- முல்லை பெரியாறு ஆற்றில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணையை இடித்துவிட்டுப் புதிய அணை கட்டுவதற்காகச் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது கண்டிக்கத்தக்கது.
- இந்த விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிசீலனைக்காகப் பட்டியலிட்டதும் ஆட்சேபத்துக்குரியது. தற்போது அந்தக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற முயற்சிகள் இரு தரப்புக்கும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை.
- முல்லை பெரியாறில் உள்ள பழைய அணை வலுவிழந்துவிட்டதாகக் கூறி, புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்வது கேரளத்தின் வாடிக்கையான கூற்றுகளில் ஒன்று. அவ்வப்போது இதுகுறித்த சர்ச்சைகளை உருவாக்கும் கேரளம், தன்னுடைய நிலைப்பாட்டை இப்போது மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது.
- பழைய அணையை முழுமையாக இடித்துவிட்டு ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டும் நோக்கத்தைக் கேரளம் வெளிப்படுத்தியுள்ளது. இதற்குத் தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. கேரளத்தின் கோரிக்கையைப் பரிசீலிக்கக் கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல் வனத் துறை அமைச்சருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரளத்தின் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
- முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதை உச்ச நீதிமன்றம் பல்வேறு தருணங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் அணையை ஆய்வுசெய்து, அணை பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியது.
- இந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்றுத்தான் முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசமைப்பு அமர்வு 2014இல் தீர்ப்பு வழங்கியது. அப்போதே, கேரள அரசு அணை கட்ட விரும்பினால், அது இரண்டு மாநிலங்களின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
- எனவே, புதிய அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி மட்டுமல்ல, மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியும் கேரளத்துக்குத் தேவை. அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு தமிழ்நாடு-கேரளம் இடையே பரஸ்பரம் ஒப்பந்தம் அவசியம். 2018இல் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் கேரளத்துக்கு இதை ஒரு நிபந்தனையாக விதித்தது.
- ஆனால், அதை மறந்துவிட்டதுபோலத் தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பட்டியலிட்டது துரதிர்ஷ்டவசமானது. தற்போது அந்தக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
- புதிய அணையைக் கட்ட கேரள அரசு முயல்வது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, முல்லை பெரியாறில் பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக உள்ளது.
- இந்த விஷயத்தில் கேரள அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டுவதை விட்டுவிட்டு, பேபி அணையைப் பராமரிக்கத் தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். எதிர்காலத்தில் முல்லை பெரியாறில் புதிய அணை குறித்த ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இவ்விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 05 – 2024)