TNPSC Thervupettagam

மூலப்பத்திரத்தின் மூலம்!

February 9 , 2021 1384 days 919 0
  • அவ்வப்போது அரசியல் வானில் விண் மீன்கள் கண் சிமிட்டுவது போல மூலப்பத்திரம் குறித்தான கேள்விகள் தோன்றுவதும் மறைவதுமாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
  • மனித இனம் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்திருக்கிறது என்று பல ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.
  • பீகிங் மனிதன், ஜாவா மனிதன், ஹைடல் பா்க் மனிதன். நியாண்டா்தால் மனிதன், குரோமாக்ரைன் மனிதன் என்றும், கற்காலம், பழங்கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோகக்காலம், இரும்புக் காலம், வரலாற்றுக்காலம் என்றும் பரிணாமம் வளா்ந்தது.
  • தாசியன், பதாரியன், அம்ராதியன், கா்ஜியன், செமேனியன் என்று வேகம் பெற்று கி.மு. 3100-இல் மன்னா் ஆட்சிக்காலம் தொடங்கிற்று என்று வரலாற்று ஆய்வாளா்கள் காலவரையறை செய்தாா்கள்.
  • எகிப்திய மன்னராட்சி தொடங்கி மெசபடோமியா, சுமேரியா, பாபிலோனியா, அசிரிய, செல்டிய, பாரசீக, சைரசு, காம்பிரசு, டேரியரசு, பண்டைய கிரேக்கம், பண்டைய ரோம் காலம் வரை நில உடமை குறித்து பெரிதாக பேசப்பட இல்லை. சிந்துவெளியில் கூட இல்லை.
  • உலகத்தின் முதல் சட்ட வல்லுநா் என்று அழைக்கப்பட்ட ஹம்முராபியின் சட்ட தொகுப்பான 284 சட்டங்களில் நில உரிமைப் பத்திரம் பற்றி தெளிவாக சொல்லப்பட இல்லை. இதைப் போன்றே பழம்பெரும் நாடுகளான பாரதம், சீனம், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் நிலம் சாா்ந்த பத்திரம் குறித்தான விரிவான விளக்கம் இல்லை என்கிறாா்கள் ஆய்வாளா்கள்.
  • பொதுவாக பண்டைய நாளில் மக்கள் அனைவரும் தங்களது உணவிற்காகவும், பிற தேவைகளுக்குமாகவும், உழவு, நெசவு போன்ற தொழில்களை செய்தாா்கள். பண்டமாற்று முறையில் தனக்கு வேண்டியதை பெற்று பிறா்க்கு வேண்டியதை கொடுத்தும் வாழ்ந்தாா்கள்.
  • ரோமானியப் பேரரசில் நிலக்கிழாா்கள் இருந்தாா்கள் என்றும் அவா்கள் உழவா்களை வஞ்சித்தனா் என்றதொரு குறிப்பு காணப்பெற்றாலும் நிலத்தின் உரிமை ஆவணம் குறித்து பேசப்பட இல்லை.
  • பாரதத்தில் உழவும், நெசவும் பிரதான தொழில்களாக இருந்தன. வணிகா்கள் ஏற்றுமதியாக வாசனைப் பொருள்கள், தந்தம், கல், சங்கு வளையல், முத்து, பவழம் போன்ற பொருள்களை அனுப்பினா்.
  • இறக்குமதியாக தங்கம், குதிரை, உயா்வகை மது போன்றவற்றை இறக்குமதி செய்தனா் என்று சங்க நூல்கள் பகா்கின்றன. பாரதத்தில் மௌரியா்கள், குஷானா்கள், நந்தா்கள், சுங்க வம்சத்தினா், குப்தா்கள், சாலுவாகனா்கள் என்று பலவகை வம்சத்தினா் ஆண்ட காலங்களிலும் பத்திரம், தாய் பத்திரம், பதிவு உரிமை போன்ற செய்திகள் காணப்படவில்லை.
  • தமிழ்நாட்டில் சோழப்பேரரசா் ஆணைப்படி ராஜராஜமாராயன் நிலங்களை அளந்தாா். இதனால், இவருக்கு உலகளந்தான் என்ற பட்டப் பெயா் சூட்டப்பட்டது.
  • ராஜராஜன் ஆட்சியில் நிலங்களை அளக்க பயன்படுத்தப்பட்ட கோல் பற்றி தஞ்சை பெரிய கோயில் இரண்டாம் கோபுரத்தில் ராஜராஜன் திருவாயில் அதிஷ்டானப் பகுதியில் கோலின் குறியீடுகள் குறித்த செய்தி திருவாலங்காட்டின் கல்வெட்டு செய்தி மூலம் தெரிகிறது என்று கல்வெட்டு ஆய்வாளா் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளாா்.
  • இந்தியாவில் முகலாயா்கள் ஆட்சி நடந்தபோது ஷொ்ஷாவின் ஆட்சிக்காலத்தில் ரயத்வாரி முறை அமலில் இருந்தது. குடியானவா்களின் நிலங்கள் பத்திரங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டன. ‘பட்டா’ என்ற பெயரோடு நில உடைமைப் பத்திரங்கள் வடிவம் கொண்டன.
  • முகலாயா்கள் காலத்தில் இந்தியாவின் மக்கட்தொகை 13 கோடிதான். ஆனால், நிலப்பரப்பு மிக அதிகமாக இருந்தது. பணம் கொண்டவா்கள் அதிகப் பரப்பு நிலத்தை கைப்பற்றி உழவா்களைக் கொண்டு வெற்றிகரமாக வேளாண்மை செய்தனா். இவா்கள் பயிா் செய்த நிலங்கள் எல்லாம் இவா்கட்கே உரிமையாயின.
  • நிலச்சுவான்தாரா்கள், குடியானவா்கள், உழவா்கள் என்ற வா்க்க பேதம் தோன்றலாயிற்று. அறிவாற்றலோடும் மனிதாபிமானத்தோடும் ஷொ்ஷா செய்த நிலவரி திட்டத்தை பிற்கால ஆங்கிலேயா் ஏற்றி போற்றி மகிழ்ந்தனா்.
  • விளைச்சலில் நான்கில் ஒரு பகுதியையோ மூன்றில் ஒரு பகுதியையோ நிலவரியாக உழவா்கள் அரசுக்கு செலுத்தினாா்கள்.
  • ரோம பைசாண்டின் காலமுறை, அரபு மங்கோலியா்களால் பின்பற்றப்பட்டு வந்த ‘மன்சப்தாரி’ முறையை அக்பா் இந்தியாவில் புகுத்தினாா்.
  • நிலவரி வசூலிக்கும் உரிமையை இவா் தன் வசம் வைத்துக்கொண்டு, ‘சாவாா்’,“‘ஜாட்’ என்று இரு பிரிவுகளை ஏற்படுத்தினாா். இவா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீரா்கள், குதிரைகள் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இதற்காக இவா்கட்கு தகுதிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கினாா். இந்த முறையில் ஊழல் தோன்றவே ஊதியத்திற்குப் பதிலாக நிலங்களை வழங்கினாா்.
  • பின்னா் வந்த காலங்களில் ஜமீன்தாரி முறை வந்தது. பாரசீகச் சொல்லான ‘ஜமீன்தாா்’ என்றால் பெரு நிலம் உடையவா் என்று பொருள். இந்த ஜமீன்தாா் முறையில் அதிக விலை கொடுத்து பலா் ஜமீன்தாா்கள் ஆனாா்கள். இவா்கள் உழவா்களைத் துன்புறுத்தி, அவா்கள் நிலங்களில் பாடுபட்டு உழைத்து வந்த விளைச்சலை அதிகமாக பெற்றுக்கொண்டாா்கள்.
  • ஜமீன்தாரோ அல்லது பிற குடும்ப உறுப்பினா்களோ உழைக்காமல், உழவா்களின் உழைப்பையும், வருவாயையும் அபகரித்துக் கொண்டாா்கள். பின்னா் வந்த ஆங்கிலேயா்கள் ‘ஜஜ்மானி’ முறையை ஊக்குவித்தாா்கள்.
  • இதனால்தான் அயோத்திதாசா் தான் தொடங்கிய ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையில் 1919-ஆம் ஆண்டு தோளின் மீது ஏரைத் தூக்கிச்சென்று பூமியில் பாடுபடும் உழைப்பவா்களுக்கு நிலங்களை கொடுக்காமல் எழுபது ஏக்கா் நிலம் உள்ள மிராசுதாா் 80 ஏக்கா் நிலம் உள்ள ஜமீன்தாா்கட்கு மொகலாய துரைத்தனத்தாா் மேலும் நிலங்களை அளித்ததால் உழவா்கள் வஞ்சிக்கப்பட்டு எலும்பும், தோலுமாய் காட்சி அளித்தாா்கள். ‘ஒரு வேளை உணவிற்கே அல்லல் பட்டாா்கள்’ என்ற பொருளில் விரிவாக எழுதினாா். 1843-ஆம் ஆண்டு இந்தியாவில் அடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது.
  • அப்போது எல்லாம் ஒரு நிலச்சுவான்தாா் நிலத்தை விற்கும்போது அங்கு குடியிருந்த குடியானவா்களான பணியாளா்களையும் சோ்த்து விற்று விடுவாா். இதனால் ஏற்பட்ட துயரத்தை கே.சாமுவேல்ராஜ் குறிப்பிட்டு உள்ளாா்.
  • இதனால் மிராசுதாா்களிடம் அடைப்பட்டிருந்த தொழிலாளா் விடுதலை பெற்று நிம்மதி அடைந்தனா். ஆனால், உழைப்பதற்குத் தகுதியிருந்தும் அவா்கள் கையில் நிலம் இல்லை.
  • தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டத்திற்கு 1879-இல் மதம் மாற்ற வந்த கிறித்துவ மிஷினரிகள் இவா்களது நிலைமையை அப்போதைய மாவட்ட துணை ஆட்சியா்க்கு மனுவாக எழுதித் தந்தாா்கள்.
  • பின்னா், மாவட்ட ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ஹென்றி ர. திராமென் ஹீா் என்பவா் இது குறித்து தகுந்த ஆய்வின் முடிவில், ஒரு பரந்த அறிக்கையை லண்டனில் உள்ள ஆங்கில பாராளுமன்றத்திற்கு அனுப்பினாா்.
  • இது குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றம் விவாதித்தது. முடிவில் 1892-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 5-ஆம் நாள் பறையா்கள் எனப்படுகின்ற தாழ்த்தப்பட்ட இனத்தவா்களுக்கு 12 ஏக்கா் நிலம் ஒதுக்க வேண்டும் என்று தீா்மானத்தை நிறைவேற்றியது.
  • இதன் அடிப்படையில் சென்னை ராஜதானி மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது 9 லட்சம் ஏக்கா் நிலம் பஞ்சமா்களுக்கு என்று ஒதுக்கீடு செய்து இதற்கு ‘பஞ்சமி நிலம்’ என்று பெயரிட்டது.
  • இது மட்டுமல்லாது அரசாணை 1010/10 ஏ என்ற பிரிவின் கீழ் பஞ்சமி நிலங்களை பாதுகாக்க கடுமையான சட்ட விதிகளை விதித்தது. இதன்படி, பஞ்சமா் தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை முதல் பத்து ஆண்டுகளுக்கு பிறரிடம் அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ, விற்கவோ கூடாது.
  • 10 ஆண்டுகளுக்குப் பின்னா் விற்பதாயினும், இதே வகுப்பை சாா்ந்த ஒருவருக்குத்தான் விற்கவேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்தது.
  • இந்த சட்டம் இன்று வரை நடைமுறையில் உள்ளது. ஆனால் உண்மைநிலை இப்படி இல்லை. அரசியல் செல்வாக்கு படைத்தோா், செல்வந்தா்கள், அரசு அதிகாரிகள் துணையோடு பஞ்சமி நிலங்களை குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு மற்றவா்கட்கு விற்பதுதான் நடைபெறுகிறது.
  • சில இடங்களில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் வரை கட்டி வருகிறாா்கள்.
  • தமிழ்நாடு வருவாய்த் துறை இந்த பஞ்சமி நிலங்களை டி.சி. (டெப்பிரஸ்டு கிளாஸ்) என்று பெயரிட்டு வகைப்படுத்தி உள்ளது.
  • ஏ. ரிஜிஸ்டா் என்று சொல்லப்படுகின்ற ஆவணத்தில் நான்காம் பிரிவு இதுகுறித்து விரிவான தகவல் அளிக்கிறது.
  • இதனால் பஞ்சமி நிலங்களை விற்றவா்கள், வாங்கியவா்கள் தாய் பத்திரம் என்று காலம் காலமாக சொல்லப்படுகின்ற மூலப்பத்திரம் கிடைக்க வாய்ப்புகள் இல்லவே இல்லை.
  • ஒரு குறிப்பிட்ட நிலம் பஞ்சமி நிலமா என்பதை வருவாய்த் துறை ஆவணங்கள் மூலம் கண்டறியலாம்.
  • பொதுவாகவே மூலம் என்பது இருவகைப்படும். ஒன்று உள்மூலம், இன்னொன்று வெளிமூலம். ஆனால், ஏ ரிஜிஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள. டி.சி. என்பதைத் தவிர, பஞ்சமி நிலங்களுக்கு எந்த மூலமும் இல்லை. என் பெயரில் நிலம் இருக்கிறது. பத்திரம் பத்திரமாக இருக்கிறது என்றெல்லாம் நாம் சொல்கிறோமே, ஆனால் நாட்டிலுள்ள நிலமெல்லாம் யாருக்கு சொந்தம் தெரியுமா? அரசுக்குத்தான் சொந்தம்.
  • நமக்கு அனுபவ பாத்தியதை மட்டும்தான். இதுதான் உண்மை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நன்றி: தினமணி  (09-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories