யார் இந்த அகலிகை?
- தொன்மக் கதாபாத்திரங்களுள் மிக முக்கியமான இடம் அகலிகைக்கு உண்டு. காலந்தோறும் அகலிகையின் கதை மீள் வாசிப்புச் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அகலிகையின் கதையை வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் ‘அகலிகை வெண்பா’ என்ற பெயரில் மூன்று காண்டங்களாகப் பிரித்து விரிவாக எழுதியிருக்கிறார். அகலிகையை மணந்துகொள்ள நடைபெற்ற போட்டியில் இந்திரன் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்படுகிறான். அகலிகை மீதுள்ள காமமும் முனிவர்மேல் கொண்ட கோபமும் இந்திரனின் அறிவை மழுங்கச் செய்கிறது. அகலிகையைப் பாலியல் வன்முறை செய்கிறான். ‘நீ மனதால் கற்பிழக்கவில்லை’ என்று கௌதமர் அகலிகையை ஏற்றுக்கொள்கிறார். ஆனாலும் அவளது மன அமைதிக்காகச் சில காலம் கல்லாக இருக்கட்டும் என்று முடிவெடுக்கிறார். இவ்வாறு காலந்தோறும் அகலிகையின் வரலாற்றின்மீது புனைவுத் தன்மைகள் கூடிக்கொண்டே சென்றிருப்பதை அவதானிக்க இயல்கிறது.
- மரபிலக்கியங்கள் அகலிகையைத் தவறு செய்தவளாகத் தொடர்ந்து சித்திரித்துக்கொண்டே வந்திருக்கின்றன. நவீன இலக்கியங்கள், அகலிகை தரப்பு நியாயத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து பேசி வருகின்றன. இவ்வகையில், அகலிகையின் கதைமீதான மரபிலக்கியத்தின் இடைவெளிகளை நவீன இலக்கியங்களே நிரப்பி வருகின்றன. இந்திய மொழிகளில் அகலிகையின் கதை அதிக அளவில் எழுதப்பட்டிருப்பதாக எழுத்தாளர் பிரபஞ்சன் கூறுகிறார். புதுமைப்பித்தனே ‘அகலிகை’, ‘சாபவிமோசனம்’ என்று இரு கதைகளை எழுதியுள்ளார். காவியம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை எனப் படைப்பின் எல்லா வகைமைகளிலும் அகலிகையின் கதை எழுதப்பட்டுள்ளது.
- திராவிட இயக்க எழுத்தாளர் தி.கோ.சீனிவாசன் அகலிகை குறித்து எழுதியுள்ள ‘பாவமும் சாபமும்’ என்ற சிறுகதை தனித்துவமானது. மறுமலர்ச்சி சிந்தனைகளைத் தம் கதைகளில் அதிகம் எழுதியவர் தி.கோ.சீனிவாசன். உருவத்தைவிட உள்ளடக்கத்திற்கே இவரது புனைவுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ‘ஆடும் மாடும்’ இவரது புகழ்பெற்ற நாவலாகும். ‘உலக அரங்கில்’, ‘கொள்கையும் குழப்பமும்’, ‘எல்லைக்கு அப்பால்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அகலிகையே ஓர் எழுத்தாளரிடம் தன் கதையைச் சொல்வதாக தி.கோ.சீனிவாசன் எழுதியிருக்கிறார். திராவிட இயக்கத்தவருக்குக் கம்பராமாயணத்தின் மீது ஒவ்வாமை உண்டு. அதிலுள்ள மிகு கற்பனையைப் பலர் விமர்சனம் செய்துள்ளனர். கம்பரின் பிரதியை நடைப்பியலுக்கு நகர்த்தும் பணியையும் திராவிட இயக்கத்தவர் செய்துள்ளனர். தி.கோ.சீனிவாசனும் அகலிகை என்ற தொன்மக் கதையின் மீது படிந்துள்ள மாய யதார்த்தத்தைத் தன் புனைவினூடாக நீக்க முயன்றிருக்கிறார். கௌதமரின் சாபத்தின் மூலமாக இந்திரன் உடல் முழுக்கப் பெற்ற புண்ணுக்கு (இடக்கரடக்கல்) தி.கோ.சீனிவாசன் புதிய விளக்கத்தை அளிக்கிறார்.
- ‘கோதமரை நான் மணக்கவில்லை; அவருக்கு என்னைக் கொடுத்தார்கள். இந்திரன் என்னைக் கெடுக்கவில்லை; என்னால் அவன் பாழானான்’ என்கிறாள் தி.கோ.சீ.யின் அகலிகை. தி.கோ.சீ. புனைவுபடி இந்திரனும் அகலிகையும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒருவரையொருவர் விரும்பியவர்கள். எதையும் இழக்க விரும்பாத என்னை முற்றும் துறந்த முனிவருக்கு மணம் செய்துகொடுத்து என்னைத் துயரத்துக்கு உள்ளாக்கினார்கள் என்பது அகலிகையின் வாதம். ‘கடவுள் அளித்த வேட்கையைக் கணவனுக்காகக் கட்டுப்படுத்துவது தெய்வ விரோதமாகாதா?’ என்கிறாள் அகலிகை. அதனால் தன் வேட்கையைப் பிற ஆண்களிடம் தீர்த்துக் கொள்கிறாள்; பால்வினை நோய்க்கு ஆளாகிறாள். இந்தச் சூழலில்தான் இந்திரன், கௌதமரின் வேடத்தில் வந்து அகலிகையைக் கூடி அந்நோயைத் தானும் பெற்றுக்கொள்கிறான்.
- இது கம்பரது பிரதியின்மீது நிகழ்த்தப்பட்ட மறுவாசிப்பாகவே கருதுகிறேன். தி.கோ.சீனிவாசனின் அகலிகை, திராவிட இயக்கச் சிந்தனை உள்ளவள். கடவுள் மறுப்பாளர். தனது இழிநிலைக்கு இச்சமூகமே காரணம் என்பது அவளது குற்றச்சாட்டு. விருப்பமில்லாமல் நடைபெற்ற முனிவருடனான திருமணமே அனைத்திற்கும் காரணம் என்கிறாள். ‘கல் இயல் ஆதி’ என்று கௌதமர் அகலிகைக்குச் சாபமிட்டதாகக் கம்பர் எழுதியிருக்கிறார். இதனை இவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். ‘கல்லாகப் போ என்றால் உருவற்ற சிறு கல்லாக ஆக மாட்டாள்; உருவுள்ள சிலையாகத்தானே ஆவாள்?’ என்கிறார். கம்பரின் அகலிகை மீது நிகழ்த்தப்பட்ட மறுவாசிப்பாகவே இந்தக் கதையை அணுக வேண்டியிருக்கிறது. வேதகால குறிப்புகள்படி இந்திரனும் அகலிகையும் சிறுவயது முதலே ஒன்றாகப் பழகியவர்கள்; காதலர்கள் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார்.இன்றும் அவிழ்க்க முடியாத ஒரு புதிர் அகலிகையின் தொன்மக் கதை. இன்னும்அகலிகையைப் பற்றி ஆயிரம் கதைகள் மலரட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 03 – 2025)