- அரசியல் கேலிச்சித்திர உலகில் மிக முக்கியமான வராகப் போற்றப்பட்ட அஜித் நைனான் (68), செப்டம்பர் 8 அன்று மைசூருவில் காலமானார். அவரது மறைவு ஊடக உலகிலும் அரசியல் விமர்சனக் களத்திலும் பெரும் வெற்றி டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- பள்ளி விடுதியில் தங்கிப் படித்த அவர், பெற்றோரைப் பிரிந்த ஏக்கத்திலிருந்து விடுபட ஓவியம் வரைவதில் கவனத்தைத் திருப்பினார். ‘பஞ்ச்’, ‘நியூ யார்க்கர்’ இதழ்களில் வெளியாகும் கேலிச்சித்திரங்களை ரசிக்கத் தொடங்கினார். காமிக்ஸ் புத்தகங்கள், கார்ட்டூன் திரைப்படங்களால் கவரப்பட்டார். ஜேம்ஸ் தர்பர், ஆர்னால்டு ரோத், மரியோ மிராண்டா போன்ற கார்ட்டூனிஸ்ட்களின் படைப்புகள் அவரிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. நைனானின் உறவினர் அபு ஆபிரஹாமும் பிரபல கார்ட்டூனிஸ்ட்தான். அவரிடமிருந்து கேலிச்சித்திரக் கலையின் சூட்சுமங்களைக் கிரகித்துக்கொண்டார். 1968இல் நைனான் வரைந்த கேலிச்சித்திரம் முதன்முதலாக ‘ஷங்கர்ஸ் வீக்லி’யில் வெளியானது.
- 1972-1977 காலகட்டத்தில் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில், அரசியல் அறிவியல் படித்தார். சென்னையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றார். ‘இந்தியா டுடே’, ‘பிசினஸ் டுடே’, ‘டார்கெட்’ இதழ்களுக்காக அவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் புகழ்பெற்றுத் தந்தன. 1992இல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாளில் சேர்ந்தார். பின்னர் ‘அவுட்லுக்’ இதழில் பணியாற்றினார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தித்தாளில் அவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் அரசியல் உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. காமிக்ஸ் தொடராக அவர் வரைந்த ‘டிடெக்டிவ் மூச்வாலா’ மிகவும் பிரபலம்.
- அரசியல் தலைவர்களை உருவகமாக வெவ்வேறு வடிவங்களில் வரைவதில் நைனான் கைக்கொண்ட நுணுக்கங்களும் அவரது வாசகங்களின் சிலேடையும் பேசப்பட்டவை. ஆண்கள் மத்தியில், பசுக்களின் தலைகளைப் பொருத்திக்கொண்டு ‘பாதுகாப்பாக’ நடந்துசெல்லும் பெண்கள் குறித்த அவரது கேலிச்சித்திரம் மிக முக்கியமானது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகக் கேலிச்சித்திரம் அமைந்துவிட்டதாக எதிர்ப்புகள் எழுந்தால் மன்னிப்புக் கேட்கவும் அவர் தயங்கியதில்லை. அந்தப் பொறுப்புணர்வு அவரைத் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கவைத்தது.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 09 – 2023)