மேலாண்மையின் போக்கும் நோக்கும்!
- அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், காலதாமதம் ஏற்பட்டாலும் முடிந்தவரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர். மக்கள்தொகை பெருகப் பெருக துறைகளும், பிரிவுகளும், விதிமுறைகளும் அளவின்றிப் பெருகின. காலப்போக்கில் விதிமுறைகள் என்ற பெரிய வலைக்குள் அகப்பட்டு ஆட்சியாளர்களும் மக்களும் சிக்கித் தவித்து உழல்வது என்ற சூழலுக்கு உட்பட்டுவிட்டனர்.
- அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நாளில் டாக்டர் அம்பேத்கர் கூறிய ஒரு கருத்தை இங்கே நாம் நினைவு கூரலாம். "அரசியலமைப்புச் சட்டம், சட்ட சபை நிர்வாகம், நீதிமன்றம் போன்ற அரசின் அங்கங்களைத்தான் நம்மால் வடிவமைக்க முடியும். மக்கள் தாங்கள் விரும்பும் அரசியலை நடத்த, அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் கட்சிகளை ஒட்டியே இந்த அமைப்புகள் செயற்படும். மக்களும் அரசியல் கட்சிகளும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை நாம் உறுதிசெய்ய முடியவில்லை.
- இந்தியர்கள் தங்களுடையசொந்தக் கருத்துகளைவிடத் தம் நாட்டை உயர்வாக எண்ணுவார்களா, அல்லது நாட்டைவிடத் தங்கள் சொந்தக் கருத்துகளையே உயர்வாக மதிப்பார்களா என்பதில் தெளிவில்லை. நாட்டைவிடத் தங்கள் கட்சிக் கொள்கைகளை அதிகமாகப் போற்றினால், நாம் முயன்று பெற்ற விடுதலை மீண்டும் ஒரு முறை இடருக்கு இரையாகும். ஏன் இழந்து விடவும் நேரும். இதனை உணர்ந்து நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கமாகும்''.
- நல்ல முறையில் மக்களாட்சி இயங்க சட்டங்களும், விதிகளும் நெறிமுறைகளும் பெருந்துணையாகும். எனினும் மனித வாழ்க்கையை விதிகளுக்குள் சிறைப்படுத்த முடியாது. எனவே விதிவிலக்குகளும் பல நிலைகளில் வேண்டும். ஆனால் விதிவிலக்குகள், விதி செய்ததன் நோக்கத்தையே விழுங்கிவிடக் கூடாது.
- "இனி ஒரு விதி செய்வோம்' என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதை எந்த நாளும் காப்போம் என்று பாரதியாரும், "முறை செய்து காப்பாற்றும் மன்னவன்' எனக் காட்டி மன்னன் தான் வகுத்த முறையை நிலைக்கச்செய்ய வேண்டும் என்று திருவள்ளுவரும் வலியுறுத்துகின்றனர். மக்களாட்சியில் முறை செய்யும் மன்னனும், மக்களேயாவர். எனவே முறையைக் காப்பாற்றும் பொறுப்பும் மக்களுக்கு உண்டு.
- ஓர் அலுவலரை நாளும் கண்டுபேசத் தொடர்ந்து பார்வையாளர்கள் வந்து கொண்டிருப்பார்கள். தொலைபேசி ஒலித்துக் கொண்டே இருக்க, விடை சொல்வதிலேயே காலம் கழியும். முதன்மையான முடிவுகளைக் கூடப் பத்து நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் முடித்துவிடுகிறார்கள். அவர்களிடம் எண்ணற்ற பொறுப்புகள் இருக்கும். எல்லாவற்றையும் அவர்கள் பிறர் தலையில் சுமத்துவார்கள். கோப்புகள், சுற்றிச் சுற்றி வந்தபடியே இருக்கும். ஒருபுறம் பார்வையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் உடன் பணியாற்றும் அலுவலர்கள் வணிகத் தொடர்பாளர்கள், ஊழியர்கள் என்று எண்ணற்றவர்கள் வருவதும் மறுபுறம் வம்பு, அரட்டை, வதந்தி, புறங்கூறல், புனை செய்தி இவற்றுக்குக் காது கொடுப்பது மட்டுமில்லாமல், இந்த வழித் தகவல்களுக்கு சில நேரங்களில் முதன்மை அளித்துவிடுவதாலும் கோப்புகளைப் படிப்பதற்கு நேரமில்லாமல் ஒதுக்கிவிட நேரும். இவ்வாறு நிர்வாக இயலின் பேராசிரியர்கள் நடைமுறைச் சிக்கலை விளக்கியிருக்கின்றனர்.
- மக்களின் உணர்வுகளை மதிப்பவர்கள் என்ற வகையில் ஆள்கின்ற அமைச்சர்கள் மக்களுக்கு நன்மைகள் செய்ய முன்வருவதும், விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிச் செயல்பட முடியாவண்ணம் விதிகளால் முட்டுக்கட்டை போடுவதும், இக்கருத்து மோதல்களினால் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பயன்கள் சென்றடைய காலதாமதமாகலாம்.
- காமராசர் முதலமைச்சராக இருந்தபோது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் உயர்நிலைப்பள்ளியைக் கட்டித் தர வேண்டுமென்று அவ்வூர் மக்கள் முறையிட்டிருந்தனர். அரசு அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்டபோது, மூன்று மைல் தொலைவுக்குள் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம் என்றும் மற்றும் ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும் மூன்று மைல் இடைவெளி அமைய வேண்டும் என்ற விதி இருப்பதாலும் அந்தச் சிற்றூரில் மூன்று மைல்களுக்குள் பள்ளி அமைந்துள்ளதாலும் புதிய பள்ளி கட்ட இசைவளிக்க விதியில் இடமில்லை என்று மறுத்து கூறினர். அதற்கு காமராசர், "உங்கள் விதியும் கருத்தும் சரியானதுதான் என்றாலும், அந்த ஊரில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் அந்த இரண்டு ஊர்களின் நடுவே காட்டாறு ஓடுகிறது. அதற்குப் பாலம் இல்லை. மாணவர்கள் ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும். அது மாணவர்களுக்குத் தாங்க முடியாத தடையாக இருக்கிறது. பாலம் கட்டித் தர வேண்டும் அல்லது பள்ளியைக் கட்டித் தர வேண்டும், உங்கள் விதியால் மாணவர்கள் அவதிப்படக்கூடாது. எனவே புதிய பள்ளியைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கூறினார்.
- ஆனால் அந்த கடமை உணர்வில் நடைமுறைச் சிக்கலை அறிய அதிகாரிகள் முற்படவில்லை. முதலமைச்சர் ஊர்ச்சூழலையும், ஆற்றோட்டத்தைப் பற்றிய அனுபவத்தையும் நேர்முகமாக அறிந்தவராதலால் மக்களின் நலங்கருதி விதிக்கு விலக்களிக்க அவர் முனைந்தார். விதிமுறையை மட்டுமே காண்கிற நிலைமையறிந்து மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிற தெளிவின்மை காரணமாக மேலாண்மை பல வகையில் மெலிந்து நெளியும்.
- முற்காலத்தில் நீதிவழுவாத மன்னர் ஆண்டனர். மன்னரின் செயல்பாடுகள் இன்றளவும் போற்றப்படுகின்றன. நீதி தவறாத அச்செயல்முறைகள் உணர்வின் எல்லையைத் தொட்டன. ஆனால் எல்லாச் செயல்களுமே ஏற்பதற்குரியனவா என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
- புறாவுக்காக தன் உடலையே அரிந்து தந்தான் சிபி என்றும், முல்லைக்குத் தேர் வழங்கினான் பாரி என்றும், பசுங்கன்றுக்காகத் தன் மகனையே இழந்தான் சோழ மன்னன் என்றும் சுட்டிக்காட்டினர். இச்செய்கைகளினால் நீதிமுறை காக்கப்பட்டது. மக்களுக்கும் மனமகிழ்ச்சி ஏற்பட்டது. மன்னனும் போற்றப்பட்டான். இச்செய்கைகளினால் இழப்பு சிலருக்குத்தான்.
- நீதிமுறையைக் காக்கும் பொருட்டு தண்டனைகள் வழங்கியவிதம், வெவ்வேறாக இருக்கலாமே என்று நினைக்கவும் இடமுண்டு. ஆனால் காற்சிலம்பு காணாமல் மறைந்த களவைப் பற்றிச் சிந்தனை செய்யாத மன்னனின் செயற்பாடுகள் நம்மை நெகிழவைக்கின்றன. செங்கோலைக் காக்க தன்னையே இழந்தான் நெடுஞ்செழியன். இச்செயல் உயர்ந்த செயல் என்று நாம் போற்றினாலும் ஒருவருக்கு நடந்த தீங்கால் தன்னையே இழந்தான் என்றால் மக்களை யார் காப்பது என்ற சிந்தனையும் இன்றைய நிலையில் பலரால் வினவப்படுகிறது.
- ஒரு குடும்பம் நலமுறவேண்டுமானால் ஒருவரை இழப்பதில் தவறில்லை. ஓர் ஊர் நலம்பெற வேண்டுமானால் ஒரு குடும்பத்தை இழப்பதில் தவறில்லை. ஒரு நாடு செம்மையாக இருக்க வேண்டுமென்றால் ஓர் ஊரையே இழப்பதில் தவறில்லை என்று அற நூல்கள் கூறுகின்றன. அந்த நிலையில் மக்களுக்காகத் தான் வாழ்வது முக்கியமா ஒருவரின் தனி அவலத்துக்காகத் தன்னை இழப்பது தேவையா என்ற வினா எழுகிறது. எனவே பெரும்பான்மையான மக்களின் நலம்கருதி உருவாகும் திட்டத்தில் ஒரு சிறு சிதைவு இருக்குமானால், அதற்காக அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் வழக்குமன்றம் சென்று வாதிடுவது சிறந்ததா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
- அமர்வு நீதிமன்றங்களில் அளிக்கப்படும் தீர்ப்பு உயர்நீதி மன்றங்களில் மாற்றிக் கொடுக்கப்படுகிறது. உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் மாற்றி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் உண்மையான குற்றவாளி யார் என உணர்வதில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவிதமான வெளிப்பாடுகள் அமைகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் தவறான தீர்ப்பு எனச் சொல்லப்படும் தீர்ப்பினை நல்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி விலக வேண்டுமென்று யாரும் வற்புறுத்துவதில்லை. உயர் நீதிமன்ற மாற்றுத் தீர்ப்பினால் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் பதவி விலக வேண்டுமென்று நாம் வற்புறுத்துவதில்லை. வழிமுறைகளும் விதிமுறைகளும் நெறிமுறைகளும் சீரான முறையில் அமைய நாம் முயல வேண்டும்.
- "என் கருத்தை மறுப்பவரோடு விவாதித்து முடிவெடுப்பது என் வழக்கம். என் கருத்தைத் தலையசைத்து ஏற்பதுதான் செயலர் கடமை என்றால் எனக்குச் செயலரே தேவையில்லை'' என்று உள்துறை அமைச்சராக விளங்கிய சர்தார் படேல் ஒருமுறை கூறினார்.
- அரசின் நடைமுறையில் கட்சிக்காரர்கள் தலையிடலாகாது என்ற கருத்து இன்றும் நிலவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழியாகத்தான் மக்கள் அரசின் குறைகளையும் மெத்தனப் போக்கையும் சுட்டிக்காட்ட முடியும். எனவே அவர்களின் தலையீட்டைக் குறுக்கீடு என்று கருத முடியாது.
நன்றி: தினமணி (26 – 02 – 2025)