TNPSC Thervupettagam

மூச்சுத் திணறவைக்கும் மூட நம்பிக்கைகள்

July 23 , 2024 173 days 262 0
  • மரித்துப்போன 15 வயதுப் பெண்ணை, ‘மீண்டும் உயிரோடு கொண்டுவந்து நிறுத்துவேன்’ என்று சொல்லி, அவரது சடலத்தைத் தனது ஆட்கள் உதவியோடு எடுத்துக்கொண்டு போனவர், காவல் துறையால் அதற்காகக் கைது செய்யப்படுகிறார். ஆனால், அதற்குப் பின்னும் அந்த ஊரே அவரைக் கொண்டாடுகிறது. அப்படியான ஒருவர் குறித்த ‘சாமியார்’ என்னும் பிம்பக் கட்டமைப்பு, ஜூலை 2 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரை நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் சவக்கிடங்காக மாற்றிவிட்டது.
  • ஹாத்ரஸ் நகர நெரிசல் நிகழ்வில் குழந்தைகள் உள்ளிட்ட 121 பேர் பலி என்பது அரசு சொல்லும் கணக்கு என்றாலும், ‘முந்நூறு சடலங்களுக்கு மேல் எண்ணிப் பார்த்தேன்’ என உள்ளூர் மனிதர் ஒருவர் கூறியது ‘தி இந்து’ நாளேட்டில் பதிவாகியுள்ளது. ஒரு பேருந்தின் இருக்கைகள் எல்லாம் சடலங்களால் நிரப்பப்பட்டு இருக்கும் கோரமான ஒரு காட்சியை இதற்குமுன் நாளேடுகளில் பார்த்த நினைவில்லை.

மூன்று பெண் சடலங்கள்:

  • வினோத் என்பவர் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சார்ந்த மூன்று பெண்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் கொடுமைக்கு உள்ளானார். தனது உயிருக்கும் உயிரான மனுஷிகளின் சடலங்கள் அவருக்கு ஓரிடத்திலேயே உடனே கிடைத்துவிடவும் இல்லை. மகள் பூமி அலிகரில் கிடைத்தார். ஹாத்ரஸ் மாவட்டத்திலேயே இருந்தது மனைவி ராஜகுமாரியின் சடலம். அன்புத் தாய் ஜெய்மந்தியின் சடலம் கிடைத்தது ஆக்ரா மருத்துவமனை சவக் கிடங்கில்.
  • ஒரு சதிச்செயல்தான் இந்த அவலத்திற்குக் காரணம் என்று செய்தி பரப்பப்படுகிறது. யாரைக் காணப் பெருங்கூட்டம் அலைமோதியதோ அந்த பாபாவின் பெயரை அதிகார மட்டத்தில் யாரும் உச்சரிக்கக் கூடத் தயங்குவதும், முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயரே இணைக்கப்படாததும் இன்னும் வேதனை.
  • தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்பட்ட பாபா மூன்றாம் நாள் தானே வெளிப்பட்டு, நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சி அடைவதாகவும், மரித்துப்போன உயிர்களுக்கு நல்ல கதி கிடைக்கப் பிரார்த்தனை செய்வதாகவும், காவல் துறையின் மீதும் அரசின் மீதும் பெருத்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் பேட்டி கொடுக்கிறார்.
  • ஏதோ அந்த நிகழ்வுக்கும் தனக்கும் கிஞ்சித்தும் தொடர்பே அற்றவர்போல் ஊடகங்களிடம் சொல்லிவிட்டு, அடுத்த வேலைக்கு இப்படியான ஒரு நபர் போய்க்கொண்டிருப்பது ஒரு ஜனநாயகத்தில் எப்படிச் சாத்தியம் ஆகிறது? இன்னும் ஒருபடி மேலே போய், “விதியை யாராலும் மாற்ற முடியாது. அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்” என்று வேதாந்தம் வேறு பேசியிருக்கிறார் பாபா.
  • இப்படியான மனிதரின் காலடி மண்ணையும், வாகனத்தின் டயரடி மண்ணையும்கூடத் தொட்டுத் தலையில் போட்டுக்கொள்ள ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு போய் நெரிசலில் சிக்கிக்கொண்ட மக்கள், அந்த மூடநம்பிக்கையில்தான் மூச்சுத் திணறி மாண்டு போயிருக்கின்றனர்.

விடையில்லாக் கேள்விகள்:

  • அவசரச் சூழலில் வெளியேறுவதற்கு ஒற்றை வாசல் மட்டுமே இருக்கும் இடத்தில் 80 ஆயிரம் பேர் சத்சங்கத்தில் கூடுவதற்கு அனுமதி அளித்தது எப்படி எனத் தெரியவில்லை. சொல்லப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக ஒன்றரை லட்சம் பேர் அங்கே கூடியதை அறிந்த மாத்திரத்தில் போலி பாபா ஓசைப்படாமல், விரைந்து அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தார்.
  • தங்களுக்கு நல்லருள் பாலிக்க வேண்டிய ‘கடவுள் அவதாரம்’ அங்கிருந்து அகன்று செல்வதைக் கண்டு கூடியிருந்த மக்கள் திரள், அவரை நோக்கி ஓடோடிப் போக எத்தனித்த நேரத்தில் காவல் துறை எங்கிருந்தது?
  • ஆக்ரா நகரில் ‘இறந்த பெண்ணை உயிர்ப்பிப்பேன்’ என்கிற நாடகத்துக்காக மார்ச் 2000இல் சூரஜ் பால் கைது செய்யப்பட்டபோது, அங்கே காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றிய தேஜ்வீர் சிங் தான் ஊடகங்களுக்கு அந்தச் செய்தியை இப்போது பகிர்ந்துகொண்டவர்.
  • பின்னர் சூரஜ் பால் காவல் துறைப் பணியை உதறிவிட்டு, பாபாவாக அவதாரம் எடுத்தார். அப்போதே அவரது அடியாட்கள் காவல் துறையினர் மீது கல்லெறிந்து ரகளை செய்திருக்கின்றனர். தன்னை ‘போலே பாபா’ என்று அறிவித்துக்கொண்ட சூரஜ் பால், நாராயணன் ஹரி சாகர் என்ற பெயரிலும் அறியப்படலானார்.
  • அவரது தலையைச் சுற்றி ஒளிவட்டம் தெரிவதாகவும் அவரிடம் அபார தெய்விக சக்திகள் துலங்குவதாகவும் ஊர் ஊராகப் போய்ச் சொல்வதற்கு ஆட்கள் உருவாகிக்கொண்டே இருந்திருக்கின்றனர். பாபாவின் தரிசனத்துக்காகத் தவம் கிடக்க ஆரம்பித்தனர் பெண்கள். ஹாத்ரஸ் நெரிசல் மரணத்தில் பெண்களும் குழந்தைகளுமே மாண்டு போயிருக்கின்றனர்.

ஒப்புக்கொடுக்கும் எளிய மக்கள்:

  • வறுமை, பட்டினி, வாழ்க்கைப் பாடுகளில், அன்றாடப் போராட்டங்களின் இருள்பாதையில் உழலும் மனிதர்களுக்கு விழிப்புணர்வு வெளிச்சம் மறைக்கப்பட்டுவிடுகிறபோது, இதுபோன்ற ‘பாபா’க்களின் காலில் விழுகின்றனர். குற்ற உணர்வைத் தூண்டும் பாபாக்களிடம் எளிய மனிதர்கள் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுகின்றனர்.
  • ‘உன் பிரச்சினைக்கு நீதான் பொறுப்பு’ என்கிற சாட்டையடியை மனதார ஏற்றுக்கொண்டு, கண்ணீர் பெருக்கித் தங்களது பாவங்களை அதில் கழுவிக்கொள்ளும் உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்படுகின்றனர். குடும்பங்களில் தங்களது இடையறாத சலிப்பற்ற உழைப்புக்கு எந்த மதிப்பும் பெறாத பெண்கள், இந்தச் சாமியார்கள் தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தும் விதத்தைக் கண்டு தங்களுடைய விடியலின் வாசல் திறந்ததுபோல் உணர்கின்றனர். வெற்றிகரமான ஆன்மிக வர்த்தகம் நடத்தும் எந்தக் கடவுள் அவதாரமும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதைக் காண முடியும்.
  • உங்களது வாழ்க்கைக் கேள்விகளுக்கான விடையை நீங்கள் ஏன் சத்சங்கங்களில் போய்த் தேடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஹாத்ரஸ் நெரிசலில் கடும் காயங்களோடு தப்பிப் பிழைத்த பெண்களில் ஒருவர் சொன்ன பதில் அதிர வைக்கிறது. ‘ஆண்களுக்குப் புகலிடம் எத்தனையோ இருக்கிறது.
  • நண்பர்களோடு எங்கும் அலைந்து திரிய முடியும். சாராயத்தில் தங்கள் கவலைகளை மூழ்கடித்துக் கொண்டுவிட முடியும். எங்களைப் போன்ற பெண்கள் வேறு எங்கு தான் போய் எங்களது கஷ்டங்களைக் கொட்டித் தீர்க்க முடியும்?’ என்று கேட்கிறார் அவர்.

நோய் முதல்நாடி:

  • 21ஆம் நூற்றாண்டு, நவீனச் சமூகம், வல்லரசுக் கனவு என்று ஓர் இந்தியா இங்கே கற்பிதம் செய்யப்படுகிறது. ஆனால், யதார்த்த இந்தியச் சமூகம் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் புதுமையின் வேகப் பாய்ச்சல். மறுபக்கம் கால்களைப் பிணைத்திருக்கும் பழமைவாதச் சிந்தனைச் சங்கிலிகளின் ஓயாத ஓசை.
  • இந்தச் சங்கிலியைத் தகர்த்துச் சிந்தனைகளுக்கு விடுதலை கிடைக்கச் செய்யத்தான் நரேந்திர தபோல்கர்கள் ஓயாது இயங்கிக்கொண்டே இருந்தனர். கௌரி லங்கேஷ்கள் எழுதிக்கொண்டே இருந்தனர். சப்தர் ஹாஷ்மிகள் நாடகங்கள் இயக்கிக்கொண்டிருந்தனர். இவர்கள் அமைதியாக்கப்பட்டனர். வன்முறை ஆயுதங்களால் பறிக்கப்பட்டன அவர்களது உயிர்கள்.
  • பெண்ணடிமைச் சிந்தனை, உழைப்புச் சுரண்டல், மூடநம்பிக்கைகளுக்கு ஆராதனை, அநீதிக்கு எதிரான அதிகார மட்டத்தின் மௌனம் எல்லாமே இந்த வன்முறை ஆயுதங்களுக்குக் கூர் தீட்டிக் கொடுக்கிறது. நோயைக் குணப்படுத்த நோய் முதல் நாடிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஹாத்ரஸில் மறைந்த மக்களுக்கு இந்தச் சமூகம் அஞ்சலி தெரிவித்துவிட்டு நகர்வது அவர்களுக்கான நீதியாகாது.
  • விளிம்புநிலை மக்களுக்கு உரிய வாழ்வாதாரம், மருத்துவம், சுகாதாரம், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குத் தரமான இலவசக் கல்வி, வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பிறப்பை நொந்துகொள்ளவும், வாழ்க்கையைக் கசந்துகொள்ளவுமாகப் பரிதவிக்கும் மக்களுக்கான விடுதலையை மந்திர தந்திரங்கள் தந்துவிடாது... நிம்மதியான வாழ்க்கைதான் கொடுக்கும் என்பது அவர்களுக்குப் புலப்படத் தொடங்கினாலே போதும், போலிகள் காணாமல் போய்விடுவார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories