TNPSC Thervupettagam

மூதறிஞரும் பேரறிஞரும்

December 24 , 2023 392 days 308 0
  • மூதறிஞர் என்று திராவிட இயக்கப் பாணியில் அழைக்கப்பட்ட சி.ராஜகோபாலாச்சாரிக்கும் முன்னதாக அவர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட கட்டாய இந்தித் திட்டத்தை எதிர்த்துக் களமிறங்கி, அதனூடாக வளர்ந்து மாபெரும் தலைவராக முகிழ்த்த பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான உறவு சிக்கலான ஒன்று. ஆனாலும்கூட, அவர்கள் இணைவதற்கான ஓர் அரசியல் சூழல், புறத்தில் மட்டுமல்லாமல் அவர்களின் அகங்களிலும் கொஞ்சம் இருந்திருக்கத்தான் வேண்டும். 1949இல் தொடங்கிய திமுகவின் முதல் மிகப் பெரிய போராட்டக் களம் என்பது 1953இல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட மும்முனைப் போராட்டம்தான்.
  • அந்தப் போராட்டமே திமுகவின் ஏவுதளம். அங்கே பிரதான எதிரி ராஜாஜி. அண்ணாவும் அவரது கட்சியினரும் சுழன்றடித்துப் பணியாற்றினர். ராஜாஜியின் பல திட்டங்களையும் காங்கிரஸின் போக்கையும் எதிர்த்துப் போராடிவந்த அவர்களுடைய சக்திவாய்ந்த போராட்டங்களில் ஒன்றாக அமைந்ததுகுலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான போராட்டம். தமிழ்நாட்டின் தீர்மானகரமான சக்தியாக திமுகவை இது உருவாக்கியது.
  • தேர்தல் சார்ந்த முடிவுகளே இந்த உறவின் மையம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. காங்கிரஸை எதிர்த்துத் தான் ஒரு சாலையிலும் ராஜாஜி மற்றொரு சாலையிலுமாகப் பயணித்துவந்தோம் என்றும் இப்போது ஒரு புள்ளியில் சந்தித்திருக்கிறோம், இனி இணைந்து ஒரே சாலையில் பயணிப்போம் என்றும் 1958இல் கூறிய அண்ணா, ‘‘தங்கள் நட்பு மற்றவர்கள் விமர்சிப்பதுபோல கூடா நட்பு அல்ல, மாறாகத் தேடா நட்புஎன்று வர்ணித்தார். ராஜாஜியின் வேறு ஒரு பரிமாணம் அண்ணாவுடனான இணக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தென்னகத்தின் நலன் என்பதே அது. இந்திய தேசியக் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகவும் இருந்திருந்தாலும், ராஜாஜி வடஇந்திய ஆதிக்கத்தை நன்கு புரிந்துகொண்டிருந்தவர்.
  • இதில் இரு பரிமாணங்கள் இருந்தன. காங்கிரஸ் கட்சி, அதன் ஆட்சியில் இருந்துவந்த வடஇந்திய ஆதிக்கம் முதலாவது. இது கட்சியில் அவரை ஓரங்கட்டியது. இரண்டாவதாக, வடஇந்திய - தென்னிந்திய பிராமணர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி. இந்த இரண்டையும் நேருக்கு நேராக எதிர்கொண்டவரான ராஜாஜி, ஏதோ ஒருவிதத்தில் பெரியார், அண்ணாவின் திராவிட நாட்டுக் கனவுகளைச் சற்றே பொருட்படுத்தக் கூடியவராகவே இருந்தார். அதனால்தான், 1947 ஜூனில் ராஜாஜி உதவியோடு தங்கள் தனி திராவிட நாடு கனவு நிறைவேற வாய்ப்பிருக்கிறது என்று தந்தை பெரியாரேநம்ப முடியாதஅந்த ஆசையை வெளிப்படுத்தினார். ஆட்சி மொழி விவகாரத்தில் ராஜாஜியின் மனமாற்றம் ஊர் அறிந்தது.
  • ஆனால், அந்த மனமாற்றம் என்பது காலத்தின் கட்டாயமாக எப்படி உருவானது என்பதையும் பார்க்க வேண்டும். 1960களில் ராஜாஜி ஆங்கிலமே இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் இணைப்பு மொழியாகவும் இருக்க வேண்டும்; இந்தி அல்ல என்ற முடிவுக்கு வந்ததற்குப் பின்னால், 1947க்குப் பின் உருவான அனைத்திந்திய நிர்வாகக் கட்டமைப்பில் தென்னிந்தியர்களின் நலன் தொடர்பில் அவருக்கு இருந்த கவலையும் மிக முக்கியமானது. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்கிற நிலை உருவாகுமானால் அது தமிழ்நாட்டின் அல்லது தென்னிந்தியாவின் மக்கள் அனைவரையுமே பாதிக்கும் என்பதை முதலில் நன்கு புரிந்துகொண்டவர் ராஜாஜிதான். 1958இல் பெரியார், ராஜாஜி, அண்ணா ஆகியோர் இவ்விஷயத்தில் ஒன்றுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தினர்.
  • இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாகக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்கிற கருத்தை 1960களில்கூட ராஜாஜியின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினார்கள். ‘இந்தி தேசிய மொழியாக இருக்கலாம். ஏனென்றால், அது இந்தியத்துவத்துக்குத் தேவை. ஆனால், அது மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க முடியாது. ஏனென்றால், அது தென்னிந்தியாவின் நலனுக்கு எதிரானது.’ ராஜாஜியின் இந்த நிலைப்பாடுதான் அறுபதுகளில் அண்ணாவையும் அவரையும் களத்தில் ஓர் அணியாக ஆக்கியது. அதன் உச்சத்தில்தான், 1965இல் மிகப் பெரிய அளவுக்கு இந்தியத் துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காலத்தில், ‘எனக்கே பிரிவினை உணர்வு வந்துவிட்டதுஎன்று ராஜாஜி வெளிப்படையாக அறிவித்தார்.
  • திமுகவுக்கும் தங்களுக்கும் இடையிலான தேனிலவு முடிந்துவிட்டது என்று பின்னர் அறிவித்தார் ராஜாஜி. ஆம், தேனிலவுமுடிந்துவிட்டது, குடும்பம் நடத்துகிறோம் என்றார் அண்ணா. உண்மையில், தேனிலவுக்குப் பிறகு விவாகரத்துதான் நடந்தது. அண்ணா தாய்வீட்டுக்குத் திரும்பிவிட்டார். ஆயினும், நயத்தக்க நாகரிகமான உறவு இருவர் இடையிலும் தொடரத்தான் செய்தது. தமிழ்நாட்டின் பொது நலன் என்ற புள்ளி அதை இயக்கியது!

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories