பசுமைப் பட்டாசு என்றால் என்ன?
- பாரம்பரியமான பட்டாசுகளால் வெளியிடப்படும் மாசு மிக அதிகம். இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுகளிலுள்ள பேரியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள்தான். பசுமைப் பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட்டுக்குப் பதிலாக அதைவிடக் குறைவான தீங்குடைய பொட்டாசியம் நைட்ரேட் கலக்கப்படுகிறது.
- இந்தப் பசுமைப் பட்டாசுகளில் சில வகைகளில் பட்டாசுகள் வெடித்ததும் அதில் உள்ள நச்சுப் பொருட்கள் கரைந்துவிடும். பசுமைப் பட்டாசுகளில் பாரம்பரியப் பட்டாசுகளைவிட 30% குறைவான மாசு வெளியிடப்படுகிறது.
விலை எப்படி?
- வழக்கமான பட்டாசுகளின் விலைதான் இதற்கும்; சில வகைகளில் இன்னும் குறைவான விலை இருக்கும் என்கிறார்கள்.
- வெடிகள், புஸ்வாணம், பென்சில் மத்தாப்பு, சங்குச் சக்கரம், கம்பி மத்தாப்பு போன்றவை இந்தப் பசுமைப் பட்டாசு முறையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
பசுமைப் பட்டாசை உருவாக்கியவர்கள் யார்?
- அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மையத்துக்குக் கீழுள்ள எட்டு ஆய்வகங்கள் இந்தப் பசுமைப் பட்டாசை உருவாக்கியிருக்கின்றன. கூடவே, நாக்பூரைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இதில் கைகோத்திருக்கிறது.
- பசுமைப் பட்டாசுக்கான சூத்திரத்தை இவர்கள் உருவாக்கியிருந்தாலும் பட்டாசுகளை வழக்கமான பட்டாசுத் தொழிற்சாலைகளில்தான் தயாரிக்கிறார்கள்.
- சிவகாசி உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பட்டாசுத் தயாரிப்பாளர்கள் பசுமைப் பட்டாசைத் தயாரிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் சில தொழிற்சாலைகள் முன்வந்திருக்கின்றனர்.
- அவை பெரும்பாலும் பெரும் தொழிற்சாலைகள். ஆகவே, இந்தப் பசுமைப் பட்டாசைக் கொண்டு சிறுதொழிற்சாலைகளை முடக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
- நாடெங்கும், மொத்தம் 165 பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமைப் பட்டாசைத் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஏன் இந்தப் பட்டாசு?
- உச்ச நீதிமன்றம் பட்டாசு தொடர்பாகவும், பட்டாசு வெடிப்பது தொடர்பாகவும் தீர்ப்பொன்றை வெளியிட்டிருந்தது. அதில், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று கூறியிருந்தது. கூடவே, சீனப் பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
- பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த தீர்ப்பைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றாலும் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். இதனால், அந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பது அவர்களின் வாதம்.
பசுமைப் பட்டாசை எப்படி அடையாளம் காண்பது?
- பசுமைப் பட்டாசாக அடையாளம் காட்டும் க்யூ.ஆர். கோட் அச்சிடப்பட்டிருக்கும்.
சூழலுக்குப் பாதிப்பு எப்படி?
- பசுமைப் பட்டாசுகள் என்பதால் அவை மாசு உருவாக்காதவை என்று அர்த்தம் அல்ல; இவையும் மாசு உருவாக்குபவையே. ஆனால், வழக்கமான பட்டாசுகளைவிட குறைவாக இருக்கும், அவ்வளவுதான்.
- நீங்கள் உண்மையாகவே நல்ல சுற்றுச்சூழலை விரும்புகிறீர்கள் என்றால், அதற்கான சிறந்த வழி பட்டாசுகளைத் தவிர்ப்பதுதான்!
நன்றி: இந்து தமிழ் திசை (29-10-2019)