TNPSC Thervupettagam

மொராக்கோவில் பாறு கழுகைத் தேடி...

July 20 , 2024 10 hrs 0 min 9 0
  • உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட Community Conservation Fellow-கள் 32 பேரில் நானும் ஒருவராக இருந்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு வகைக் களப்பயிற்சியுடன் International Society for Ethonobiology சார்பாக மொராக்கோ நாட்டில் மராக்கேசு எனும் பண்டைய நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட Biodiversity and Cultural landscape குறித்த பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
  • நிகழ்வுக்காக மொராக்கோவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டபோது நான் போக நினைத்த ஒரே இடம் ஜபல் மூசா. உயிரியல் கண்ணோட்டத்தில் நான் அங்குப் போக நினைத்ததற்கான காரணம்: GREPOM/Birdlife Maroc (https://www.grepom.org/) என்கிற அமைப்பு பாறு கழுகுகளைக் காக்கச் சிரத்தையுடன் அங்கு பணிபுரிந்து வருவதை சி.இ.பி.எப். அமைப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் ஜாக்டுர்டாப் எழுதியிருந்ததை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
  • அந்த அமைப்பு மேய்ப்பர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருவது குறித்தும், அவர்கள் வளர்க்கும் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலை மதிப்புக்கூட்டுவது, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவர்களோடு இணைந்து உயிரினங்கள் பாதுகாப்புத் தொடர்பான பணிகளை முன்னெடுப்பது ஆகிய செயல்களை மேற்கொண்டு வருவதை அறிந்தேன்.
  • நான் சார்ந்திருக்கும் அருளகம் அமைப்பும் அதேபோன்ற வேலைத்திட்டத்தைத் தமிழ்நாட்டில் முன்னெடுத்துள்ளதால், அவர்கள் செய்யும் வேலையைப் பார்த்துக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற விருப்பம் மேலிட்டது. அங்கு போக விரும்பியது குறித்து சி.இ.பி.எப். அமைப்பின் மேலாளர் ஜாக்டுர்டாப்புக்கும் சேவ் அமைப்பின் மேலாளர் கிறிஸ்போடனுக்கும் தகவல் தந்தேன்.

புதிய அனுபவம்:

  • நான் பங்கேற்ற Biodiversity and Cultural landscape மாநாடு முடிந்தவுடன் சகாரா பாலைவனத்தைப் பார்த்துவிட்டுப் பழங்கால ஊர்களான ஃபெஸ், செப்சாவன் வழியாக டெட்டுவான் என்கிற ஊருக்குச் சென்றேன். அங்கிருந்து ஜபல் மூசா செல்ல வழிகேட்டு புரியாமல் போகவே, ரசீத் உதவியை நாடினேன். நான் பயணித்த டாக்சி ஃபனாய்டக் நகரின் மையப்பகுதியில் இறக்கிவிட்டது.
  • நான் போக வேண்டிய இடமோ 17 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அருகிலிருந்த மத்தியத் தரைக் கடல் ஆரவாரமின்றி இருந்தது. அன்றைக்கு ஞாயிறு விடுமுறை என்பதால் இளைஞர்களும் மாணவர்களும் கால்பந்துத் திடலில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.
  • கடந்து சென்ற கடல்காகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 10 நிமிடத்தில் மிட்சுபிசி காரில் ரசீத் வந்தார். என்னை அழைத்துக்கொண்டு, பாறு கழுகுகளுக்கு உணவிடுவதற்காகக் கசாப்புக் கடைக்குச் சென்று இறைச்சியை வாங்கி வண்டியில் ஏற்றினார்.
  • டான்சியர் எனும் துறைமுக நகருக்குப் போகும் வழியில் இரண்டு மாணவர்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து வண்டியை நிறுத்தினார். அரபி மொழியில் அவர்களிடம் பேசிவிட்டுப் பழக்கூழையும் சாக்லேட்டையும் தந்துவிட்டுப் புறப்பட்டார்.
  • இந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்டபோது, இரைகொல்லிப் பறவை ஒன்றின் கூட்டை அவர்கள் புதிதாகப் பார்த்ததாகவும் வேறு யாரும் கூட்டைத் தொந்தரவு செய்யாவண்ணம் தன்னார்வப் பாதுகாவலராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

பரவசக் காட்சி:

  • வானத்தில் பாறுகழுகுகள் வட்டமிடுவதைப் பார்த்துவிட்டு, படம் எடுக்க வண்டியை நிறுத்தலாமா எனக் கேட்டேன். ‘நமது மையத்திற்குச் சென்று எடுத்துக்கொள்ளலாம்’ என்று சொன்னார். ஒற்றையடிப் பாதையில் சென்று பாறு கழுகு மீட்பு மையத்தின் முன் வண்டி நின்றது.
  • வண்டியை விட்டு இறங்கியபோது, என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. அந்த மையத்தில் பாறு கழுகுகளை இயல்பாக வெகு அருகில் பார்க்க முடிந்தது. இது கண்கொள்ளாக் காட்சியாக என்னைப் பரவசப்படுத்தியது.
  • தமிழ்நாட்டில் பாறு கழுகுகளைப் பார்க்க வேண்டும் என்றால் கூடுதல் மெனக்கெடல் வேண்டும். அருகிலிருந்து பார்ப்பதோ சிரமம். அவை உணவு உண்டுகொண்டிருந்தாலும் நம்மைப் பார்த்தவுடன் புறப்பட்டுவிடும். அவை மனித நடமாட்டத்தை விரும்புவதில்லை.
  • ஆனால், இங்கு நேர்மாறாக இருந்தது. திரும்பிய இடமெல்லாம் சுமார் 300க்கும் மேற்பட்ட பாறு கழுகுகளை வானிலும் மரத்திலும் நிலத்திலும் பாறைகளிலும் காணமுடிந்தது. என் வாழ்க்கையில் முதன்முறையாக யுரேசியப் பாறு கழுகு, ருபெல்ஸ் பாறு கழுகு, ஆப்ரிக்க வெண்முதுகுப் பாறு கழுகு ஆகியனவற்றைக் காணும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றேன்.
  • யுரேசியப் பாறு கழுகுகள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தன. தற்போது பாறு கழுகுகள் வலசை வரும் காலம் என்பதால் எண்ணிக்கை அதிகம் என ரசீத் குறிப்பிட்டார். நீலமுகப் பாறு கழுகும் அங்கு அடைக்கலமாகியிருந்தது.

இரையும் பாறுகளும்:

  • நாங்கள் சென்றுசேர்ந்த வேளையில் பன்றியின் சடலம் ஒன்றும் வனத்துறையால் முகாமிற்கு அனுப்பப்பட்டிருந்தது. முகமதியர்கள் பன்றிக் கறி சாப்பிடமாட்டார்கள் என்பதால் முகாமிற்குக் கொண்டுவரப்பட்டுப் பாறு கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது எனத் தெரிந்துகொண்டேன்.
  • அதேபோல கசாப்புக் கடைக்கு மாடுகளை ஏற்றிச்செல்லும்போது இறக்க நேரிட்டாலும் அதுவும் இந்த மையத்திற்கு அனுப்பப்படுகிறது. ஆயினும் இவை யானைப் பசிக்குச் சோளப்பொரி போலத்தான்.
  • பேசிக்கொண்டே அவரது மையத்தைச் சுற்றிக் காண்பித்தார். பார்வையாளர் மாடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி எளிதாகப் பாறு கழுகுகளைப் பார்க்க முடிந்தது. படமும் எடுக்க முடிந்தது. உணவுக்காக ஒன்றுக்கு மற்றொன்று ‘க்கக க்கக’ எனக் கத்திக்கொண்டே போட்டி போட்டுக்கொண்டு உணவை உண்டதைப் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது. மையத்தில் ஒரு கூண்டில் யுரேசியப் பாறு கழுகு பார்க்க நோஞ்சானாக இருந்தது.
  • அதற்குப் புரதக் கலவையுடன் கூடிய ஈரல் உணவு வழங்கப்பட்டது. “சில பறவைகள் கிறுக்குப் பிடித்ததைப் போன்று கிறுகிறுவென்று சுத்திக்கொண்டே இருக்கும். அதுபோன்றவற்றுக்கு இதுபோன்ற ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

அரிய வாய்ப்பு:

  • அவரது ஆய்வகம் மிக எளிமையாக இருந்தது. அவரது மேசையில் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு இருந்த மூன்று சிறுபொறிகளைக் காண்பித்து, “நாளை மூன்று கழுகுகளுக்கு ஜிபிஎஸ் இடங்காட்டிக் கருவி பொருத்தலாம் என இருக்கிறோம்” எனச் சொன்னதும் எனது மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
  • “தமிழ்நாட்டில் பாறு கழுகுகளுக்கும் ஜிபிஎஸ்பட்டைப் பொருத்தி ஆய்வு செய்யவேண்டும் என்பது எமது பல வருடக் கனவு. ஆனால், அதற்கான பயிற்சி எனக்கு வாய்க்கப் பெறவில்லை. இதற்குத்தானே நான் ஏங்கியிருந்தேன் என்று கூறி அவரிடம் எனது ஆர்வத்தைத் தெரிவித்தேன். ‘உறுதியாகச் சொல்ல முடியாது என்று கூறி எனது ஆர்வத்தை மட்டுப்படுத்தினார். ஆயினும்’தொழில்நுட்ப உதவியாளரை நாடிச் செய்ய முயல்கிறேன்” என்றார்.
  • அன்று மாலை ஜிப்ரால்டர் நீரிணைப்பை ஒட்டி அமைந்திருந்த ஹெர்குலசின் தூண்கள் என அழைக்கப்படும் ஜபல் மூசா மலைமுகட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு யுரேசியன் கிரிப்பான் கழுகு கூடு கட்டி அடைக்காத்து வருவதைத் தொலைநோக்கி வழியாகக் காண்பித்தார்.
  • அதைப் பார்த்துப் பார்த்து வியந்தேன். அப்போது அவர் சொன்னது இன்னும் மகிழ்ச்சி தந்தது. இங்கு அது கூடு கட்டியிருப்பதை மொரோக்காவில் தானும் தனது உதவியாளரும் மட்டுமே பார்த்துப் பதிவுசெய்திருப்பதாகவும், இதனைப் பார்த்த மூன்றாவது நபர் நான்தான் எனக் குறிப்பிட்டபோது பெருமிதம் கொண்டேன். அந்த வாய்ப்பை வழங்கியமைக்கு அவர்கள் மொழியில் ‘சுக்ரான்’ என நன்றியையும் தெரிவித்தேன்.

வாழ்நாள் ஆசை:

  • சில நாள்களாக அலுவல் தொடர்பான அழுத்தத்தில் இருந்ததால் இரவு தூங்க நெடுநேரம் ஆனது. மொராக்கோ பயணத்தை இடைநிறுத்தி விடலாமா என்றுகூட யோசித்தேன். மறுநாள் காலையில் எழுந்து அவரைப் பார்த்தபோது, அவர் சொன்ன சொல் என்னை உற்சாகப்படுத்தி, இடைவிடாத அழுத்தத்திலிருந்து என்னை மீட்டெடுத்தது. “இன்று மூன்று கழுகுகளுக்குப் பட்டைப் பொருத்தப்போகிறோம்.
  • அதற்கான ஆயத்த வேலைகள் முடிந்துவிட்டன. உங்களது ஆர்வம் நிறைவேறப் போகிறது” என்றார். இந்த வாய்ப்பை எப்படி வர்ணிப்பது ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ என்றா ‘காகம் உட்காரப் பனம் பழம் விழுந்தது’ என்றா. எனது பயணத்தின் எதிர்பாராத திருப்பமாக இது அமைந்தது.
  • அந்த மையத்தில் இதுவரையிலும் 14 பாறு கழுகுகளுக்கு இது போன்ற கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவை எங்கெங்கு செல்கின்றன என்பது போன்ற தரவுகளைக் கண்காணித்து வருவதாகவும் கூறினார். இதற்கு முன்னர் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பறவை தற்போது செனகல் நாட்டில் சுற்றிக்கொண்டிருப்பதைக் காண்பித்தார். ஜிபிஎஸ் பொறியைப் பொருத்துவதற்கு முன்னர் கணினியில் பல்வேறு ஆயத்தப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.
  • ஜிபிஎஸ் பொறியை எளிதில் அறுபடாத நாடாவில் நாலாபுறமும் கோத்து இறுகக்கட்டி மேசையில் வைத்தார். நிலைய உதவியாளர் ஆப்ரிக்க வெண்முதுகுக் கழுகை லாகவமாகப் பிடித்து எடுத்துவந்தார். பாறு கழுகின் முதுகில் பட்டையைப் பொருத்திக்கச்சையைக் கால்பகுதி வழியாக நுழைத்துப் பறக்கும்போது அவற்றுக்குத் தொந்தரவு நேராவண்ணம் இறக்கையோடு இறக்கையாக ஒன்று சேர்த்துப் பிணைத்தார்.
  • அந்த முடிச்சு அவிழாவண்ணம் பசையை அதில் தடவினார். அதன் இறக்கையில் பசை பட்டுவிடக்கூடாது என்பதால் சிறு அட்டையைக் கீழ்ப்புறம் வைத்துக் கவனமாக அதனைச் செய்தார். கட்டிக்கொண்டிருக்கும்போதே தனது அலகால் அவரது முழங்கையை அந்தப் பாறு கொத்தியது. அதிலிருந்து ரத்தம் ஊற்றெடுத்தது. அதைப் பொருட்படுத்தாமல் தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
  • அன்று இரண்டு ஆப்ரிக்க வெண்முதுகுப் பாறு கழுகுகளுக்குப் பட்டைப் பொருத்தினோம். சினேரியஸ் பாறு கழுகுக்கும் பட்டைப் பொருத்த ஆயத்தமானோம். ஆனால், அதன் எடை 3.45 கிலோ மட்டுமே இருந்ததால் பொருத்துவது எதிர்பார்த்த பலனைத் தராது என நினைத்துக் காலில் வளையம் மட்டும் மாட்டிவிட்டுப் பறக்கவிட்டோம்.

பிறக்கும் நம்பிக்கை:

  • நாங்கள் இதைச் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உணவுக்கான போட்டியில்ஒன்றுடன் மற்றொன்று சண்டையிட்டுக் கொண்டதில் யுரேசியன் பாறு கழுகு ஒன்றின் ஒரு கண் போய்விட்டது. அது வலியால் துடித்து, கண்ணை மூடியபடி இருந்தது. அதனை உடனே எடுத்துவந்த ரசீத் மருந்து தடவி ஊசி செலுத்திக் கட்டுப்போட்டார். அவருக்கு உதவி செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. ஆயினும் மருத்துவ உதவி பலனளிக்கவில்லை. அது சாவைத் தழுவியது.
  • “இங்கு பாறு கழுகுகளுக்கு வேறு என்ன அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன” எனக் கேட்டேன். காற்றாலையில் மோதி இறக்க நேரிடுவது, மின் கம்பியில் மோதி மாண்டு போவது, உணவுக்காக வேட்டையாடப்படுவது, இரைத் தட்டுப்பாடு என ரசீத் அடுக்கினார்.
  • ஒரு முறை ஊடுருவல்காரர்கள் உணவுக்காக 6 பாறு கழுகுகளை வேட்டையாடியதை மேய்ப்பர்கள் பார்த்துவிட்டுச் சொன்னதாகவும் தெரிவித்தார். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா என அனைத்துக் கண்டங்களிலும் பாறு கழுகுகள் பல்வேறு அச்சுறுத்தல்களுடன் போராடி வருகின்றன. ரசீத்தைப் போன்ற நல் உள்ளங்கள் உலகம் முழுக்கப் பணியாற்றுவது மட்டுமே நம்பிக்கை தருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories