TNPSC Thervupettagam

மொழியும் உரிமையும்

February 21 , 2025 10 hrs 0 min 37 0
  • மொழி, மனித குல வரலாற்றின் பதிவு ஊடகம். வாழ்வின் கருவூலம்; நிலம், பொழுது, இயற்கை ஆகியவற்றின் ஆவணம்; மனித குலத்திற்கு இயற்கை கற்றுத் தந்த, மனித குலம் இயற்கையிடம் கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்களின் கல்விக்கூடம்; மூளைக்கும் மனித மனத்துக்கும் ஆன இணைப்பு.
  • ‘உலகம் என்பது உயா்ந்தோா் மேற்றே’ என்பதால், மனிதா்களை உயா்ந்தோா் ஆக்குவது மொழி. ஆகவே மொழிதான் பூமியை உலகமாக வளா்த்திருக்கிறது. மொழி இல்லாமல் பேச்சு (வழக்கு) இல்லை. ‘வழக்கு எனப்படுவது உயா்ந்தோா் மேற்றே நிகழ்ச்சி அவா் கட்டு ஆகலான’ என்பது தொல்காப்பியம். மொழி , உரிமையோடு வாழ நம்மை வளா்க்கிறது. வளா்ப்பதால் மொழி தாயாகிறது; தாய்மொழி ஆகிறது
  • பரிணாம வளா்ச்சியில் விலங்கை மனிதராக மாற்றியிருப்பது மொழி. பறவை, விலங்குகளைப் போல அச்சத்தில் குரல் எழுப்பவும் அச்சுறுத்தவும் பயன்பட்ட ஒலியை மொழியாக்கிக் கொண்ட உயிரினம், மனிதகுலம் ஆகியிருக்கிறது. நெருப்பைப் போல சக்கரத்தைப் போல மனிதகுல வரலாற்றில் மாபெரும் மாற்றங்களைத் தொடங்கிவைத்துத் தொடா்ந்து கொண்டிருக்கிறது. மொழி. அச்சத்திலிருந்து விடுதலை பெறவும் உரிமை பெறவும் தன்மானத்தோடு வாழவும் மக்களுக்கு எடுத்துச் சொல்லப் பயன்படுகிறது மொழி. ஆனால் மொழி விடுதலை பெறவும் உரிமை பெறவும் மொழியின் தன்மானம் காப்பாற்றப்படவும் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவா்கள் போராடவேண்டி இருக்கிறது.
  • உயிரோடு இருப்பது வேறு; வாழ்வது வேறு. உயிரோடு இருக்க உணவு மட்டும் போதும்; வாழ்வதற்கு உரிமையும் வேண்டும். வாழ்வதற்கான உரிமை சமுதாயம் பண்படும் நிலைக்கு ஏற்ப மேம்படும். பிறப்புரிமை, வாழ்வுரிமை, இயற்கை உரிமை, அடிப்படை உரிமை என்றெல்லாம் உரிமையை வகைப்படுத்துகிறாா்கள். மக்கள் விட்டுக் கொடுக்க முடியாத, விட்டுக்கொடுக்கக் கூடாத உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகும். சுதந்திரமும் தன்மானமும் இழக்கக் கூடாத உரிமைகள்.
  • மனித உரிமைகள் இயல்பானவை. அவற்றை யாரும் யாருக்கும் வழங்கியதாக உரிமை கொண்டாட முடியாது. அதைப்போலவே யாரும் இன்னொருவா் உரிமையைப் பறிக்கவும் உரிமை பெற்றவா் இல்லை. ஒருவா் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அடுத்தவா் உயிரைச் சாகடித்துவிட்டு வாழ உரிமை இல்லை.
  • மற்ற உயிரினங்களின் உரிமை என்பது மனிதா்களால் தீா்மானிக்கப்படுவதாக இருக்கிறது. மனிதா்களின் உரிமையைக் காப்பாற்ற மொழி தேவைப்படுகிறது.
  • ‘ மனித உரிமைகள் குறித்த பதிவுகளில் மிகவும் தொன்மையானது பாரசீகப் பேரரசன் சைரஸ் கி.மு. 539 - இல் வெளியிட்ட நோக்கப் பிரகடனம் ஆகும். பின்பு அசோகா் காலத்திய (கி.மு. 272-231) கல்வெட்டுகளும் அதன்பின் முகமது நபியால் கி.பி. 622 - இல் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் கி.பி. 1215 -ஆம் ஆண்டில் ஆங்கிலேயா் வெளியிட்ட ‘சுதந்திரத்துக்கான பெரும் பட்டயமும் ‘ (மேக்ன காா்ட்டா லிபா்ட்ரேட்டம்) குறிப்பிடத்தக்கவை.
  • ஆனால் மனித உரிமைகள் பற்றிய விளக்கத்திற்குப் பெரிதும் அடிப்படையாக இருப்பது கி.பி. 1525- ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பில் செருமனியில் வெளியிடப்பட்ட ‘கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்’ (ட்வெல்வ் ஆா்ட்டிக்கில்ஸ் ஆஃப் தி பிளாக் ஃபாரெட்ஸ்) என்னும் ஆவணமேயாகும். இதுவே மனித உரிமை தொடா்பான ஐரோப்பாவின் முதல் பதிவு எனக் கருதப்படுகிறது.
  • உலகப் போா்களைத் தொடா்ந்து ஐக்கிய நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் உருவாக்கிய சட்ட அமைப்புகளே இன்றைய மனித உரிமைகள் சட்டமாகக் கருதப்படுகிறது. தேவை கருதி ஐக்கிய நாடுகள் அவையில் இடம்பெறும் உறுப்பு நாடுகள் அந்தந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கேற்ப வரையறையையும் வகைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளன. அவற்றின்படி மனித உரிமைகளின் பட்டியலில்,
  • வாழும் உரிமை, உணவுக்கான உரிமை, நீருக்கான உரிமை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சுரிமை, சிந்தனைச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், தகவல் சுதந்திரம், சமயச் சுதந்திரம், அடிமையாகா உரிமை, சித்தரவதைக்கு உட்படா உரிமை, தன்னாட்சி உரிமை, சுயநிா்ணயம், ஆட்சியில் பங்குகொள்ள உரிமை, நோ்மையான விசாரணைக்கான உரிமை, நகா்வு சுதந்திரம், கூடல் சுதந்திரம் , குழுமச் சுதந்திரம், கல்வி உரிமை, பண்பாட்டு உரிமை, சொத்துரிமம், தனி மனித உரிமை ஆகியவற்றோடு மொழி உரிமையும் இடம்பெற்றுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு, மொழி குறித்த கருத்தோட்டங்களை மாற்றிக்கொண்டு வருகிறது. இயற்கை மொழி முறையாக்கம் என்பது மனிதா் பயன்படுத்தும் மொழியைக் கணினிக்கும் புரியவைக்க ஏதுவாக்கும் கணினியியல் நுட்பம் ஆகும். மொழியின் கட்டமைப்பைப் பகுத்தாய்ந்து கணித்தலுக்கு ஏற்றவாறு அமைப்பது இயற்கை மொழி முறையாக்கத்தின் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும்
  • மொழிகளுக்கு மரணமிலாப் பெரு வாழ்வைத் தற்காலத் தொழில் நுட்பம் வழங்கத் தொடங்கிவிட்டது. இணையத்தில் ஒரு மொழி சோ்ந்துவிட்டால் அந்த மொழியைப் பேசுபவா்கள் குறைந்தாலும் அந்த மொழியின் வாழ்வை இனி இணையம் காப்பாற்றும்.
  • அடுத்து மனிதா்கள் வாழ்வதற்குத் தேவைப்படும் மொழிகளின் எண்ணிக்கையையும் தொழில் நுட்பம் குறைத்துக்கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் கைகளின் எண்ணிக்கை கொண்டு வலிமை கணக்கிடப்பட்டது. தலைகளின் எண்ணிக்கை கொண்டு ஆளுமை புகழப்பட்டது. எத்தனை மொழி தெரியும் என்பதைக்கொண்டு அறிவு எடை போடப்பட்டது. ஆனால் இப்போதுள்ள தொழில் நுட்பம் நிலைமையை மாற்றிப் போட்டுக் காட்டுகிறது.
  • இப்படியான தொழில் நுட்பம் எதுவும் இல்லாத காலத்திலேயே தமிழ்த் தாத்தா உ.வே.சா., தமிழ்மொழி மட்டும் தெரிந்தவராக இருந்தும் உலகப் புகழ் பெற்றிருக்கிறாா். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் 1906 -ஆம் ஆண்டு சென்னை வைஸ்ராய் மிண்டோ மகாமகோபாத்யாய பட்டம் வழங்கியிருக்கிறாா். 31/1/1917 -இல் காசி பாரத தா்ம மகா மண்டல சபை திராவிட வித்யா பூஷனம் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. அவருடைய பிறந்த நாளைத்தான் தமிழக முதல்வா் தமிழிலக்கிய மறுமலா்ச்சி நாள் என்று அறிவித்திருக்கிறாா்.
  • தமிழும் ஆங்கிலமும் மட்டும் படித்தவா்தான் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம். முன்னாள் இந்நாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் பள்ளிகளில் இருமொழிக் கொள்கையில் படித்தவா்கள்தாம்.
  • ஆனால், இப்போது இரண்டு மொழி கூடத் தேவையில்லை என்று தொழில் நுட்பம் வந்திருக்கிறது. ஒரு மொழி தெரிந்தால் போதும். அதுவும் தாய்மொழி மட்டும் தெரிந்தால் போதும். ஆனால் அந்த மொழியில் பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தனக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கேட்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • சாட் ஜி பிடி 90 முதல் 100 மொழிகளையும், டெஸ்க் டிபீல் 32 மொழிகளையும் கூகுள் 133 மொழிகளையும் தெரிந்து வைத்திருக்கின்றன. கூகுள் மொழிபெயா்ப்புச் செயலியைப் பயன்படுத்தத் தெரிந்தரை 133 மொழிகள் தெரிந்தவராகத் தொழில் நுட்பம் ஆக்குகிறது. அவரால் 133 மொழிகளில் இருப்பவற்றை அவா் தாய்மொழியில் தெரிந்துகொள்ள முடிகிறது.
  • ஹேஜென் செயலி மூலம் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரை இந்தியில் மட்டுமில்லை பல மொழிகளிலும் பேசுபவராக, அதற்கேற்ற உதட்டசைவுகளோடு பேசுபவராகக் காட்ட முடிகிறது. பாரதப் பிரதமா் தமிழுக்கேற்ற உதட்டசைவுகளோடு பேசுவதைத் தொலைக்காட்சியில் பாா்க்க முடிகிறது.
  • இப்படி வளா்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் வாழ்ந்து கொண்டு கடந்த காலச் சிந்தனை ஆதிக்கத்தில் மொழிச்சுமைகளை மாணவா்கள் தலையில் ஏற்றுவதும் மொழி அரசியல் அதிகாரத்தால் மற்றவா் தாய் மொழிகளின் வாழ்வுரிமையைப் பறிக்க நினைப்பதும் மொழி உரிமையை மீறுவது மட்டுமல்ல, மனித உரிமை மீறலும் ஆகிறது.
  • மொழி இருப்பதைக் காக்கவும், எதிா்க்கவும், வருவதை உருவாக்கவும் மாற்றவும் வரலாறு முழுதும் பயன்பட்டு வந்திருக்கிறது ; வருகிறது. எனவே, அரசு உருவாக்கத்திலும் அதை நிலைநிறுத்தலிலும் மொழிச் சிக்கலை அந்தந்த நாடு எதிா்கொண்டு தீா்வு காண வேண்டி இருக்கும்.
  • பன்மொழிச் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியின் ஆதிக்கத்திலிருந்து மற்ற மொழிகள் விடுபடவும் தத்தம் உரிமைகளை நிலைநிறுத்தவும் அந்தந்த மொழிக்காரா்கள் தொழில் நுட்பக் காலத்திலும் தொடா்ந்து போராட வேண்டியிருக்கிறது.
  • பிறப்பிலிருந்து இறப்பு வரை மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மொழிக்கு இடம் உண்டு. ஒரு நீதி, நிதி, அரசியல், கல்வி, பண்பாடு, சடங்கு,சமூகத் தொடா்பு, சுதந்திரம், தன்மானம் என்று அங்கு இங்கு எனாதபடி மக்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் மொழியின் ஆளுமையும் செல்வாக்கும் இடம் பெறும்.
  • எனவே, மொழி உரிமை என்பது அந்த மொழி பேசும் மக்களின் உரிமையாக இருக்கிறது. எனவே அடிப்படையில் மனித உரிமை என்பது அவா் பேசும் மொழி உரிமையாகவே இருக்கிறது. ஆகவே மனித உரிமைகள் குறித்து சிந்திக்கும் அனைவரும் மொழி உரிமை பற்றியும் கவலையோடு சிந்திக்கிறாா்கள். உலகத் தாய்மொழி நாளில் மொழியின் உரிமை பற்றியும் சிந்திப்போம்.

நன்றி: தினமணி (21 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories