TNPSC Thervupettagam

மைல்கல் சாதனை!

January 23 , 2025 13 hrs 0 min 15 0

மைல்கல் சாதனை!

  • புத்தாண்டில் புதுப் பாய்ச்சலுக்குத் தயாராகியிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ). விரைவிலேயே நூறாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைக்கப்போகிறது என்பது ஒவ்வோா் இந்தியரும் பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய செய்தி. விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைப்பதற்கான முன்னோட்ட முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.
  • ‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ என்னும் ஆய்வு நிலையத்தை 2035-க்குள் விண்ணில் நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக அதை நோக்கிய பயணம் முன்னெடுக்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அதற்கான விண்கலன்கள் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன. அதற்கான முன்னேற்பாட்டு முயற்சிகள்தான் இப்போது வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.
  • 2023-இல் சந்திரனின் தென் துருவத்தில் விண்கலனை இந்தியா ‘சாஃப்ட் லேண்டிங்’ நடத்தியபோது, உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. இப்போது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளியில் மற்றொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறாா்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
  • விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தை முன்னெடுத்தது இஸ்ரோ. விண்வெளியில் இரண்டு வெவ்வேறு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் அந்த முயற்சி அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி என்கிற இரண்டு விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திருலிந்து ஏவப்பட்டு கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டன.
  • 220 கிலோ எடைகொண்ட அந்த இரண்டு ஸ்பேடெக்ஸ் விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் விண்வெளியில் சுற்றி வந்தன. அந்த இரு விண்கலன்களின் தொலைவை 20 கிலோமீட்டரிலிருந்து படிப்படியாக குறைத்து அவற்றை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைப்பது என்பதுதான் திட்டம். அதற்கேற்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • திட்டமிட்டபடி ஜனவரி 7-ஆம் தேதி ஒருங்கிணைக்க இயலவில்லை. விண்வெளியின் புறச்சூழல் காரணமாக விண்கல இயக்கத்தின் வேகம் எதிா்பாா்த்ததைவிட குறைந்ததால் ஒருங்கிணைப்பு நிகழ்த்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்குத் தீா்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இரண்டு விண்கலன்களுக்கும் இடையேயான தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டு மூன்று மீட்டா் வரை அவை நெருக்கமாகக் கொண்டுவரப்பட்டன. அடுத்தகட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் மிகவும் துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் ஒருங்கிணைக்கப்பட்டன.
  • விண்வெளியில் இதுபோன்ற விண்கலன்களை ஒருங்கிணைக்கும் டாக்கிங் தொழில்நுட்பத்தை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கும் 4-ஆவது நாடாக இந்தியா உயா்ந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மிகக் குறைந்த செலவில் (ரூ.370 கோடி) இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப மேன்மையையும், திறமையையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது.
  • இன்னும் சொல்லப்போனால் இந்தியா சற்று தாமதமாகத்தான், அதுவும் கடந்த பத்தாண்டுகளில்தான் விண்வெளி சாதனைகளில் கூடுதல் முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கிறது. 1966-இல் அமெரிக்காவும், 1967-இல் ரஷியாவும், 2011-இல் சீனாவும், டாக்கிங் சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டன.
  • மிகவும் தாமதமாக இந்தியா முயற்சியில் ஈடுபட்டதற்கு மத்திய அரசின் முனைப்பு இல்லாமல் இருந்ததுதான் காரணம். அது மட்டுமல்ல, முழுக்க முழுக்க அந்நிய தொழில்நுட்பத்தை சாராமல் தங்களது சொந்த முயற்சியில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறாா்கள் என்பதால், காலதாமதம் குறித்த விமா்சனங்கள் அவசியமற்றவை.
  • சீனா விஞ்ஞான ஆய்வுகளுக்காக தனது ஜிடிபியில் 2.4% ஒதுக்கும்போது, நாம் வெறும் 0.64% மட்டுமே ஒதுக்கீடு செய்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இப்போதைய 800 கோடி டாலரிலிருந்து 2040-க்குள் 4,000 கோடி டாலராக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நீண்டகாலமாக இந்திய விண்வெளி ஆய்வுகள் பருவநிலை, வேளாண் தேவைகள், அறிவியல் சாதனைகள் ஆகியவை குறித்து மட்டுமே இருந்ததுபோய் இப்போது ராணுவத்தின் தேவைகளுக்காகவும் முன்னெடுக்கப்படுகிறது.
  • இஸ்ரோவின் புதிய தலைவா் வி.நாராயணன் குறிப்பிட்டிருப்பதுபோல, இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தக் காத்திருக்கிறாா்கள் நமது விண்வெளி விஞ்ஞானிகள். 50 ஆண்டுகளுக்கு முன்னால் செலுத்தப்பட்ட ஆரியபட்டாவில் தொடங்கி, சுதேசி தொழில்நுட்பத்தில், குறைந்த செலவில் இந்த அளவிலான சாதனையை வேறு எந்த நாடும் நிகழ்த்தியதில்லை.
  • இந்த ஆண்டு ககன்யான் திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கிறது. சந்திரனில் இருந்து மண் எடுத்துக் கொண்டுவரும் திட்டமும், செவ்வாயில் விண்கலனை தரையிறக்கும் திட்டமும், சுக்கிரனைச் சுற்றிவர விண்கலனை ஏவும் திட்டமும் பட்டியலில் காத்திருக்கின்றன.
  • சந்திரனிலிருந்து சோதனைக்கு மண் கொண்டுவருவதற்கு ஏவப்படும் சந்திரயான்-4 முயற்சிக்கு முன்னோடியாக, பல முறை ‘ஸ்பேஸ்டாக்கிங்’ சோதனைகள் இஸ்ரோவால் நடத்தப்பட இருக்கின்றன. குறைந்த எரிசக்தி செலவில் இந்திய விண்கலன்கள் ஏவப்படுகின்றன.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பேனல்கள், லித்தியம் அயன் மின்கலன்கள், எரிசக்தி மிச்சப்படுத்தும் திறன்கள் உள்ளிட்டவை இந்திய விண்கலன்களை வித்தியாசப்படுத்துகின்றன. தாமதம் இல்லாமல் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் சாதனை புரிய இஸ்ரோவும், அதனுடன் இந்தியாவும் காத்திருக்கின்றன.

நன்றி: தினமணி (23 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories