TNPSC Thervupettagam

மௌனம் கலைக்கும் தீா்மானம்

August 1 , 2023 342 days 241 0
  • பொதுத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரின் 23 நாள்களில் 17 அமா்வுகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
  • ஆட்சியின் பதவிக்காலம் முடிவதற்குள், தான் கொண்டுவர விரும்பும் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ள அரசுத் தரப்பும், அரசுக்கு தா்மசங்கடம் ஏற்படுத்தும் மக்கள் பிரச்னைகளுக்கு ஆட்சியாளா்களைப் பொறுப்பேற்க வைப்பதில் எதிா்க்கட்சிகளும் முனைப்பு காட்டுவது இயல்பு.
  • எதிா்பாா்த்ததுபோல, மழைக்காலக் கூட்டத்தொடா், செங்கோல் நிறுவப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடக்கவில்லை. இன்னும் சில பணிகள் முடியவில்லை என்று காரணம் கூறப்படுகிறது. புதிய கட்டடத்தில் தொடங்கும் முதல் கூட்டத்தொடரே கூச்சல், குழப்பம், அமளியில் ஆழ்ந்துவிடலாகாது என்கிற நல்லெண்ணம் காரணமாகவும் புதிய கட்டடத்தில் அவை கூடுவது தவிா்க்கப்பட்டிருக்கலாம். அதனால், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் கடைசிக் கூட்டத்தொடராக இது இருக்கக்கூடும்.
  • தோ்தலுக்கு முந்தைய கூட்டத்தொடா்களில்தான் மிக முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். 2013, 2018 போலவே 2023 மழைக்காலத் தொடரும் புதிய பல மசோதாக்களை எதிா்கொள்கிறது. ஆனால், இப்போதைய மழைக்காலக் கூட்டத்தொடா் முக்கியமான சில தேசியப் பிரச்னைகளாலும் முக்கியத்துவம் பெறுகிறது. விலைவாசிப் பிரச்னை, மணிப்பூா் பிரச்னை, எல்லையில் தொடரும் பதற்றம், எதிா்க்கட்சிகள் மீது நடத்தப்படும் அமலாக்கத் துறை சோதனைகள் போன்றவை அரசுக்கு எதிராகத் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பீரங்கிகள்.
  • அரசை விவாதத்துக்கு இழுத்திருக்க வேண்டிய எதிா்க்கட்சிகள், மணிப்பூா் பிரச்னை குறித்துப் பிரதமா் நாடாளுமன்றத்தில் நேரில் விளக்கம் தர வேண்டும் என்று வற்புறுத்தியதை ஆளும் கட்சி தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள விரும்பியது. அவைக்கு வெளியே மணிப்பூா் குறித்துப் பேசிய பிரதமா் அவையில் தனது கருத்தைப் பதிவு செய்யாதது எதிா்க்கட்சிகளை அமளியில் ஈடுபட வைத்தது. ஏனைய பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மணிப்பூா் மட்டுமே முன்னுரிமை பெறும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
  • மணிப்பூா் குறித்து பிரதமரைப் பேச வைக்க முடியாத நிலையில், எதிா்க்கட்சிகள் இப்போது நம்பிக்கையில்லாத் தீா்மான அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் கௌரவ் கோகோய் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை அவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்றுக்கொண்டிருக்கிறாா்.
  • காரசாரமான விவாதத்துக்குப் பிறகு நடத்தப்படும் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடையும் என்பது எதிா்க்கட்சிகளுக்குத் தெரியும். ஆனால், பிரதமா் மோடி அதற்கு பதிலளித்துப் பேசியாக வேண்டும் என்பதுதான் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் நோக்கம்.
  • நம்பிக்கையில்லாத் தீா்மானம் என்பது அரிதிலும் அரிதாகக் கையாளப்படும் அஸ்திரம். அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால் அது தோல்வியில் முடியும். பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் எழுப்பப்படும்போது அதன் வீரியம் குறைந்துவிடும் என்பதால், பெரும்பாலும் தனித் தனியாக விவாதிக்க அரசை நிா்பந்திப்பதுதான் புத்திசாலித்தனம் என்று எதிா்க்கட்சிகள் கருதுவது வழக்கம். வேறு வழியில்லாதபோது மட்டுமே நம்பிக்கையில்லாத் தீா்மானம் முன்னெடுக்கப்படும்.
  • மணிப்பூா் பிரச்னையில் பிரதமரை எப்படியும் அவையில் பேச வைக்க வேண்டும் என்பதுதான் எதிா்க்கட்சிகளின் குறிக்கோள். அதற்குச் சில காரணங்கள் உண்டு. மணிப்பூரின் பழங்குடியினரைப் பாதுகாக்காத மோடி அரசுக்கு ஆதரவளிக்க சில ஆளும் கூட்டணிக் கட்சிகள் தயங்கக்கூடும்.
  • ஏற்கெனவே மிஜோ தேசிய முன்னணி, பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டிருக்கிறது. நாடு தழுவிய அளவில் மோடி அரசு பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் எதிரான அரசு என்கிற தோற்றத்தை நம்பிக்கையில்லாத் தீா்மானம் மூலம் ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முனைந்திருக்கின்றன.
  • 2003 மழைக்காலக் கூட்டத்தொடரில் அன்றைய வாஜ்பாய் அரசுக்கு எதிராக சோனியா காந்தியும், 2018 மழைக்காலக் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசத்தின் கேசினேநி சீனிவாஸும் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் போலவே, இப்போது கௌரவ் கோகோய் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீா்மானமும் தோல்வியடையக் கூடும். ஆனால், கடந்த நான்கரை ஆண்டு நரேந்திர மோடி அரசின் குறைகளும், தவறுகளும் பட்டியலிடப்பட்டு, அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படும் என்கிற அளவில், எதிா்க்கட்சிகளுக்கு அது வலு சோ்க்கும்.
  • நம்பிக்கையில்லாத் தீா்மானம் என்பது இருபுறம் கூா்மையான வாள் போன்றது. எதிா்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் தவறுகளையும், குறைகளையும் ஆதாரங்களுடன் தங்களது வாதத் திறமையால் பட்டியலிட்டு, ஆட்சியின் தோல்வியை வெளிச்சம் போட முடியும். அதே நேரத்தில், பிரதமரும் ஆளுங்கட்சியும் தகுந்த விளக்கங்களையும், தங்கள் தரப்பு வாதத்தையும் முன்வைத்து எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முனைமழுங்கச் செய்யவும் முடியும்.
  • அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி மக்கள் கவனத்தை ஈா்ப்பதைவிட, நம்பிக்கையில்லாத் தீா்மான விவாதம் மூலம் அரசை தா்மசங்கடத்தில் ஆழ்த்த முற்பட்டிருப்பது எதிா்க்கட்சிகளின் சாதுா்யமான முடிவு. நம்பிக்கையில்லாத் தீா்மான விவாதத்துக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.

நன்றி: தினமணி (01 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories