TNPSC Thervupettagam

மூச்சுத் திணறுகிறதே...!| தில்லியில் நிலவும் காற்று மாசு

November 4 , 2019 1902 days 1295 0
  • தீபாவளியைத் தொடர்ந்து தலைநகர் தில்லி புகைக்கூடமாகக் காட்சி அளிக்கிறது. காற்று மாசு பாதிப்பால் தலைநகர் வாழ் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நவம்பர் 5-ஆம் தேதி வரை தில்லியிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
  • அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எல்லா தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்திக் கொண்டிருக்கின்றன. தலைநகர் தில்லியில் கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
  • காலம்காலமாக, தில்லியைச் சுற்றியுள்ள உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் அறுவடை முடிந்த பிறகு வயல்வெளியில் இருக்கும் எஞ்சிய கரும்பு, சோளம், நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களின் கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம்.
  • இதிலிருந்து வெளியாகும் புகைதான் தில்லியின் காற்று மாசுக்கு முக்கியமான காரணமாக முதல்வர் கேஜரிவால் உள்ளிட்ட பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அறிக்கை

  • கடந்த புதன்கிழமை வெளியாகியிருக்கும் ஓர் அறிக்கையின்படி, தில்லியின் சுற்றுச்சூழல் மாசுக்கு வைக்கோல் எரித்தல் 35% காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
  • பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகள், அறுவடைக்குப் பிறகான பயிர்க் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்குகின்றன. உழுவதற்கான டிராக்டர்களைப் போலல்லாமல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படும் பயிர்க் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பது வியப்பை அளிக்கவில்லை.
  • மேலும், குளிர்காலம் தொடங்கும் வேளையில் பயிர்க் கழிவுகளை எரிப்பது என்பது அந்த மாநில விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கும் வழிமுறை என்பதால், அது மட்டுமே தில்லியின் காற்று மாசுக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது.
  • பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியிருப்பதுபோல, தில்லியின் காற்று மாசுக்குக் கட்டுமானப் பணிகளும், தொழில்மயமாதலும், முறைப்படுத்தப்படாத போக்குவரத்தும்தான் முக்கியமான காரணங்கள் என்பதை முற்றிலுமாக நிராகரித்துவிட இயலாது.

மாசுகள்

  • சுற்றுச்சூழல் மாசு என்பது, தில்லி தொடர்பான பிரச்னை மட்டுமே என்று நாம் கருதினால் மிகமிகத் தவறு. விரைவிலேயே இந்தியாவிலுள்ள எல்லா நகரங்களும் தில்லியைப் போல, காற்று மாசுக் கூண்டுகளாக மாறி இயல்பாக மூச்சு விட முடியாத சூழல் ஏற்படக் கூடும்.
     கடந்த 20 ஆண்டுகளாக நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் குறைந்துவருவது குறித்து கவலை எழுப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மக்களவையிலும் உறுப்பினர்கள் காற்று மாசு தொடர்பான மரணங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
  • 1998-இல் இருந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் தொடங்கி, அதன் பிறகு பிரதமர்களாக இருந்த வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆட்சிகளிலெல்லாம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு, "சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் நோய்கள், மரணங்கள் குறித்த தெளிவான விவரங்கள் இல்லை' என்கிற பதில்தான் இன்று வரை அரசுத் தரப்பிலிருந்து தரப்பட்டு வருகிறது.
  • சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதன் விளைவால் ஏற்பட்டிருக்கும் நன்மைகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

39 நடவடிக்கைகள்

  • 2015 டிசம்பர் 30 அன்று, இதேபோல தில்லியில் புகை மூட்டம் சூழ்ந்து ஏழை - பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் மூச்சுத் திணறியபோது, சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜாவடேகர் 39 நடவடிக்கைகளை அறிவித்தார். குப்பைகளை எரிப்பது, கட்டுமானக் கழிவுகளை நிர்வகிப்பது, பொது போக்குவரத்தை முறைப்படுத்துவது என்று தொடங்கி பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2017-இல் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. வழக்கம் போலத் தலைநகரம் புகை மாசால் சூழப்பட்டது.
  • அந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவைவிட 15 மடங்கு அதிகமான காற்று மாசு காணப்பட்டது. இலங்கையுடன் நடக்க இருந்த கிரிக்கெட் ஆட்டமும் முடங்கியது.
  • இப்போது 2019-லும் அதே நிலைமை நீடிக்கிறது. 2015-ஆம் ஆண்டைப் போலவே இப்போது மீண்டும் பிரகாஷ் ஜாவடேகர்தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதனால் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. ஆபத்தான நிலைமையில் தலைநகர் தில்லி தொடர்கிறது.
  • தில்லி மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள 15 நகரங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காற்று மாசு பல மடங்கு அதிகம் காணப்படும் நகரங்களாக இருக்கின்றன. இந்தியாவின் 124 நகரங்களில் 8 நகரங்கள்தான் சுவாசிக்க பாதுகாப்பான பகுதிகள் 

காரணிகள்

  • காற்று மாசுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் மிக முக்கியமான காரணிகள் இரண்டு.முதலாவது காரணம், கடுமையாக அதிகரித்திருக்கும் வாகன எண்ணிக்கை. மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக வங்கிகள் கடனை வாரி வழங்குவதன் மூலம், பொதுப் போக்குவரத்து வசதி புறக்கணிக்கப்படுகிறது.
  • இரண்டாவது காரணம், வனங்கள் அழிக்கப்படுவது. மும்பை ஆரே பகுதியில் அண்மையில் மரங்கள் வெட்டப்பட்டது போல, இந்தியா முழுவதும் வனங்கள் அழிக்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக மரக் கன்றுகள் நடுவதால் பயனில்லை.
  • வளர்ச்சியாலும், தொழில்நுட்பத்தாலும் கிடைக்கும் வாழ்க்கை வசதிகள் என்ன இருந்தென்ன, மூச்சுத் திணறுகிறதே...!

நன்றி: தினமணி (04-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories