TNPSC Thervupettagam

யார்? என்ன? எப்படி?- குடியுரிமைத் திருத்த மசோதா: கூறுவது என்ன?

December 12 , 2019 1862 days 1595 0
  • இந்தியக் குடியுரிமையைப் பெற விரும்பும் வெளிநாட்டவர் ஒருவர் 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்று இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 தெரிவிக்கிறது.
  • இந்நிலையில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்த மதச் சிறுபான்மையினராக இந்து, சீக்கிய, பார்ஸி, சமண, பௌத்த, கிறிஸ்தவர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பதற்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்தால் போதுமானது என்று தற்போது சட்ட திருத்தம் செய்வதற்கான மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.
  • இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு சலுகை காட்டும் இச்சட்டத்திருத்தம் முஸ்லிம்களை அச்சலுகையிலிருந்து விலக்கிவைப்பதால் இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று விமர்சிக்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதா?

  • நாடாளுமன்றத்தால் இயற்றப்படுகிற எந்தவொரு சட்டம் அல்லது சட்டத்திருத்தமும் அரசமைப்புச் சட்டக் கொள்கைகளின்படியே அமைய வேண்டும். அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக அமையும் சட்டங்கள் செல்லாததாகக் கருதப்படும்.
  • நாடாளுமன்றத்தால் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா, முஸ்லிம்களைத் தவிர்த்துவிட்டு மற்ற மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு மட்டுமே சலுகை காட்டுகிறது. சமய வேற்றுமைகளை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் இந்தத் திருத்தம், மதச்சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது என்று விமர்சிக்கப்படுகிறது.
  • அரசமைப்புச் சட்டக் கூறு 14-ன்படி அனைவரும் சாதி, சமய, பாலின வேறுபாடுகள் இன்றி சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவோ இச்சட்டக் கூறுக்கு எதிராக அமைந்துள்ளது. அடிப்படை உரிமைகள், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவதால், அதைத் திருத்தியமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என்றும் அரசமைப்புச் சட்டரீதியில் விமர்சிக்கப்படுகிறது.

மத்திய அரசின் பதில் என்ன?

  • இந்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும் பாகிஸ்தான் மத அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டது, ஒருவேளை தேசப் பிரிவினை செய்யப்படாதிருந்தால், இன்று இப்படியொரு சட்டத்திருத்தத்துக்கே தேவை எழுந்திருக்காது’ என்று பதில் அளித்திருக்கிறார்.
  • ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கும் இத்திருத்த மசோதா சலுகையளிக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிரானதா?

  • மதச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது இந்தத் திருத்தத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் திருத்தத்தில் அனைத்து மதச் சிறுபான்மையினருக்கும் அவ்வாறு சலுகை காட்டப்படவில்லை.
  • பாகிஸ்தானில் அஹமதியா மற்றும் ஷியா முஸ்லிம்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம்களும் இந்துக்களும் துயரங்களுக்கு ஆளாகிவருகின்றனர். இலங்கையில் தமிழ் முஸ்லிம்களும் இந்துக்களும் இதே துயரத்தை அனுபவித்துவருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஏன் இந்தச் சலுகையை விரிவுபடுத்தவில்லை என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
  • முஸ்லிம் நாடுகளிலுள்ள சிறுபான்மையினரைப் பற்றி மட்டுமே இந்தச் சட்டத்திருத்த மசோதா கவனம் கொண்டுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை இந்த மசோதாவின் நிலை என்ன?

  • அரசமைப்புச் சட்டக் கூறு 244 மற்றும் ஆறாவது அட்டவணையின்படி பழங்குடியினர் நிர்வாகப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மிசோரம், மேகாலயா மாநிலங்களிலும் அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் அங்கே செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெறும் ‘இன்னர் லைன் பர்மிட்’ முறை பின்பற்றப்பட்டுவருகிறது.
  • இதன்படி, இந்தியாவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த மாநிலப் பகுதிகளுக்குச் செல்ல முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களுக்குள் நுழைவதற்கு முன்கூட்டியே அனுமதி பெறும் முறையானது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்துவருகிறது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட டிசம்பர் 10 அன்று, மணிப்பூர் மாநிலத்துக்கும் இன்னர் லைன் பர்மிட் முறையை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களில் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், இந்திய குடியுரிமைத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மதப்பிரிவுகளில் எந்தவொன்றைச் சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் இந்தத் திருத்த மசோதா என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

  • அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட தேசியக் குடியுரிமைப் பதிவேட்டுப் பணிகள், அருகமை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர்களில் 19 லட்சம் பேர்களை அந்நியர்கள் என்று அடையாளப்படுத்தியுள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் வசிப்பவர்களும்கூட உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணம்காட்டி அந்நியர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பது விமர்சிக்கப்பட்டுவருகிறது. எனினும், இதுவரையிலான பணிகள் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன.
  • இந்நிலையில், அந்நியர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களில் இந்து, சீக்கிய, பார்ஸி, சமண, பௌத்த, கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இயல்பாகவே விடுவிக்கப்படுவார்கள். அந்நியர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களில் முஸ்லிம்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (12-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories