TNPSC Thervupettagam

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

May 22 , 2019 2062 days 1169 0
  • இந்தியத் தேர்தல் முறை குறித்தும், தேர்தலுக்காக அரசும், வேட்பாளர்களும் கோடிக்கணக்கில் செலவிடும் பணம் குறித்துச் சிந்திக்கவும், கணக்கிடவும் முற்பட்டால் தலை சுற்றுகிறது. கணக்கில் வராமல் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது வெளியில் வரப்போவது இல்லை என்பதால், 2019 மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் செலவழித்தது எவ்வளவு என்பது குறித்த உண்மையான விவரம் வெளிவரவே போவதில்லை.
தேர்தல்
  • கடந்த 39 நாள்கள் ஏழு கட்டத் தேர்தல் பிரசாரத்துக்காக, போட்டியிட்ட அரசியல் கட்சிகளாலும், வேட்பாளர்களாலும் செய்யப்பட்டிருக்கும் செலவு ரூ.50,000 கோடியைத் தாண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
  • 1952-இல் நடந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் 489 மக்களவைத் தொகுதிகளுக்கு 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அன்றைய மக்கள்தொகையான 36 கோடியில் சுமார் 4 கோடி பேர் வாக்களித்தனர். முதல் மூன்று பொதுத் தேர்தல்களில் அரசுக்கான செலவு ரூ.10 கோடிக்குள் அடங்கிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி 1952-இல் தேர்தல் நடத்த வாக்காளர் ஒருவருக்கு 60 காசுகள் செலவாகியிருக்கிறது. இப்போது தேர்தல் நடத்துவதற்கான செலவினம் என்பது கட்டுக்கடங்காமல் போயிருப்பது மட்டுமல்லாமல், அதைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்றாகவும் மாறிவிட்டிருக்கிறது.
  • கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கான அரசின் செலவு சுமார் ரூ.3,870 கோடி என்று தெரிகிறது. இது 2009-இல் நடந்த 15-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அரசின் அதிகாரப்பூர்வ செலவைவிட மூன்று மடங்கு அதிகம். நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில் 543 மக்களவை இடங்களுக்கு 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 130 கோடி மக்கள்தொகையில், 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை பல லட்சம் அதிகரித்து விட்டிருக்கும் நிலையில், தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ செலவும் அதிகரித்திருப்பதில் வியப்பில்லை.
சட்ட முறைகள்
  • 58 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிமுறை களின் அடிப்படையில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, எதார்த்த நிலைமையின் அடிப்படையில் அவை ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான்  உண்மை. தேர்தலுக்கான அரசுச் செலவினங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, வரைமுறையோ இல்லாமல் இருக்கும்போது, வேட்பாளர்களின் செலவுகளுக்கு நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் கட்டுப்பாடு விதித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதனால்தான் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் மிகப் பெரிய அளவில் கணக்கில் வராத செலவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.
  • தேர்தல் நடைமுறை விதிகள் 1961-இன் சட்டப்பிரிவு 90-இன் கீழ் வேட்பாளரின் அதிகபட்ச தேர்தல் செலவு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி, வேட்பாளர் போட்டியிடும் மாநிலங்களுக்கு ஏற்ப தேர்தல் செலவுக்கான அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பெரிய மாநிலங்களில் ரூ.70 லட்சமும், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.54 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில் பார்த்தால், நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 8,049 வேட்பாளர்களின் மொத்த செலவு ரூ.5,600 கோடியாக இருக்கும்.
புள்ளிவிவரம்
  • இது வெறும் புள்ளிவிவரமாக இருக்குமே தவிர, உண்மையில் செலவழிக்கப்பட்ட தொகையின் சிறு பகுதியாகத்தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். சராசரியாக ஒரு மக்களவைத் தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், வாக்காளர் ஒருவருக்கு ரூ.5 என்கிற அளவில்தான் மொத்த பிரசார காலத்தில் ஒருவேட்பாளர் செலவு செய்கிறார் என்பதை நம்பவா முடியும்? வாக்காளர்களுக்கு ரூ.200-லிருந்து ரூ.5,000 வரை பணம் கொடுக்கப்படுகிறது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், தேர்தல் நடைமுறை விதிகள் 1961 மீறப்படுவதற்குத்தானே தவிர, கடைப்பிடிப்பதற்கானதல்ல என்பது தெளிவாகிறது.
  • தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாகனங்களுக்காக 34%, பிரசார சாதனங்களுக்காக 23%, பேரணிகளுக்காக 19%, ஊடக விளம்பரத்திற்காக 7%, பதாகை, துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றுக்காக 4%, வேட்பாளர்களின் களப்பிரசாரத்துக்காக 3% செலவிடலாம். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிந்ததும் தங்களது தேர்தல் செலவுகளை பட்டயக் கணக்காளரின் மூலம் முறைப்படுத்தித் தாக்கல் செய்கிறார்கள். தாக்கல் செய்யப்படும் கணக்குகள் வெறும் கண்துடைப்பு, பொய்யானவை என்பது தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
  • போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் ஒருசிலர் தவிர பெரும்பாலோர் கோடீஸ்வரர்கள். வாக்குக்கு நோட்டு என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, இப்போது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்ட நிலையில், நமது தேர்தல் முறையிலேயே நாணயமின்மையும், திருட்டுத்தனமும், கருப்புப்பணமும், ஊழலும், கையூட்டும் பின்னிப்பிணைந்து விட்டிருக்கும் சூழல் காணப்படுகிறது.
நிதி
  • நடந்து முடிந்திருக்கும் மக்களவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் அதை ஊக்குவித்திருக்கின்றன. இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுக்குக் காத்திருப்போம்!

நன்றி: தினமணி (22-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories