TNPSC Thervupettagam

மொழிக் கொள்கையை எப்படிக் கையாள்வது?

February 25 , 2025 5 hrs 0 min 16 0

மொழிக் கொள்கையை எப்படிக் கையாள்வது?

  • “தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. ஆகவே, தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்க முடியாது” என்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொழி குறித்த விவாதம் மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது. “மும்மொழிக் கொள்கை என்பது rule of law” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
  • இந்தக் கூற்றை, “மும்மொழிக் கொள்கையைச் சட்ட விதிமுறைகள் என்கிறார் மத்திய அமைச்சர்” எனப் பல தமிழ் ஊடகங்கள் மொழிபெயர்த்தன: Rule of Law என்பது சட்டமும் விதிமுறையும் மட்டுமல்ல, அது சட்டத்தின் மாட்சிமையைக் குறிக்கும். மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம், நமது நாட்டில் சட்டத்தின் மாட்சிமையைப் பேண முடியும் என்பது அமைச்சரின் கருத்தாக இருக்கலாம்.

சட்​டத்தின் மாட்சிமை என்பது என்ன?

  • காலஞ்​சென்ற ஆங்கிலேய நீதியரசர் தாமஸ் பிங்ஹாம் ‘Rule of Law’ என்றே ஒரு நூல் எழுதி​யிருக்​கிறார். அது சிறந்த அரசியல் நூலுக்கான ஆர்வெல் விருது பெற்றது. அதில் பிங்ஹாம் சொல்கிற அடிப்​படைக் கூறுகள் இவை: ஒரு நாட்டில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்களாக இருக்க வேண்டும். சட்டம் எல்லாரது நலனுக்​கானதாக இருக்க வேண்டும். அதன் நற்பயன்களை அனைவரும் துய்க்க வேண்டும்.
  • அதை நீதிமன்​றங்கள் உறுதிப்​படுத்த வேண்டும். இந்த வரையறை​களில் நாம் மும்மொழிக் கொள்கையைப் பொருத்திப் பார்க்​கலாம். ஏன் வேண்டும் மூன்று மொழிகள்? அமைச்சர் சொல்கிறார்: அது புதிய கல்விக் கொள்கையில் இருக்​கிறது. ஆகவே, பின்பற்​றப்பட வேண்டும். அதாவது, அது அரசமைப்புச் சட்டத்தில் இல்லை, மத்திய அரசு வகுத்த ஒரு கொள்கை அறிக்கையில் இருக்​கிறது. அந்த அறிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என்பது கவனிக்​கத்​தக்கது.

ஒரு மொழி...

  • சட்டத்தின் மாட்சிமை பேணப்​படுகிற நாடுகளின் பட்டியலில் முன்பந்​தியில் இருக்கும் நாடுகளுள் ஒன்று ஹாங்காங். நான் 1995இல் அங்கு புலம்​பெயர்ந்​தேன். நான் பணியாற்றிய நிறுவனத்​தில், எனது அணியில் ஒரு வங்கதேச இளைஞரும் இருந்​தார். அவர் வங்கதேசத்​துக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு உடன்படிக்கை ஒன்றின் கீழ் நிதிநல்​கை​யுடன் பெய்ஜிங்கில் படித்​தவர். பெய்ஜிங்கில் பொறியியல் கல்வி ஐந்து ஆண்டுகள். இவர் ஓர் ஆண்டு கூடுதலாக ஆறு ஆண்டுகள் படித்​தார். முதலாண்டு முழுதும் சீன மொழியைக் கற்றார்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகள் பொறியியலைச் சீன மொழியிலேயே கற்றார். அதாவது, பொறியியல் அங்கு சீன மொழியில் மட்டுமே கற்பிக்​கப்​படு​கிறது. பொறியியலை மட்டுமல்ல, பல புத்தம் புதிய கலைகளையும் பஞ்சபூதச் செயல்​களின் நுட்பங்​களையும் அவர்கள் சீன மொழியில்தான் கற்கிறார்கள். போலவே, பல ஐரோப்பிய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மாணவர்கள் அறிவியலையும் தொழில்​நுட்​பத்​தையும் அவரவர் தாய்மொழி​யில்தான் கற்கிறார்கள்.
  • ஹாங்காங்கில் பன்னாட்டுப் பொறியியல் கருத்​தரங்​கு​களில் பங்கேற்றிருக்​கிறேன். கொரியர்​களும் ஜப்பானியர்​களும் ஜெர்மானியர்​களும் அவரவர் தாய்மொழி​யில்தான் பேசுவார்கள். ஒருவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்​பார். இப்போது தொழில்​நுட்பம் வளர்ந்​து​விட்டது. பேச்சாளர் உரையாற்றும்​போதே, அவரவர் தெரிவுசெய்​து​ கொண்ட மொழியில், அந்த உரையைத் தத்தமது செவியோரம் நிகழ்​நேரத்தில் கேட்கலாம்.
  • நான் இந்தியாவில் ஓர் உள்கட்​டமைப்புத் திட்டத்தில் பணியாற்றிய​போது, ஒப்பந்​த​தா​ரர்​களில் ஒரு ரஷ்ய நிறுவனமும் இருந்தது. அதன் இளம் பொறியாளர்கள் ஆங்கிலம் பேசுவார்கள். முக்கியமான கூட்டங்​களுக்கு அதன் தலைமைச் செயல் அலுவலர் வருவார். வரும்போது ரஷ்யத் தூதரகத்​திலிருந்து ஒரு மொழிபெயர்ப்​பாளரையும் அழைத்து வருவார். அவர் ரஷ்ய மொழியில் மட்டுமே பேசுவார்.

இரு மொழி...

  • பல வளர்ந்த நாடுகளில் அனைத்துக் கலைகளையும் முதன்​மையாக ஒரு மொழியில்தான் கற்கிறார்கள். அதற்கேற்​றவாறு தத்தமது மொழிகளை அவர்கள் தகைமைப்​படுத்தி இருக்​கிறார்கள். மாறாக, இந்தியாவில் தமிழ் உள்பட எந்த மொழிக்கும் மெத்த வளர்ந்த மேன்மைக் கலைகளை முழுமை​யாகச் சொல்லும் திறமில்லை.
  • நாம் கண்டிப்​பாகத் தமிழை அதற்கேற்​றவாறு தகைமைப்​படுத்த வேண்டும். அதுவரை உலகெங்கும் ஊடாட, உரையாட நாம் கைக்கொண்​டதுதான் இருமொழிக் கொள்கை. நான் அயல் நாடுகளில் பணியாற்றி​யிருக்​கிறேன். எனது பொறியியல் கட்டுரைகள் பன்னாட்டு ஆய்விதழ்​களில் வெளியாகி​யிருக்​கின்றன. இவையெல்லாம் இருமொழிக் கொள்கை மூலமே இயல்வ​தா​யிற்று.
  • இந்திய மாநிலங்​களிடையே தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்​கிறது. உயர்நிலைப் பள்ளி​களில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்​களின் மொத்தச் சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio-GER) 2020-21இல் 27%. இது இந்தியச் சராசரி. இதை 2035இல் 50% ஆக்க வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கையின் இலக்காகும். ஆனால் இப்போதே தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளியை முடிப்​பவர்​களில் 47% பேர் கல்லூரிக்குப் போகிறார்கள் (உ.பி 22%, பிஹார் 19%). மாநிலங்​களுக்கு இடையில் பாரிய ஏற்றத்​தாழ்வு நிலவு​கை​யில், நாடு முழுமைக்​குமான ஒரே கொள்கை பொருத்தமாக இராது.

மும்மொழி:

  • என் நண்பர் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்​தார். முதலா​வதாக, கா.அப்​பாதுரை, தெ.பொ.மீ​னாட்சி சுந்தரம், மு.கு.ஜகந்நாத ராஜா முதலியோ​ருக்குப் பிற மொழி இலக்கி​யங்​களில் இருந்த புலமையைச் சுட்டிக்​காட்டி, அவர்களை நாம் முன்னு​தா​ரண​மாகக் கொள்ள வேண்டாமா என்று கேட்டிருந்​தார். அவர்கள் மும்மொழிகளில் மட்டுமல்ல, பல மொழிகளில் புலவர்கள்.
  • இப்போது பல்வேறு இந்திய மொழிகளில் இருந்தும் பிரெஞ்சு, ஜெர்மன், சீனம், ஸ்பானியம் முதலான அயல் மொழிகளில் இருந்தும் சிறந்த இலக்கி​யங்களை நேரடி​யாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தருவோர் நம்மிடையே இருக்​கிறார்கள். திருக்​குறள் சுமார் 60 மொழிகளில் வெளியாகி​யிருக்​கிறது. இதைச் செய்வோர் மொழியியல் அறிஞர்கள். நாம் அறிஞர்​களைப் பற்றியல்ல, சராசரி மாணவர்​களைப் பற்றித்தான் பேசிக்​கொண்​டிருக்​கிறோம்.

என்ன செய்ய​லாம்?

  • தமிழோடும் ஆங்கிலத்​தோடும் கூடுதலாக இன்னொரு இந்திய மொழியைக் கற்கச் சொல்கிறது புதிய கல்விக் கொள்கை. அதற்கான அவசியம் இருந்​தால், அந்த மூன்றாவது மொழி தமிழையும் ஆங்கிலத்​தையும் விஞ்சக்​கூடியதாக இருந்​தால், அதன் மூலம் வாழ்க்கைத் தேவைகள் நிறைவேறு​மா​னால், தமிழர்கள் யார் சொல்வதற்​காகவும் காத்திருக்க மாட்டார்கள், தாமே கற்றுக்​கொள்​வார்கள்.
  • தனது Rule of Law நூலில் பிங்ஹாம் சொல்கிறார்: அமைச்​சர்​களும் அலுவலர்​களும் தங்கள் அதிகாரத்தை நல்ல நோக்கத்​துடனும் நியாய​மாகவும் பயன்படுத்த வேண்டும்; வரம்பு மீறுதல் கூடாது. அனைத்துத் தரப்பினரின் உரிமை​களையும் சட்டம் பாதுகாக்க வேண்டும்.
  • இந்திய அளவில் தமிழகம் கல்விப் புலத்தில் சாதித்​திருக்​கிறது. ஆனால், பன்னாட்​டளவில் நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். தமிழ்​நாட்டுக்கு என மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிப்​பதில் மாநில அரசு ஏற்கெனவே இறங்கி​விட்டது. டெல்லி உயர் நீதிமன்​றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவின் அறிக்கை, தமிழக முதல்​வரிடம் 2024இலேயே வழங்கப்​பட்டு​விட்டது. கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி, மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள கல்வி​யாளர்கள் தொடர்ந்து வலியுறுத்து​கிறார்கள். இதில் ஒருமித்த முடிவு காண அனைவரும் முன்வர வேண்டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories