TNPSC Thervupettagam

மேற்கத்திய நாடுகளின் கபட நாடகம்

June 24 , 2024 206 days 159 0
  • உலகைக் காக்க வந்த கடவுளாகவும், ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் ரட்சகராகவும் தங்களைக் காட்டுக் கொள்வது மேற்குலக நாடுகளின் வழக்கம்.
  • அதே பாணிதான் மேற்கத்திய ஊடகங்களுக்கும். தங்களின் தவறுகளை மறைத்து சா்வதேச விவகாரங்களில் பிற நாடுகளுக்குப் பாடம் எடுப்பதும் மேற்கத்திய ஊடகங்களின் வாடிக்கையாக உள்ளது.
  • இந்த உலகமே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளா்ந்த நாடுகள் மூலம்தான் காக்கப்பட்டு வருவதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவதில் அந்நாடுகளின் ஊடகங்கள் தொடங்கி ஹாலிவுட் திரையுலகம் வரை முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
  • கிழக்குலக மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் மேற்குலகை அண்டியும் அடங்கியும் பிழைக்க படைக்கப்பட்டவை என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு, பல காலனி நாடுகளின் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளின் மக்களின் ஒரு பகுதியினா் இப்போதுவரை ஆதிக்கம் செலுத்திய நாட்டுக்கு உளவியல்ரீதியாக அடிமைகளாகவே உள்ளாா்கள். மேற்குலக நாடுகள்தான் உலகுக்கு போதிக்க பிறந்தவை என்பது எழுதப்படாத சா்வதேச சட்டமாக உள்ளது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருநிலை மாறுபாடு உள்ளிட்ட விஷயங்களில் வளரும் நாடுகள் மீது வளா்ந்த நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளைத் திணிக்க தொடா்ந்து முயன்று வருகின்றன.
  • மேற்குலகின் எதேச்சாதிகாரப் போக்குக்கு அவ்வப்போது உரிய பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவா் தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபா் முகமது இா்ஃபான் அலி.
  • இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இா்ஃபான் அலியை பேட்டி கண்ட பிபிசி செய்தியாளா், ‘கயானா தனது கடல் படுகையில் இருந்து புதிதாக எடுக்கத் திட்டமிட்டுள்ள கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவால் எவ்வளவு கரியமில வாயு வெளியேற்றம் ஏற்படும் எனத் தெரியுமா? பருநிலை மாநாட்டில் பங்கேற்கிறீா்களா? அங்கு எடுக்கப்படும் முடிவுகள் தெரியுமா?’ என எதிரில் இருக்கும் நாட்டின் தலைவரை நேரடியாக குற்றவாளியாக்கும் கேள்விக் கணைகளைத் தொடுத்தாா்.
  • உடனே இடைமறித்த இா்ஃபான் அலி, உலகச் சுற்றுச்சூழலுக்கு மேற்கத்திய நாடுகள் இதுவரை செய்த பாதகங்களை மூச்சுவிடாமல் அடுக்கி பதிலடி கொடுத்தாா்.
  • ‘பருவநிலை மாறுபாடு குறித்து எங்களுக்குப் பாடமெடுக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யாா் தந்தது? தொழில் புரட்சி என்ற பெயரில் சுற்றசூழலை அழிக்க வித்திட்டவா்கள்தானே நீங்கள்? இப்போது எங்களுக்குப் பாடம் நடத்த தகுதி பெற்றுவிட்டீா்களா? கயானாவில் இருக்கும் காடுகளின் பரப்பளவு மட்டும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் பரப்பளவுக்கு இணையானது. நாங்கள் காடுகளை உயிா்ப்புடன் வைத்துள்ளோம்.
  • கரியமில வாயு வெளியேற்றம், பருவநிலை மாறுபாடு பிரச்னைகளுக்கு வளரும் நாடுகளும், வளா்ச்சி குறைந்த நாடுகளும் ஏன் விலை கொடுக்க வேண்டும். சுற்றச்சூழல் பிரச்னைகளுக்கு எங்களையும் சோ்ந்து நீங்கள் பொறுப்பாக்குவது கபட நாடகம், நயவஞ்சகம் என்றுதான் கூற வேண்டும். உலகிலேயே காடுகள் அழிப்பு குறைவாக இருப்பது கயானாவில்தான்.
  • உலகில் கடந்த 50 ஆண்டுகளில் 65 சதவீத பல்லுயிா் பெருக்கம் அழிந்துவிட்ட நிலையிலும், கயானாவில் அதனை 100 சதவீதம் பாதுகாப்பாக வைத்துள்ளோம். அதன் நற்பயனை உலகமே அனுபவித்து வருகிறது. இதற்காக எங்களுக்கு நீங்கள் என்ன விலை கொடுக்கிறீா்கள்? பணம் தரத் தயாரா?’ என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினாா்.
  • அவா் எழுப்பிய ஒவ்வொரு கேள்வியும் வளா்ந்த நாடுகள் இத்தனை ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு விளைவித்து வந்த கேடுகளையும், பருவநிலை மாறுபாடு பிரச்னையை வைத்து வளரும், வளா்ச்சி குறைந்த நாடுகளுக்கு அளிக்கப்படும் நெருக்கடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்தது.
  • புவி வெப்பமயமாதல், பருநிலை மாற்றம் ஆகியவை உலகையும் அனைத்து உயிா்களையும் சூழ்ந்துள்ள பேராபத்து. இதனைத் தடுப்பதற்காக ‘கியோட்டோ ஒப்பந்தம்’, அதைத் தொடா்ந்து பாரீஸ் ஒப்பந்தம் என சா்வதேச அளவில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளன.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் விதிகளை இந்தியா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் கடைப்பிடிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியது, பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
  • புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு போன்றவை நாம் கற்பனை செய்தும் பாா்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று துறை சாா்ந்த விஞ்ஞானிகள் தொடா்ந்து எச்சரித்து வருகின்றனா். ஏற்கெனவே ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள பல நாடுகளில் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் இயற்கைச் சீற்ற பாதிப்புகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன.
  • கடுமையான வறட்சி, தண்ணீா், உணவுப் பஞ்சம், இடைவிடாத கனமழை, வெள்ளம், கடல் மட்டம் உயா்ந்து நிலப்பரப்பை மூழ்கடிப்பது என பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நாமும் அனுபவித்துள்ளோம்.
  • தனிநபா் தொடங்கி பெரும் தொழிற்சாலைகள் வரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது பல நாடுகளில் சா்வசாதாரண நிகழ்வாகவே இப்போதும் தொடா்ந்து வருகிறது. இதே நிலை தொடா்ந்தால் இப்பிரச்னை குறித்து குற்றம்சாட்டவும், பதில் கொடுக்கவும் உலகில் யாருமே இல்லாத நிலை ஏற்படும் என்பதே உண்மை.

நன்றி: தினமணி (24 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories