TNPSC Thervupettagam

மெமு ரயில் சேவை: தெற்கு ரயில்வேயின் போற்றத்தக்க செயல்!

January 18 , 2025 9 hrs 0 min 12 0

மெமு ரயில் சேவை: தெற்கு ரயில்வேயின் போற்றத்தக்க செயல்!

  • தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை விடுமுறைகளின்போதும், கோடை விடுமுறையின் போதும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும், பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோரின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
  • பண்டிகை விடுமுறைகளில் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுவதும், இடம் கிடைக்காமல் பலர் அவதிப்படுவதும் வாடிக்கை. இந்தமுறை பொங்கல் விடுமுறைக்கு தெற்கு ரயில்வே சிறப்புரயில்களை அறிவித்து, கூட்ட நெரிசலை சமாளித்தாலும், முன்பதிவில்லா ‘மெமு’ ரயில் (MEMU) ஒன்றை இயக்கி கடைசிநேரத்தில் பண்டிகை கொண்டாட ஊருக்கு செல்வோரின் இன்னலைக் குறைத்துள்ளது.
  • பொங்கல் பண்டிகை விடுமுறையின் தொடக்கமான கடந்த 11-ம் தேதி சிறப்பு மெமு ரயில் சென்னையில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரை சென்றடைந்துள்ளது. பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடிவந்த இளைஞர்கள் பலர், இந்த ரயிலைப் பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதேபோன்று அந்த ரயில் மறுநாள் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.45-க்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது.
  • முன்பதிவு ஏதுமின்றி முழு ரயிலும் கடைசிநேரப் பயணிகளுக்காக இயங்கியதால் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு பால் வார்த்தது போல் அமைந்தது. பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு 17-ம் தேதியும், மதுரையில் இருந்து சென்னைக்கு 18-ம் தேதியும் ரயில் இயக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் பணிபுரிபவர்கள் மற்றும் மாணவர்கள் என பொங்கல் விடுமுறைக்காக 5 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அதிகரித்துவரும் தேவையை சமாளிக்க அவை போதுமானதாக இல்லை. தனியார் ஆம்னி பேருந்துகளில் இந்த பண்டிகை காலத்தைப் பயன்படுத்தி, ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
  • இத்தகைய சூழ்நிலையில், ரூ.175 கட்டணத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு அதுவும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இணையாக 8 மணி நேரத்தில் சென்றடையும் முன் பதிவில்லா மெமு ரயிலை இயக்கியுள்ள தெற்கு ரயில்வே பாராட்டுக்குரியது.
  • முதன்முறையாக கடந்த தீபாவளி பண்டிகையின்போது இத்தகைய சேவையை தெற்கு ரயில்வே வழங்கி யது. தற்போது பொங்கல் பண்டிகைக்கும் வழங்கி பொதுமக் களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தெற்கு ரயில் வேயின் இந்த போற்றுதலுக்குரிய செயல் இத்துடன் நின்று விடக் கூடாது.
  • வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வோர் மற்றும் அங்கிருந்து சென்னை திரும்புவோரின் எண் ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களது தேவையை மனதில் கொண்டு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்ற மெமு ரயில் சேவையை வழங்க முயற்சிக்க வேண்டும்.
  • அத்தகைய அறிவிப்பு சென்னையில் தங்கி கல்வி நிறுவனங்களில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பணிபுரிவோரின் நெஞ்சில் பால் வார்ப்பதாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories