TNPSC Thervupettagam

யானை வழித்தடம்: கற்றதனால் ஆய பயன்?

May 21 , 2024 228 days 311 0
  • தமிழ்நாட்டில் யானை வழித்தடங்களைக் கண்டறிந்து, தமிழ்நாடு வனத் துறை வெளியிட்டுள்ள ‘யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை’ பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.
  • யானைகளைப் பாதுகாக்கவும், யானை-மனித எதிர்கொள்ளலைத் தவிர்க்கவும் மாநிலம் முழுவதும் 42 யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு, அது தொடர்பான 161 பக்க அறிக்கையை ஏப்ரல் 29 அன்று தமிழ்நாடு வனத் துறை வெளியிட்டது. இதற்குச் சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
  • யானைகளின் இரண்டு வாழ்விடப் பகுதிகளை இணைத்து, அவை புலம்பெயர்வதற்கு உகந்த சூழலை வழங்குபவை யானை வழித்தடங்கள் எனப்படுகின்றன; ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புலம்பெயர்வு தடைபடும்போது யானைகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. விளைவாக, ஒரே மரபணு குழுவுக்கு இடையிலான உள் இனப்பெருக்கம் அவற்றை அழிவுக்கு இட்டுச் செல்கிறது. எனவேதான் யானைகளைப் பாதுகாப்பதில் வழித்தடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • மத்திய அரசு வெளியிட்ட ‘இந்தியாவில் யானை வழித்தடங்கள்’ (2023) அறிக்கை, நாட்டில் 150 யானை வழித்தடங்கள் இருப்பதாகக் கண்டறிந்தது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 26 யானை வழித்தடங்கள் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்த நிலையில், தமிழ்நாடு வனத் துறை தற்போது வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கை, தமிழ்நாட்டில் 42 வழித்தடங்களைக் கண்டறிந்துள்ளது கவனிக்கத்தக்கது. நீலகிரி, கோவை, ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், அகஸ்தியமலை ஆகிய ஐந்து யானைகள் காப்பகம் உள்ளிட்ட 20 வனக்கோட்டங்களில் 2,961 யானைகள் தமிழ்நாட்டில் உள்ளன (2023 கணக்கெடுப்பு).
  • யானை-மனித எதிர்கொள்ளலுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு நோக்குகளை முன்னிறுத்தி, தமிழ்நாடு அரசின் வனத் துறை கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் வி.நாகநாதன் (வன உயிரினம்) தலைமையில் அமைக்கப்பட்ட வனத் துறை - அறிவியல் நிபுணர்கள் அடங்கிய குழு, ஆய்வு மேற்கொண்டு வரைவு அறிக்கையைத் தயாரித்துள்ளது.
  • இக்குழு அடையாளம் கண்டுள்ள 42 யானை வழித்தடங்கள் ஓசூர், தருமபுரி, ஈரோடு, மசினகுடி, கூடலூர், கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளின் வனக் கோட்டங்களில் அமைந்துள்ளன.
  • வழித்தடங்களைப் பயன்படுத்தும் யானைகளின் எண்ணிக்கை, அப்பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கோயில்கள், தனியார் விடுதிகள், ஆக்கிரமிப்புகள் போன்றவை எந்த வகைகளில் எல்லாம் யானைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்பதை விளக்கும் வரைவு அறிக்கை, யானைகளைப் பாதுகாக்க அரசு எடுக்க வேண்டிய உடனடி-எதிர்கால நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது.
  • ஆனால், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்; பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்னும் அச்சம் எழுந்துள்ளது.
  • விவசாயிகள், குடியிருப்புவாசிகள் ஆகியோரிடம் முன்னரே கருத்துக் கேட்காதது, அறிக்கையை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருப்பது, கருத்துக் கேட்புக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தை வழங்கியது ஆகியவை பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கின்றன.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், மனித மையப் பார்வையில் அல்லாமல் சுற்றுச்சூழலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள்தான் நீண்ட காலத்தில் மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களையும் உள்ளடக்கிய சூழலியல் தொகுதிக்கு நன்மை பயக்கும். அரசு இதை உணர வேண்டும்; மக்களுக்கும் உரிய வகையில் உணர்த்த வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories