TNPSC Thervupettagam

யாருக்கும் வேண்டாதவர்கள்

June 22 , 2023 570 days 369 0
  • உலகளாவிய நிலையில் அகதிகள் பிரச்னை மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வேலை தேடி இடம்பெயர்பவர்களைப் போலவே வாழ்வாதாரம் சிதைந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில், புலம்பெயரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அகதிகளின் ஊடுருவலால் தங்கள் நாட்டின் மக்கள்தொகை பகுப்பாய்வு மாறிவிடும் என்கிற அச்சத்தால் பல நாடுகள் செய்வதறியாமல் திணறுகின்றன.
  • போர் காரணமாக பொருளாதாரம் சிதைந்து வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடும் அகதிகளின் எண்ணிக்கை ஏராளம். அப்படிப்பட்ட அகதிகளில் சிலரை சட்டவிரோதமாக கிழக்கு லிபியாவின் டோப்ரக்
  • நகரிலிருந்து ஏற்றிக்கொண்டு சென்ற மீன்பிடிப் படகு கடந்த வியாழக்கிழமை கடலில் மூழ்கியது.
  • அந்தப் படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 790 அகதிகள் பயணித்தனர். 78 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. 144 பேரை உயிருடன் மீட்டனர். ஏனைய 568 பேரின் தலைவிதி என்னவாயிற்று என்று கடல் அன்னைக்குத்தான் தெரியும்.
  • இதேபோல, இலங்கையிலிருந்து படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்வதும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. நடுக்கடலில் ஆஸ்திரேலிய கடற்படையினர் அந்தப் படகுகளைத் தடுத்து நிறுத்துவதும், திருப்பி அனுப்புவதும், கரைசேர முடியாமல் அகதிகளின் படகுகள் தடயமே இல்லாமல் கடலில் மூழ்குவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது.
  • 1947 பிரிவினைக்குப் பிறகு, லட்சக்கணக்கான அகதிகள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அதேபோல, வங்கதேச பிரிவினைப் போரைத் தொடர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான
  • அகதிகளில் பலரை நிலைமை சீரானதும் அன்றைய இந்திரா காந்தி அரசு திருப்பி அனுப்பியது.
  • இந்தியாவின் மக்கள்தொகை பகுப்பை, வங்கதேச இஸ்லாமிய அகதிகளின் வருகை மாற்றி அமைக்கும் என்றும், இந்தியாவின் நிதியாதாரத்தை அகதிகளுக்காக செலவிடும் நிலையில் தேசம் இல்லையென்றும் பிரதமர் இந்திரா காந்தி அப்போது தெரிவித்தார். ஆனாலும் வங்கதேசத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் இந்தியாவில் தஞ்சமடைந்த அகதிகளை முடிந்தவரை இந்தியா பாதுகாக்கவே செய்திருக்கிறது.
  • அகதிகள் அடங்கிய படகுகள் விபத்தில் சிக்குவது புதிதொன்றும் அல்ல. மூன்று மாதங்களுக்கு முன்பு, இத்தாலியின் தெற்கு கடற்கரையோரமாக நிகழ்ந்த விபத்தில் 12 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா நாடுகளைச் சேர்ந்த 150 அகதிகளுடன் கிழக்கு துருக்கியின் இஸ்மிர் நகரிலிருந்து புறப்பட்ட அந்த மீன்பிடிப் படகு, அளவுக்கு அதிகமான நபர்கள் பயணித்ததால் ஏற்பட்ட விரிசலால் விபத்துக்குள்ளானது.
  • உள்நாட்டுப் போர், அரசியல் ரீதியிலான தாக்குதல்கள் போன்றவற்றால் தங்களது குடியுரிமையையும் உயிரையும் நாள்தோறும் அகதிகள் இழக்கிறார்கள். சர்வதேச புலம்பெயர்வோர் நிறுவனம் காணாமல்போகும் அகதிகள் குறித்து ஆய்வு நடத்தியது. 2020 நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட அந்த ஆய்வின்படி, உலகளாவிய நிலையில் 50,000-க்கும் மேற்பட்ட அகதிகள் 2014 முதல் உயிரிழந்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் தங்களது நாடுகளிலிருந்து படகுகளில் தப்பித்து அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு புலம்பெயர முயன்றவர்கள்.
  • அகதிகளாகப் புலம்பெயர விழைந்தோரில் 60% அகதிகளின் தாய்நாடு குறித்த விவரம் தெரிவதில்லை. விவரம் கிடைத்தவர்களில் 9,000 பேர் ஆப்பிரிக்காவிலிருந்தும், 6,500 பேர் ஆசியாவிலிருந்தும், 3,000 பேர் தென்னமெரிக்க நாடுகளிலிருந்தும் புலம்பெயர முயன்றவர்கள்.
  • பெரும்பாலான அகதிகள், வன்முறையும், அடக்குமுறையும், உள்நாட்டுப்போரும், வறுமையும் நிறைந்த ஆப்கானிஸ்தான், சிரியா, மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்கள். புலம்பெயரும் வழியில் உயிரிழப்போரில் 11% குழந்தைகள் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
  • ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து 80 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். 60 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். உக்ரைன் அகதிகளைப் பொறுத்தவரை ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி உதவுகின்றன.
  • உக்ரைன் அகதிகளுக்குக் காட்டப்படும் பாரபட்சம் வெளிப்படையாகவே தெரிகிறது. போலந்தில் உக்ரைனியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் நாடுகளிலிருந்து நுழைய முற்படுவோர் முள்கம்பி வேலிகள் அமைத்து தடுக்கப் படுகின்றனர்.
  • பிரிட்டனில் உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் பிரிட்டிஷ் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு திட்டமிடுகிறது. அதேநேரத்தில், ஏனைய நாடுகளிலிருந்து பிரிட்டனில் நுழையும் சட்டவிரோத அகதிகளை, ஒருவழி விமானப் பயணச்சீட்டுடன் ருவாண்டா நாட்டுக்கு அனுப்புகிறது. அதேபோல, ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து புலம் பெயரும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி, தங்களது மக்கள்தொகை பகுப்பில் மாற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை.
  • வேறுவழியில்லாமல் விரட்டியடிக்கப்படும் அல்லது வாழ்வாதாரம் தேடி வறுமையின் காரணமாக நாடுவிட்டு நாடு புலம்பெயரும் அகதிகள் பிரச்னை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பணக்கார நாடுகளை நோக்கி புலம்பெயர்தல் என்பது தவிர்க்க முடியாதது. சமச்சீரான வளர்ச்சி உலகில் ஏற்படாதவரை இதற்கு முடிவு கிடையாது.
  • அதேநேரத்தில் உள்நாட்டுப் போர், இன அழிப்பு, பயங்கரவாதம் ஆகியவற்றால் உருவாகும் அகதிகள் பிரச்னையை இன்னும் எத்தனை நாள்தான் உலகம் கண்களை மூடி கடந்து போகப் போகிறது?

நன்றி: தினமணி (22  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories