கல்வியின் தத்துவம்
- பல்கலைக்கழகங்களின் முன்னுள்ள அடிப்படைத் தத்துவங்கள்தான் யாவை? மாணவர்களின் அறிவுத் தாகத்தினைத் தக்க விதத்தில் தீர்த்திடல் வேண்டும். அறிவின் பல்வேறு கூறுகளையும் தெரிந்து தெளிய வழிகாட்டிடல் வேண்டும், கருத்துத் தெளிவும் சுதந்திரமும் செயல்திறனும் மிக்கோராய் வாழ்ந்திடும் உளப்பாங்கும் உறுதியும் மாணவர்களிடத்தில் மெத்தவும் அமைந்திடல் வேண்டும்.
- சமரச நோக்கம், பரந்த மனப்பான்மை, சத்துள்ளது எது, சாரமற்றது எது, என்றெதையும் பகுத்துணரும் போக்கு, எந்தப் பிரச்சினையையும் அச்சம், தயை தாட்சண்யம், விருப்பு வெறுப்பற்ற நிலையில் நோக்கிடும் நெஞ்சு வலிமை, மற்றவர்களது கருத்தையும் கண்ணோட்டத்தையும் மதித்து நடந்திடும் நாகரிகத் திறன், நன்னெறியினை விட்டகலாச் சான்றாண்மை ஆகிய அருங்குணங்களே மனித வாழ்க்கையின் மாறாத அடிப்படைத் தத்துவங்களாக அமைந்துள்ளன.
- இப்படிப்பட்ட தத்துவங்களையெல்லாம் மாணவர்களிடம் ஊட்டி வளர்த்து, பக்குவப்படுத்திப் பயிற்றுவித்து, ஆண்டுதோறும் பட்டதாரிகளாக, நல்வழி காட்டிடும் குடிமக்களாக உருவாக்கிடும் நற்பணிதான் பல்கலைக்கழகங்களில் தொடர்கிறது. மேலும் சீரும் சிறப்புமாகத் தொடர்ந்திடவும் வேண்டும். (11.1967)
மொழித் திணிப்பு
- எந்த மொழியையும் கற்பதில் தமிழர்கள் சாமர்த்தியசாலிகள் என்று இங்கு குறிப்பிட்டார்கள். சாமர்த்தியம் வேறு, கட்டளை வேறு. ஒரு மொழி (இந்தி) படித்தால்தான், இந்தியாவில் வாழ முடியும் என்பது கட்டளை. அதேபோல் படிப்பது வேறு, திணிப்பது வேறு. தாய் வலுக்கட்டாயமாக உணவைக் கொடுத்தால் குழந்தைகூட அதைத் துப்பிவிடுகிறது. அதனால்தான் மொழி விஷயத்தில் வலுக்கட்டாயம் கூடாது என்று தமிழக மாணவர்கள் ஓரணியாய்த் திரண்டு நிற்கிறார்கள். அவர்களிடம் தமிழ்ப்பற்றையும் வளர்ச்சியையும் காண்கிறோம். நாம் மொழி விஷயத்தில் கண்விழிப்புடன் இருந்தால், நமது தாய்மொழி காக்கப்படுகிறது - வளர்ச்சியடைகிறது. ( 12.1967)
ஏன் இவ்வளவு தேர்வுகள்?
- கல்வித் துறையில் இன்று நாளுக்கு நாள் பற்பல பரீட்சைகள் - அனாவசியமாக என்றுகூடச் சொல்வேன் - பல்வேறு பரீட்சைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விதமான பரீட்சைகள் நாம் வரவேற்கத் தகுந்த நிலையில் இல்லை. மனிதனுடைய வாழ்நாள் பூராவுக்கும் அவர்கள் ஒரே அடிப்படையில் இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், அவ்விதம் இருக்க முடியாது என்பதை நாம் கண்டுவருகிறோம். இப்போதுள்ள முறையில் மாற்றம் காண வேண்டும் என்றுள்ள கருத்து சர்க்காருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. (07.1957)
நன்றி: இந்து தமிழ் திசை (24-07-2019)