TNPSC Thervupettagam

மொழிகளில் பால்புதுமை

July 5 , 2023 493 days 404 0
  • பால்புதுமையினரை அணுகக்கூடிய விதத்தில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், இன்றும் கேலி செய்யக்கூடிய, இழிவுபடுத்தக்கூடிய வார்த்தைகள் பயன்பாட்டில் இருப்பதை மறுக்க முடியாது. பொதுச்சமூகத்தினுடைய அறியாமை அல்லது ஏளனத்தின் வெளிப்பாடாக இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
  • ஒருவரை எப்படி விளிக்கிறோம், சுட்டுவதற்கு எந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதை வலியுறுத்தி, ‘பால் புதுமையினர் ஊடகப் பயிலரங்கு’ சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. ஊடகங்களில் பால்புதுமையினரின் சித்தரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தயாரிக்கப்பட்ட சொற்களஞ்சியம் அடங்கிய ‘பால்புது: ஊடகக் கையேடு’ நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது.

மொழி ஏன் முக்கியம்?

  • பால்புதுமையினரும் பொதுச்சமூகத்தின் அங்கம்தான். மக்களைப் பாதிக்கும் எந்தவொரு விஷயமும் பால்புதுமையினரையும் பாதிக்கும். ஆனால், ஆண் அல்லது பெண் என்கிற இருமைப் பார்வையிலேயே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் குறிப்பிட்ட ஒரு சமூகம், தொடர்ந்து விலக்கிவைக்கப்படுகிறது.
  • பால்புதுமையினர் மீதான வெறுப்பை ஊக்குவிக்கக்கூடிய மொழிப் பயன்பாட்டால் அச்சமூகத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாவது தொடர்கிறது. பொது அறிவிப்புகள், இலக்கியம், விளம்பரங்கள், திரைப்படங்கள் போன்ற துறைகளில் பால்புதுமையினர் பெரும்பாலும் உள்ளடக்கப்படுவதில்லை. இந்நிலை மாறி உருவாக்கப்படும் எழுத்துகளும் சொற்களும் அதிகளவில் பயன்படுத்தப்படும்போது, அனைத்துத் தரப்பின் பிரதிநிதித்துவமும் சாத்தியமாகும்.
  • பால் புதுமையினரைக் கலந்தாலோசிக்காமல் அவர்களை அடையாளப்படுத்தும் சொற்களை அவர்கள் ஆதரிப்பதோ, ஏற்பதோ இல்லை. ‘அரவாணி’ இன்று ‘திருநர்’ எனவும், ‘மூன்றாம் பாலினம்’ இன்று ‘பால்புதுமை’ எனவும் மாற்றமடைந்திருக்கின்றன. இப்படிப் பால்புதுமையை உள்ளடக்கிய சொற்பதங்கள் சார்ந்த புரிதல் கிடைக்கப்பெறுவதற்கு, காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவைப்படுகிறது.

பயன்படுத்த வேண்டிய பதங்கள்

  • கடந்த காலங்களில் சமூகத்தில் வேறுபட்ட பாலின, பாலீர்ப்பு கொண்டவர்கள் ‘குயர்’ என அழைக்கப்பட்டனர். ‘குயர் நபர்’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் பொருள் தேடினால் ‘விசித்திரமான, விநோதமானவர்’ எனப் பொருள் வரும். ஆனால், ‘வேறுபட்டவர்’ என்ற பதத்தைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.
  • உதாரணத்துக்கு, தன்னுடைய பாலினம்மீது ஏற்படும் பாலீர்ப்புத் தன்மையை ‘ஓரினச் சேர்க்கை’ என விளிப்பது தவறு. முறையாக ஒரு பாலீர்ப்பு, தன்பாலீர்ப்பு போன்ற பதங்களைப் பயன்படுத்துவதே சரி. அதைப் போல இருபாலீர்ப்பு, எதிர்பாலீர்ப்பு, அபாலீர்ப்பு போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • இது போன்று யாரையும் சிறுமைப்படுத்தாத, தரப்படுத்தப்பட்ட சொற்கள் புழக்கத்தில் வர வேண்டும். இவற்றை ஊடகங்கள் பயன்படுத்தும்போது பெரும்பான்மை மக்களுக்கும் இந்தச் செய்தி சென்றடையும். பாலினம்சார், பாலியல்புசார் பதங்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற முனைப்பு தன்னளவில் ஒவ்வொருவரிடமும் இருந்து தொடங்க வேண்டும். பேசும்போதும், எழுதும்போதும் தரப்படுத்தப்பட்ட சொற்களைப் பயன்படுத்தும் போது பால்புதுமையினர் மீதான சமூகத்தின் பார்வையும் நிச்சயம் மாறும்.

நன்றி: தி இந்து (05 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories