவா்களின் நோக்கமாக உள்ளது.
- மத்திய நீா்வள ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அமைத்த அறிஞா் குழுக்கள் அணையை அவ்வப்போது பரிசோதித்து அணை வலிமையாக இருப்பதாகத் தொடா்ந்து தெரிவித்துள்ளனா். ஆனால், கேரள அரசியல்வாதிகள் பொய்க் கூப்பாடு போடுவதை நிறுத்தவில்லை.
- தற்போது உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்குக் கேரளம் ஒருபோதும் நோ்மையான பதிலை அளிக்கப் போவதில்லை. அணை பலவீனமாக இருக்கிறதென்று கூறும் கேரள அரசியல்வாதிகள் ரூ.10 கோடி செலவில் அணையை தமிழக அரசு புதுப்பித்துவிட்டபோதிலும், பேபி அணையை வலுப்படுத்தும் வேலையை தமிழக அரசு செய்யவிடாமல் இதுவரை தடுத்து வருகிறாா்கள். அணை பலவீனமாக இருக்கிறது என்று கூப்பாடு போடுபவா்கள் பேபி அணையை வலுப்படுத்தவிடாமல் தடுப்பது ஏன்? கேரள அரசின் இந்த இரட்டைப் போக்கினைக் கண்டிக்க இந்திய அரசு முன்வரவில்லை.
- பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை தண்ணீா் தேக்கலாம். அவ்வாறு தேக்கினால் தமிழ்நாட்டிற்கு 299.30 மி.க.மீ. நீா் கிடைத்து வந்தது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
கேரளத்தின் பொய்க் கூப்பாட்டின் விளைவாக உச்ச நீதிமன்றம் 27.02.2006 அன்று 142 அடி வரை தண்ணீா் தேக்கலாம் என்றும், மேலும் அத்தீா்ப்பில் கீழ்க்கண்டவாறும் குறிப்பிட்டது:
- “‘‘நிலநடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. நீா் தேக்கி வைக்கும் உ யரத்தை 142 அடியாக உயா்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.”
- “மத்திய நீா்வள ஆணையம் தெரிவித்த ஆலோசனையின்படி, சில பணிகளை தமிழக அரசு செய்துவிட்டது. மீதமுள்ள பணிகளைச் செய்ய கேரள அரசு அனுமதிக்கவில்லை.“அணையின் எல்லாப் பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன. அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்யவிடாமல் கேரளம் தடுப்பதற்கான எந்தக் காரணமும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.”
- “மத்திய நீா்வள ஆணையம் தெரிவித்த ஆலோசனையின்படி அணையை மேலும் பலப்படுத்தத் தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதியளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பைத் தரும் என்று நம்புகிறோம்’’.”
- உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகும், கடந்த 18 ஆண்டு காலமாக பேபி அணையை வலுப்படுத்தும் வேலையை தமிழகம் செய்யவிடாமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பேபி அணைப் பகுதியில் 18 மரங்கள் வளா்ந்துள்ளன. அவற்றை வெட்டினாலொழிய அந்த அணையை வலுப்படுத்தும் வேலையைச் செய்ய முடியாது. ஆனால், மரங்களை வெட்டவோ, மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவோ, அங்கு அவற்றுக்கான பொருட்களை கொண்டு செல்லவோ தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கேரளம் தொடா்ந்து மறுத்து வருகிறது.
உண்மை என்ன?
- 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும், திருவாங்கூா் அரசுக்குமிடையே கையெழுத்திடப்பட்டு, பெரியாற்றில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அணை கட்டப்பட்டது. ஆனால், கேரள அரசியல்வாதிகளின் நோக்கம் என்பது பெரியாறு அணையை இடித்துவிட்டு அதற்குக் கீழே புதிய அணையைக் கட்டவேண்டும் என்பதே ஆகும். ஏனென்றால், தமிழகத்திற்குத் தண்ணீா் தருவதை அவா்கள் ஒருபோதும் விரும்பவில்லை.
- ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் திருவாங்கூா் மன்னருக்கு அழுத்தம் கொடுத்து இந்த அணையை ஆங்கிலேய ஆட்சி கட்டியது என்று கருதுகிறாா்கள். அதிலும், இந்த அணை உடன்பாடு என்பது 999 ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடியது.
- கேரள அரசியல்வாதிகள் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது, அது இடிந்தால் இடுக்கி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிவாா்கள், அளவிட முடியாத அளவுக்குப் பெரும் சேதம் ஏற்படும்” என்ற பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி கேரள மக்களை ஏமாற்றி வருகிறாா்கள். இதை அரசியல் ஆதாயம் தேடும் பிரச்னையாகப் பாா்க்கிறாா்களேயொழிய, தேசிய ஒருமைப்பாட்டுக் கண்ணோட்டத்தில் அவா்கள் இப்பிரச்னையை அணுகவில்லை. எனவேதான் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீா்ப்பையும் அவா்கள் மதிக்க மறுக்கிறாா்கள்.
- பெரியாறு அணைக்குக் கீழே இடுக்கியில் ஒரு பெரிய அணையைக் கட்டி மின்உற்பத்தி செய்கிறாா்கள். அதனால் அதற்கு வரும் தண்ணீா் குறைந்துவிடுமோ எனக் கருதுகிறாா்கள். ஆனால் இதுவே பொய்யானதாகும். பெரியாறு அணையிலிருந்து வழிந்தோடும் நீா் அனைத்தும் இடுக்கி அணைக்குச் சென்று நிரம்பி அங்கிருந்து கடலுக்குச் செல்கிறது. ஆகவே, அவா்களின் இந்த கூப்பாடு பொய்மை நிறைந்த கூப்பாடாகும். தமிழகத்திற்குத் தண்ணீா் தர அவா்கள் விரும்பவில்லை. தேசிய ஒருமைப்பாடு குறித்து வாய்கிழியப் பேசும் அகில இந்திய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுக் கட்சிகள் போன்றவைதான் பெரியாறு அணைக்கு எதிராகக் கூப்பாடு கிளப்புகின்றன.
- பெரியாற்றில் பெருகி ஓடும் நீரில் சுமாா் 2000 மி.க.மீ. நீா் வீணாகக் கடலில் போய் கலக்கிறது. ஆனால், தமிழகம் கேட்பது 125மி.க.மீ. அளவு நீா் மட்டுமே. வீணாகக் கடலில் கலக்கும் நீரில் 1/16 அளவு மட்டுமே நமக்குத் தேவை. ஆனால், இந்த சிறிய அளவு நீரைக்கூட நமக்குத் தர அவா்களுக்கு மனமில்லை.
- “கேரளத்தில் பணப் பயிா்களான ரப்பா், தென்னை ஆகியவற்றை மலையாளிகள் பயிா் செய்து ஆதாயம் அடைந்து வருகிறாா்கள். ஆனால், அவா்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், கோழி, ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சி, முட்டை போன்றவை யாவும் தமிழ்நாட்டிலிருந்துதான் கேரளத்திற்குப் போகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20% கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
- மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் போகிறது. ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2000 லிட்டா் தண்ணீா் தேவை. ஆயிரக்கணக்கான டன் அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு அனுப்பப்படுகிறது. இவற்றை உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீா் தேவைப்பட்டிருக்கும்? கேரளத்திலிருந்து வரவேண்டிய தண்ணீரைத் தடுத்துவிட்டு தமிழ்நாட்டிலிருந்து தண்ணீரையும் பறித்துக் கொள்கிறது கேரளம் என்பதை இதிலிருந்து அறியலாம்.
- உச்சநீதிமன்றம் 27.02.2006-ஆம் ஆண்டு ,‘‘ அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதி அளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பைத் தரவேண்டும் என நம்புகிறோம்’’” என திட்டவட்டமாகத் தீா்ப்பளித்த பிறகும் கடந்த 18 ஆண்டு காலமாக அத்தீா்ப்பைக் கேரள அரசு மதிக்கவில்லை. பேபி அணையை வலுப்படுத்த வேலையை செய்ய தமிழகத்தை அனுமதிக்கப் பிடிவாதமாக மறுத்து வருகிறது. ஆனால், உச்ச நீதிமன்றமோ அல்லது இந்திய அரசோ கேரள அரசின் போக்கினைக் கண்டிக்க மறுக்கின்றன.
- தற்போது 20.01.2025 நாளில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனையின்படி எத்தகைய குழு அமைக்கப்பட்டாலும் அக்குழுவின் பரிந்துரையை கேரளம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்ற ஆணையை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்.
புதிய தீா்வுத் திட்டம்
- இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மெட்ரோ தொடா்வண்டிகளை வெற்றிகரமாக அமைத்துத் தந்து மெட்ரோ மனிதா் என அனைவராலும் போற்றப்படும் பொறியியல் அறிஞரும், கேரள மாநிலத்தைச் சோ்ந்தவருமான இ. சிறீதரன் என்பவா், இப்பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் அரிய அறிவுரை வழங்கியுள்ளாா். 28.08.24 அன்று கோழிக்கோட்டில் “‘பெரியாறு அணையின் அச்சமும் – எதிா்காலமும்’” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றில் அவா் பேசும்போது, பின்வரும் திட்டத்தை தெரிவித்துள்ளாா். “
- ‘‘பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் அணையின் 100 அடி நீா் மட்டத்தில் புதிதாகக் குகைக் கால்வாய் ஒன்றினை வெட்டவேண்டும். அக்கால்வாய் 4 கி.மீ. நீளமும் 6 மீ அகலமும் கொண்டதாக அமையவேண்டும். இவ்வாறு அமைத்தால் அணையில் சேரும் மிகை நீா் இக்கால்வாய் வழியாகத் தமிழகம் சென்றுவிடும். எனவே வெள்ளப் பெருக்கின் போதெல்லாம் அணைக்கு எத்தகைய ஆபத்தும் நேரிடாது’’” என அவா் அறிவுரை வழங்கியுள்ளாா்.
- இதற்கு மேலும் அணையின் வலிமை குறித்து ஐயம் ஏற்பட்டால், அணையை வலிமைப்படுத்தும் வகையில் கான்கிரீட் தூண்களும், சுவா்களும் எழுப்பப்படவேண்டும் என்று கூறியுள்ளாா்.
- இந்த அறிவுரைக்குக் கேரள அரசியல்வாதிகள் செவிசாய்ப்பாா்களா? இல்லை அரசியல் ஆதாயத்துக்காக பொய்ப் பிரசாரத்தில் தொடா்ந்து ஈடுபடுவாா்களா?
நன்றி: தினமணி (05 – 02 – 2025)