TNPSC Thervupettagam

யூடியூபர் சர்ச்சைகள்: கட்டுப்பாடுகளுக்கான வாய்ப்பா?

February 24 , 2025 6 hrs 0 min 10 0

யூடியூபர் சர்ச்சைகள்: கட்டுப்பாடுகளுக்கான வாய்ப்பா?

  • ‘இது எங்கள் இடம்’ என இணையப் பரப்பை (சைபர் வெளி) அறிவித்த ஜான் பெரி பார்லோவின் (John Perry Barlow) மேற்கோளோடு இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும். “உங்களை இங்கு வரவேற்கவில்லை. நாங்கள் ஒன்றுகூடும் இடத்தில் உங்களுக்கு எந்த இறையாண்மையும் இல்லை.” க​விஞர், கட்டுரை​யாளர், பாடலாசிரியர் எனப் பலவித அடைமொழிகளோடு, இணையவெளியின் தாராள​வாதச் செயல்​பாட்​டாள​ராகவும் கருதப்​படும் பார்லோ, 1996இல், இணையப் பரப்பின் சுதந்​திரத் தன்மையை வலியுறுத்தி வெளியிட்ட சைபர் வெளி சுதந்​திரப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள வரிகள்தான் இவை.
  • பார்லோ காலத்தில் இருந்து இணையம் வெகுவாக மாறிவிட்டது என்றாலும், இணைய வெளியின் ஆதாரத்​தன்மை மாறிவிட​வில்லை. ‘மனதின் புதிய வீடு’ என அவர் வர்ணித்த இணைய வெளி இன்னமும் கருத்துப் பரிமாற்​றத்​துக்​கும், பயனாளி​களின் கூட்டு முயற்சிக்​கும், இன்னும் பிற கட்டற்ற சுதந்​திரம் சார்ந்த செயல்​பாடு​களுக்கான மெய் நிகர் பரப்பாகவே தொடர்கிறது.
  • ஆனால், இணையத்தின் இந்த ஆதாரத்​தன்​மைக்கான அச்சுறுத்​தலும் சவால்​களும் அதிகரித்து​வருவதை உணர்த்தும் இன்னொரு உதாரணமாக, யூடியூபர் ரன்வீர் அல்லா​பாடியா தொடர்பாக வெடித்​துள்ள சர்ச்​சையும் விவாதங்​களும் அமைந்துள்ளன. குடும்ப விழுமி​யங்​களைக் கொச்சைப்​படுத்தும் விதத்தில் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாக அவர் பேசியிருந்​தார். ரன்வீரின் செயல் கண்டனத்​துக்கு உரியது என்பதி​லும், அதற்கான விலையை அவர் கொடுத்தாக வேண்டும் என்பதிலும் மாற்றுக்​கருத்து இல்லை.
  • ஆனால், ரன்வீர் போலப் பெரும் செல்வாக்​குமிக்க இணைய நட்சத்​திரங்கள் சறுக்கிச் சர்ச்​சைக்கு உள்ளாகும்​போது, பொதுவெளியில் ஏற்படும் எதிர்​வினைகள் எப்படி அமைகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, மக்களை உணர்ச்​சிவசப்பட வைக்கும் இத்தகைய சர்ச்​சைகளை இணையம் - டிஜிட்டல் பரப்பின் மீதான கட்டுப்​பாடுகளை மேலும் இறுக்கு​வதற்கான வாய்ப்பாக அரசாங்​கங்கள் பயன்படுத்​திக்​கொள்ள முற்படுவதாக எழும் குரல்​களுக்கும் செவிசாய்த்தாக வேண்டும்.

தண்டிக்​கப்பட வேண்டிய குற்றமா?

  • ரன்வீர், இணையத்தில் புகழின் உச்சிக்குச் சென்று சர்ச்​சைக்கு உள்ளான முதல் யூடியூபர் அல்ல. உள்ளூரிலும், உலக அளவிலும் இதற்கு இன்னும் எண்ணற்ற உதாரணங்கள் இருக்​கின்​றனர். டிஜிட்டல் கிரியேட்​டர்கள் என்று சொல்லப்​படு​பவர்கள் செயல்​படும் விதத்தைப் பார்த்​தால், இன்னும் பலர் இப்படிச் சர்ச்சை நாயகர்களாக மாறுவார்கள் என்றே தோன்றுகிறது.
  • இதற்குக் காரணம் இளம் வயதில், புகழும் பெரும் பணமும் தரும் மயக்கமா அல்லது எப்போதும் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்​கத்தை உருவாக்க வேண்டிய நெருக்​கடியா என்று தெரிய​வில்லை. டிஜிட்டல் படைப்​பாளிகள் உள்ளடக்​கத்தில் பின்பற்ற வேண்டிய எல்லைக் கோட்டை பல நேரங்​களில் தவறவிடு​கின்​றனர்.
  • இவர்களுக்கு நாம் பொறுப்பு​ணர்வு தொடர்​பாகப் பாடம் எடுப்பது அவசியம்​தான். அவர்களைக் கண்டிப்​பதும் தேவைதான். ஆனால், அவர்களைத் தண்டிக்க வேண்டுமா என்பது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. ரன்வீர் தெரிவித்த பொருத்​தமற்ற கருத்து​களுக்காக அவரை விமர்​சிப்​ப​தை​யும், கண்டிப்​ப​தையும் புரிந்​து​கொள்​ளலாம். ஆனால், அவரைக் கைது செய்யக் கோருவதை​யும், அவருக்கு எதிராகத் தேசமே திரண்டு போராடு​வது​போலத் தோற்றத்தை ஏற்படுத்து​வதையும் எப்படிப் புரிந்​து​கொள்வது?

பயன்படுத்​திக்​ கொள்​கிறதா அரசு?

  • ரன்வீருக்கு இடைக்கால நிவாரணம் தந்திருக்கும் உச்ச நீதிமன்றமே, அவரது மனம் விகார​மானது எனக் கண்டித்​துள்ளது. ரன்வீர் தெரிவித்த கருத்​துக்கள் ஏற்க முடியாதவை என்றாலும், சட்டத்தை மீறிய​வைதானா என வல்லுநர்கள் கேள்வி எழுப்பு​கின்​றனர். ஆபாசம் என்பதைக் கலாச்​சாரக் கண் கொண்டு அணுகுவது வேறு. சட்டம் இதை எப்படி வரையறை செய்திருக்​கிறது என்பதே முக்கியம்.
  • உச்ச நீதிமன்​றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டி, வழக்கறிஞர் அபர் குப்தா இந்த விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரை​யில், யூடியூபரின் கருத்து ஆபாசம் அல்ல... ஆபத்தான ஒரு நகைச்சுவை மட்டுமே எனக் குறிப்​பிட்​டிருப்பதை இங்கே நினைவில் கொள்வது பொருத்​த​மானது.
  • இணைய சுதந்​திரம் தொடர்பான சட்டம் சார்ந்த பார்வைக்​காகவும் நுணுக்​கங்​களுக்​காகவும் அறியப்​படும் அபர் குப்தா, இந்த விவகாரத்தில் ரன்வீரும், அவரை யூடியூப் நிகழ்ச்​சிக்கு அழைத்த சமய் ரெய்னா​வும், பகடைக்​காய்​களாகப் பயன்படுத்​தப்​படு​வ​தாகத் தெரிவித்​துள்ளார்.
  • டிஜிட்டல் பரப்பைக் கட்டுப்​படுத்த விரும்பும் அரசாங்கம், அதற்கான வாய்ப்பு​களில் ஒன்றாக இதைப் பயன்படுத்​திக்​கொள்​கிறது. மக்களின் கோபத்தைப் பயன்படுத்​திக்​கொண்டு ஏற்கெனவே உள்ள டிஜிட்டல் நெறிமுறைகளை மேலும் தீவிரப்​படுத்த முயற்சி மேற்கொள்​ளப்​படலாம்.
  • இத்தகைய கட்டுப்​பாடுகள் டிஜிட்டல் தணிக்கைக்கு வித்திடும் என்னும் அச்சத்​தையும் புறந்​தள்​ளுவதற்கு இல்லை. கருத்துச் சுதந்​திரத்தின் மீதான இன்னொரு வகைத் தாக்குதலாகவும் இது அமைகிறது. கருத்துச் சுதந்​திரம் என்பது சமூகப் பொறுப்​பையும் உள்ளடக்​கியதுதான் என்றாலும், உணர்வுவய ரீதியிலான வரம்பு மீறிய தாக்குதல், கருத்​து​களைக் கட்டுப்​படுத்தும் தணிக்கைப் போக்குக்கே வலுசேர்க்கும் எனக் கருதப்​படு​கிறது.

பக்குவம் தேவை:

  • டிஜிட்டல் வெளி, சமூக ஊடகப் பரப்பில், பலரது செயல்​பாடுகள் முகம் சுளிக்க வைப்ப​தாக​வும், சில நேரம் எல்லை மீறுவ​தாகவும் இருக்​கிறது. ஆனால், இத்தகைய சர்ச்​சைகளை எதிர்​கொள்​வதில் சமூக நோக்கிலும் ஒரு மாற்றமும் பக்கு​வமும் தேவை. சமூக ஊடகம் என்பது பயனாளி​களுக்கான தகவல்​தொடர்புப் பாதையாகவே கருதப்​படு​கிறது. பயனாளிகள் தாங்களே உள்ளடக்​கத்தை உருவாக்​குபவர்களாக மாறவும் இந்தத் தகவல்​தொடர்பு வழிசெய்​கிறது.
  • சமூக ஊடகத்தின் இந்த ஆதாரத்​தன்​மையே, பல திறமை​யாளர்​களுக்கு மேடை அமைத்து, அவர்களை இணைய நட்சத்​திரங்​களாக​வும், செல்வாக்​காளர்​களாகவும் ஆக்கி​யிருக்​கிறது. ஆனால், அதே செல்வாக்​காளர்கள் தவறு செய்யும்​போது, முன்பு அவர்களைக் கைதட்டி ஆதரித்து வளர்த்த அதே இணையவாசிகள் கடுமையாக விமர்​சிக்கத் தலைப்​படு​கிறார்கள்.
  • அதேபோல சாமானிய திறமை​யாளர்கள் சமூக ஊடகத்தால் அடையாளம் காட்டப்​படும்​போது, இந்த ஊடகத்தின் ஜனநாயகத்​தன்மை பற்றிப் பாராட்டிப் பேசும் பலரும், பிரச்சினை அல்லது சர்ச்சை என வரும்போது சமூக ஊடகத்தின் கட்டற்​றதன்மையை எதிர்​மறை​யாகச் சித்தரிப்​ப​தையும் பார்க்க முடிகிறது. இந்தப் போக்கு சமூக ஊடகத்தின் இயல்பான ஜனநாயகத்​தன்​மைக்கே அச்சுறுத்தலாக மாறலாம்.
  • கலாச்சார நோக்கில் புண்படுத்தும் உள்ளடக்​கத்​துக்காக அல்லது ஓடிடியில் வெளியாகும் இணையத் தொடரின் எல்லை மீறிய காட்சிக்காக, நடவடிக்கை எடுக்க வாருங்கள் என வலியுறுத்துவது, அரசுத் தரப்பிலான கட்டுப்​பாடுகள் இன்னும் தீவிரமடையவே வழிவகுக்​கும். அரசின் செயல்​பாடு​களைக் கேள்விக்கு உட்படுத்து​வதற்கான மக்கள் ஊடகமாக சமூக ஊடகம் இருப்​ப​தையும் மறந்து​விடக் கூடாது.

பொறுப்பை உணர வேண்டும்:

  • பல நாடுகளில் டிஜிட்டல் பரப்பு, சமூக ஊடகப் பரப்பு ஆகியவற்றை நெறிப்​படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று​வரு​கின்றன. இதற்கான சட்டங்​களும் இயற்றப்​பட்டு வருகின்றன. பல நாடுகளில் வலதுசாரி அரசாங்​கங்​களும், சர்வா​திகார ஆட்சி​யாளர்​களும் இதைச் சாதகமாக்​கிக்​கொண்டு, மாற்றுக் கருத்து​களையும் நியாயமான எதிர்ப்​பையும் நசுக்கச் சட்ட வழியைப் பயன்படுத்​திவரு​கிறார்கள்.
  • இந்தப் பின்னணியில் ஆரோக்​கியமான விவாதங்களை முன்னெடுப்​பதும், ஊடகக் கல்வியறிவை வளர்த்​தெடுப்பது போன்ற செயல்​களும் அவசியம். அரசமைப்பு உறுதி​செய்யும் கருத்துச் சுதந்​திரத்தைப் பாதுகாப்​பதும் முக்கியம்.
  • ‘இதற்கு முன் பார்வை​யாளர்கள் என அறியப்பட்ட மக்கள்’ என்று அமெரிக்க இதழியல் பேராசிரியர் ஜே ரோசன் (Jay Rosen) குறிப்​பிடு​வார். வலைப்​பதிவு என்னும் சமூக ஊடக வகையின் எழுச்சி எல்லோரை​யும், எழுதும் வாசகர்களாக உருவாக்கி​யிருப்​பதைச் சுட்டிக்​காட்டி, பாரம்பரிய ஊடகங்​களுக்குப் புதிய ஊடகத்தின் வருகையை உணர்த்தும் அறைகூவலாக இந்தக் கருத்து அமைந்​திருந்தது. ஆக, பார்வை​யாளர்களாக மட்டும் இருந்த நிலை மாறி, பங்கேற்பு யுகத்தில் இருக்​கிறோம் என்​ப​தையும் அதற்கான பொறுப்பை இணையப் பிரபலங்​களும் உணர வேண்​டும், மக்​களும் நினைவில் கொள்ள வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories