- இந்தியாவில் மே நாளை முதன்முதலில் 01.05.1923இல் சிறப்பாகக் கொண்டாடிய பெருமை சிங்காரவேலருக்கே உண்டு; இந்தியாவின் மூத்த மார்க்சிய அறிஞராக அவர் விளங்கியதால்தான் அது சாத்தியமாயிற்று. சார்லஸ் டார்வின், கார்ல் மார்க்ஸ், ஐன்ஸ்டைன், லாப்லஸ், புரூனோ போன்றோரைத் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியதைப் போன்றே மே நாளையும் அவர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
மே நாள் பிறந்தது
- உலகில் மே நாள் முதன்முதலாகக் கொண்டாடுவதற்கு அமெரிக்காவின் சிகாகோவில் 01.05.1886இல் எட்டு மணி நேர வேலை வேண்டி நடத்தப்பட்ட வீரஞ்செறிந்த போராட்டமே காரணம். அதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தலைவர்கள் பலர் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டனர்.
- இதனை முன்னிட்டு சிகாகோ நீதிமன்றம் லூயிஸ்விங், சாமுவேல் ஃபீல்டென், பார்சன்ஸ், ஸ்பைஸ், ஃப்ரீஸ், ஏங்கல், ஸ்காப் ஆகியோருக்கு மரண தண்டனையும் ஆஸ்கர் நீபெவுக்கு 15 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையும் விதித்தது. இவர்களில் நால்வருக்கு 11.11.1887இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. லூயிஸ்விங் சிறையில் கொல்லப்பட்டார். இதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தால் பின்னர் ஆஸ்கர் தீபே, சாமுவேல் ஃபீல்டென், ஸ்காப் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
- இரண்டாம் தொழிலாளர் அகிலம், பாரிஸ் மாநகரில் 14.07.1889இல் மாநாட்டை நடத்தியபோது, சிகாகோ போராட்டத்தை முன்னிட்டு முக்கியத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் அவரவர் நாட்டில் மே நாளை 01.05.1890 முதல் பெரும் விழா வாகக் கொண்டாட வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. அம்மாநாட்டில் கலந்துகொண்ட பல நாடுகளைச் சேர்ந்த சோஷலிசத் தலைவர்கள் அதனைச் செயல்படுத்த முயன்றனர்.
இந்தியாவில் மே நாள்
- அந்த அறிவிப்பை இந்தியாவில் முதன்முதலில் ஏற்று அதுவும் சென்னையில் 01.05.1923இல் கொண்டாடியவர் சிங்காரவேலர். இந்நாளை இரு கூட்டங்களாக உயர் நீதிமன்றத்தின் எதிரே உள்ள கடற்கரையிலும் திருவல்லிக்கேணிக் கடற்கரையிலும் கொண்டாடினர். ஒரு கூட்டத்துக்குச் சிங்காரவேலரும், மற்றொரு கூட்டத்துக்கு எம்.பி.எஸ்.வேலாயுதமும் தலைமை ஏற்றனர்.
- இக்கூட்டங்களில் சுப்பிரமணிய சிவாவும் கிருஷ்ணசாமி சர்மாவும் வேறு சிலரும் உரையாற்றியுள்ளனர். இவ்விழாவில் சிங்காரவேலர், தம்மை ஆசிரியராகக் கொண்டு ‘தொழிலாளி’ என்ற இதழையும் ‘லேபர் அண்டு கிசான் கெஸட்’ என்ற ஆங்கில இதழையும் வெளியிட்டுள்ளார்.
- அக்காலத்தில் சரியான வர்க்கக் கண்ணோட்டத்தில், (பொதுவுடைமையைச் சார்ந்து) தொழிலாளி-விவசாயி ஆகியோரைக் குறித்து முதன்முதலாக வெளிவந்த அரசியல் ஏடுகள் இவையே. அதே நாளில்தான் அவர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்துகொண்டே இந்தியத் தொழிலாளர் - விவசாயி கட்சியையும் தோற்றுவித்துள்ளார்.
- அக்கட்சியின் கொள்கை அறிக்கை ஏற்றத்தாழ்வற்ற, சமயச் சார்பற்ற கொள்கையையும் சாதி ஒழிப்புக் கொள்கையையும் சமதர்மக் கொள்கையையும் உடையதாக இருந்தது. இவை அவரது உறுதியான பொதுவுடைமைக் கொள்கையையும் தொலைநோக்குச் சிந்தனையையும் காட்டுவன. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி தோன்றுவதற்கு முன்னரே அவர் இக்கட்சியைத் தோற்றுவித்திருப்பது அசாதாரணமானது.
- மே நாளை அவர் சென்னையில் கொண்டாடிய 01.05.1923 அன்று, தன் வீட்டில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் விருந்தளித்துள்ளார். மாலையில் நடந்த கூட்டத்தில் மே நாளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுவிட்டு, இனி மே நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்றும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஆறு மணி நேர வேலையை மட்டுமே தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- சென்னையில் நிகழ்ந்த மே நாளைக் குறித்து ‘தி இந்து’ நாளிதழ் இப்படிக் குறிப்பிட்டிருந்தது. ‘தொழிலாளர் - விவசாயிகளின் கட்சி சென்னையில் மே நாள் விழாவைத் தொடங்கி வைத்தது. தோழர் சிங்காரவேலர் தலைமையேற்றார். இனி மே நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் விடுதலை பெற உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது’ [‘தி இந்து’, 02.05.1923]
- சென்னையில் நடந்த மே நாள் நிகழ்வுகள் குறித்து அப்போது பெர்லினிலிருந்த எம்.என்.ராய், தாம் நடத்திய ‘The Vanguard of Indian Independence’ இதழில் குறிப்பிட்டிருந்தார்: ‘இந்தியாவில் முதன்முதலாகப் பாட்டாளி வர்க்கத்தின் நன்னாளான மே நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. பழுத்த இந்திய சோஷலிஸ்ட்டான எம்.சிங்காரவேலரின் அழைப்பிற்கிணங்க இரு பொதுக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் உலகிலும், இந்தியாவிலும் நடந்திருந்த வர்க்கப் போராட்டத்தை விளக்கினார். இந்தியத் தொழிலாளர்களின் குறிக்கோள் தொழிலாளரின் குடியரசாக இருக்க வேண்டுமென்று விளக்கினார்.’ [The Vanguard of Indian Independence, Vol II, page 9, 15.06.1923]
- மே நன்னாள் சென்னையில் கொண்டாடப்பட்ட பின்னரே, எஸ்.வி.காட்டே, எஸ்.ஏ.டாங்கே, நிராம்கர் முயற்சியால் மும்பையில் 01.05.1926இல் மே நாள் கொண்டாடப்பட்டது. அடுத்து அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் [AITUC] ஜார்ஜியாவில் 01.05.1927இல் கொண்டாடியது.
சிங்காரவேலரின் பணிகள்
- விஞ்ஞானக் கருத்துகளைப் பரப்புவதற்காகவே, சிங்காரவேலர் தமது 75ஆம் வயதில், ‘புது உலகம்’ என்ற மாத இதழை 01.05.1935இல் தொடங்கினார். எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளையும் மே நாளில் கொண்டாடுவதை தம் இறுதிக் காலம்வரை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
- இந்தியாவில் மே நாள் கொண்டாடப்படுவதற்கு முன்னரே, தொழிலாளர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு ஆழமாகச் சிந்தித்து, அவர்களைப் பெரும் சக்தியாக மாற்றி, முன்னணி அரசியல் படையாக அவர்களை உருவாக்க உழைத்தவர்தான் சிங்காரவேலர். குறிப்பாக, கயையில் 1922இல் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர், அனைத்துத் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் வாயிலாக விடுதலைக்குப் போராட அவர்கள் உதவ வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
- காங்கிரஸ் இயக்கத்துக்கு அதுவரை அக்கருத்து அந்நியமாகவே இருந்துவந்தது. ஆனால், சிங்காரவேலரின் மாநாட்டுப் பேருரையால் காங்கிரஸ் இயக்கம் சிங்காரவேலர் உள்ளிட்ட எழுவரைக் கொண்ட தொழிலாளர் நலக்குழு அமைத்தது என்பது வரலாறு. இதன் பின்னரே தொழிலாளரைத் திரட்டும் முயற்சி நாட்டில் பரவலாகின.
- தொழிற்சாலைகளில் முதலாளிகளின் பழிவாங்கும் செயல்களை நீக்கவும், தவிர்க்க முடியாத சமயத்தில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைப் பெறவும் தொழிற்சங்கச் சட்டத்தை உருவாக்க மே நாள் கொண்டாட்டம் உதவியது. அதாவது, மே நாள் கொண்டாட்டத்தின் எழுச்சியும் ஒற்றுமையும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் கற்பித்தன.
- இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட என்.எம்.ஜோஷியும் (பம்பாய்) சிங்காரவேலரும் தொழிற்சங்கச் சட்டத்தை நிறைவேற்றக் காரணமாயினர். இதற்கு லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சக்லத் வாலாவும் உதவினார். இதன்வழி இந்தியத் தொழிலாளர்களுக்கும் உலகத் தொழிலாளர்களுக்கும் ஒருவருக்கொருவர் நட்பு பூண்டு உறவுகொள்ள அறிவுறுத்தினார்.
- தொழிலாளர்களுக்கு உலகப் பார்வையை அளிப்பதன் வழி சாதி, மதம், இனம், நாடு, எல்லை கடந்த மானுடப் பண்பை சிங்காரவேலர் விதைத்திருக்கிறார். தமிழகத்தில் பி அண்டு சி மில் போராட்டம், பர்மா செல் போராட்டம், தென்னிந்திய ரயில்வே போராட்டம் ஆகியவற்றை நடத்திய அவர், கல்கத்தாவின் கரக்பூர் போராட்டத்திலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பஜனைப் பாடல்களிலும், சமயச் சொற்பொழிவுகளிலும் மூழ்கியிருந்த தொழிலாளர்களுக்குப் போராட்ட உணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு மார்க்சியத்தின் வழி வர்க்க உணர்வை ஏற்படுத்தவும், சாதி ஏற்றத்தாழ்வைப் போக்கவும் வழிகண்டவர்தான் அவர்.
- ‘கம்யூனிசம் என்பது முழு மானிட நேயமாகும்’ என்றார் மார்க்ஸ். அதனை அடியொற்றி வழிகாட்டியவர்தான் சிங்காரவேலர்!
நன்றி: தி இந்து (06 – 05 – 2023)