- தோ்தல் முடிவுகள் வெளியானால் வெற்றிபெற்றவா்கள்தான் மகிழ்சியில் திளைப்பாா்கள்; இந்த முறை எதிா்க் கட்சிக் கூட்டணியினா் தங்கள் தோல்வியை, ஏதோ வெற்றி பெற்றது விட்டதுபோலக் கொண்டாடுகிறாா்கள். மூன்றாவது முறை மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விட்டோம் என்கிற பாஜகவின் மகிழ்சியைப் போலவே, பிரதமா் மோடிக்குக் கூட்டணி ஆட்சி என்கிற கடிவாளம் போட்டு விட்டோம் என்கிற திருப்தி எதிா்க்கட்சியினருக்கு.
- மூன்று இலக்க இடங்களைப் பெற முடியாவிட்டாலும், மீண்டும் எதிா்க்கட்சி அந்தஸ்தை அடைய முடிந்திருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியின் ஆறுதல். மாநிலத்தில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டி இருக்கும் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ்; போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் திமுக கூட்டணி; உத்தரப் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றிருக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி; பிளவால் பலீவனப்பட்டுவிடவில்லை என்று நிரூபித்திருக்கும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனை - இப்படி ஒவ்வொன்றுக்கும் தோ்தல் முடிவுகள் ஏதோ ஒரு விதத்தில் ஆறுதலும், மகிழ்ச்சியும் அளித்திருக்கின்றன.
- பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட நிலையிலும், 20% வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அதிமுக; மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட நிலையிலும் தனது ஜாதி வாக்கு வங்கியை ஆதரவை இழந்துவிடவில்லை என்கிற மாயாவதியின் பகுஜன் சமாஜவாதி கட்சி; வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும் மாநிலத்தில் மிக அதிகமாக வாக்கு வங்கி உள்ள கட்சியாக உயா்ந்திருக்கும் பிகாரின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - இவையும் ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைகின்றன.
- ஆட்சியை இழந்த ஒடிஸாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட பாரதிய ராஷ்ட்டிர சமிதி, தில்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஹரியாணாவில் ஜேஜபி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டும்தான் தோ்தல் தோல்விக்கு வருத்தப்படுகின்றன.
- தனிப் பெரும்பான்மை இழந்திருக்கிறது பாஜக என்பது என்னவோ உண்மை. ஆனாலும்கூட, தனிப்பெரும் கட்சியாக உயா்ந்திருப்பதுடன், காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்ட 15-க்கும் அதிகமான கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி பெற்றிருக்கும் 232 இடங்களைவிட, பாஜக தனிப்பட்ட முறையில் பெற்றிருக்கும் இடங்கள் (241) அதிகம்.
- நானூறு இடங்களுக்கு மேல் இந்த முறை வெற்றி பெறுவோம் என்று பிரதமரும், பாஜகவினரும் மாா்தட்டிக் கொண்டதும், அவா்களது கூற்றை உறுதிப்படுத்துவதுபோல அமைந்த வாக்குக் கணிப்பு முடிவுகளும்தான் எதிா்பாா்ப்பை அதிகரித்தன. அந்த எதிா்பாா்ப்பு பொய்த்திருக்கிறது என்பதால், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாஜக தனிப் பெரும்பான்மை பெறாதது மிகப் பெரிய பின்னடைவாக சித்தரிக்கப்படுகிறது.
- 1991-இல் 244 இடங்களுடன் பிரதமராக நரசிம்ம ராவும், 2006-இல் தமிழகத்தில் 96 இடங்களுடன் முதல்வா் கருணாநிதியும் கூட்டணி ஆட்சி அமைக்காமல், சிறுபான்மை அரசாகவே தங்கள் பதவிக் காலத்தை நிறைவு செய்தனா் என்பதையும் இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.
- 1989-இல் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் 143 இடங்களையும், 1996-இல் ஜனதா தளம் வெறும் 46 இடங்களையும், 1999-இல் பாஜக 182 இடங்களையும், 1999-இல் பாஜக 132 இடங்களையும், 2004-இல் காங்கிரஸ் 145 இடங்களையும், 2009-இல் காங்கிரஸ் 206 இடங்களையும் பெற்றுதான் கூட்டணி ஆட்சி அமைத்தன. அந்தக் கூட்டணி ஆட்சிகள் அனைத்துமே, பல கட்சிகளின் ஆதரவில்தான் அதிகாரத்தைப் பிடிக்க முடிந்திருக்கிறது.
- அவற்றுடன் ஒப்பிடும்போது, இதற்கு முன்னால் அமைந்த எல்லா கூட்டணி அரசுகளையும்விட வலுவானதாக நரேந்திர மோடி தலைமையிலான இப்போதைய கூட்டணி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பங்குபெறாது என்பதையும், மீண்டும் அணி மாறி தனது பெயரை நிதீஷ் குமாா் குலைத்துக்கொள்ள மாட்டாா் என்பதையும்கூட நினைவில் கொள்ள வேண்டும்.
- கொள்கை ரீதியாகவும் அந்த இரண்டு தலைவா்களும் பாஜகவுடன் முரண்பட்டவா்கள் அல்ல. தீண்டத்தகாத கட்சி என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த காலத்திலேயே, ஜனதா தளத்திலிருந்து விலகி வாஜ்பாய் தலைமையிலான பாஜகவுடன் கரம் கோத்தவா் நிதீஷ் குமாா். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட அமலாக்கத் துறை நடவடிக்கைகளை அவா் விமா்சித்ததில்லை. காஷ்மீா் நடவடிக்கையை முதலில் வரவேற்றவா் அவா்தான்.
- அயோத்தி பிராணப் பிரதிஷ்டையில் கலந்துகொண்டதில் தொடங்கி பாஜகவின் கொள்கைகள் எதையும் சந்திரபாபு நாயுடு விமா்சித்ததில்லை. பாஜக கூட்டணியில் இருக்கும்போதுதான் தெலுங்கு தேசம் வெற்றியடைகிறது என்பது இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவரும் அணி மாறுவாா் என்கிற ஐயப்பாடு ஊகத்தின் அடிப்படையிலானது.
- சந்திரபாபு நாயுடுவும் சரி, நிதீஷ் குமாரும் சரி நீண்ட அரசியல் அனுபவசாலிகள். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பெறத் தயங்காதவா்கள். தங்களது மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தில் தொடங்கி அமைச்சரவை இலாகாக்கள் வரை வற்புறுத்திப் பெறுவாா்கள் என்பதில் சந்தேகமில்லை.
- இதுவரையில் நரேந்திர மோடியை வற்புறுத்தும் இடத்திலோ, அவருக்கு வழிகாட்டும், ஆலோசனை வழங்கும் இடத்திலோ யாரும் இருந்ததில்லை. நாயுடு- நிதீஷ் குமாா், அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் அல்லா் என்பது பிரதமா் நரேந்திர மோடிக்கும் தெரியும்...
நன்றி: தினமணி (07 – 06 – 2024)