TNPSC Thervupettagam

யெஸ் வங்கி ஏன் திவாலானது?

March 10 , 2020 1772 days 1443 0
  • பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கி வீழ்ந்ததால் உண்டான அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பே, டிஎச்எஃப்எல் (தீவான் ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட்), ஸ்ரீகுரு ராகவேந்திரா சஹகாரா கூட்டுறவு வங்கி ஆகியவை திவாலாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது யெஸ் வங்கி இணைந்துவிட்டது.
  • இதுவரையில் திவாலான நிறுவனங்களை ஒப்பிடும்போதுயெஸ் வங்கி மிகப் பெரியது. 29 மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றியப் பிரதேசங்களில் 1,100-க்கும் மேலான கிளைகள், 20,000 பணியாளர்களைக் கொண்ட ஐந்தாவது பெரிய தனியார் வங்கி. ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வைப்புத்தொகை கொண்ட வங்கி.
  • வங்கி ஒழுங்கமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி யெஸ் வங்கியின் மீது ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. இதன்படி, 2020 மார்ச் 5-லிருந்து ஏப்ரல் 3 வரை இவ்வங்கி, ‘புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க முடியாது. கொடுத்த கடனைப் புதுப்பிக்க முடியாது. புதிதாக யாரிடமிருந்தும் வைப்புத்தொகை பெற முடியாது. வைப்புதாரர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க முடியாது.’
  • இந்தத் தடை சாதாரண மக்களிடையே, குறிப்பாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்களிடையே மிகப் பெரிய கலக்கத்தை உருவாக்கியுள்ளது. ‘இந்த வங்கியின் சேமிப்புதாரர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் பணம் பத்திரமாக உள்ளது’ என்று ரிசர்வ் வங்கி கவர்னரும் மத்திய நிதி அமைச்சரும் கூறிவருகிறார்கள். கடந்த ஆறு மாத காலமாக பிஎம்சி வங்கி மற்றும் டிஎச்எஃப்எல் நிறுவன வைப்புதாரர்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதைப் பார்க்கும்போது, ‘தங்கள் பணம் மட்டும் பத்திரமாக இருக்குமா என்ன?’ என்ற சந்தேகம் யெஸ் வங்கி சேமிப்புதாரர்கள் மனதில் எழுவது இயற்கைதான்.

உயர்மட்ட ஊழல்

  • யெஸ், பிஎம்சி, டிஎச்எஃப்எல் ஆகிய மூன்று நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும் உள்ள ஒற்றுமை உயர்மட்ட ஊழல்தான். பிஎம்சி, யெஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாகமானது வாத்வான் சகோதரர்களின் நிறுவனங்களான டிஎச்எஃப்எல், எச்டிஐஎல் ஆகியவற்றோடு இணைந்து ஊழல் செய்துள்ளன. பிஎம்சி வங்கியில் ரூ.12,000 கோடி, டிஎச்எஃப்எல் நிறுவனத்தில் ரூ.7,000 கோடி என மக்களின் வைப்புப் பணம் ஆபத்தில் உள்ளது. ஆறு மாதங்கள் கடந்தும் இவற்றுக்குத் தீர்வு காணப்படவில்லை. பிஎம்சி வங்கியில் 21,000 போலிக் கணக்குகள், டிஎச்எஃப்எல் நிறுவனத்தில் ஒரு லட்சம் போலிக் கணக்குகள் மூலமாக ஊழல் நடத்தப்பட்டுள்ளது.
  • யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர்தான் 2004-ல் அந்த வங்கி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 2019 ஜனவரி வரை தலைமைப் பொறுப்பில் இருந்துவந்துள்ளார். டிஎச்எஃப்எல் நிறுவனத்துக்கு யெஸ் வங்கி கொடுத்த கடன் ரூ.4,500 கோடிக்குக் கைமாறாக ராணா கபூர் மற்றும் அவரின் இரு புதல்விகள் நடத்தும் போலி நிறுவனமான டோயிட் அர்பன் வென்ச்சர்ஸ் மூலமாக ரூ.600 கோடி லஞ்சம் பெற்றார் என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியிருக்கிறது; ராணா கபூரையும் கைதுசெய்துள்ளது. மேலும், 20 போலி நிறுவனங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கை மாறி இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிர்வாகக் குளறுபடிகள்

  • யெஸ் வங்கி நிர்வாகம், ‘ரிசர்வ் வங்கியின் விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதில்லை. வேண்டுமென்றே வாராக்கடனைக் குறைத்துக் காண்பிக்கிறது. பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிறுவனங்களுக்கெல்லாம் கடன் கொடுக்கிறது’ என்று ரிசர்வ் வங்கி குற்றஞ்சாட்டுகிறது.
  • 2017-லிருந்து யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறது என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், 2016 மார்ச் மாதம் ரூ.98,000 கோடியாக இருந்த இவ்வங்கியின் கடன், 2019 மார்ச் மாதம் ரூ.2,41,000 கோடியாக உயர்ந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. அதுவும் வங்கியின் வைப்புத்தொகையைவிட எப்படிக் கடன் தொகை கூடுதலாக இருக்க முடியும் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இதில் ரிசர்வ் வங்கி ஏன் தலையிடவில்லை?
  • நிலைமை மிகவும் மோசமடைந்ததால் ரிசர்வ் வங்கியின் முன்னாள் உதவி கவர்னர் காந்தி, இந்த வங்கியின் இயக்குநராக 2019 மே மாதம் நியமிக்கப்படுகிறார். ஆனால், அதற்குப் பிறகும் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அப்படியானால், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு என்ன ஆனது? 2019 செப்டம்பரில் ராணா கபூர் தன்னுடைய அனைத்துப் பங்குகளையும் சந்தையில் விற்று, முழுமையாக வெளியேறுகிறார். இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணமான ஒருவர் எப்படி இவ்வாறு சுலபமாக வெளியேற அனுமதிக்கப்படுகிறார்?
  • யெஸ் வங்கி நிர்வாகம் ரூ.15,000 கோடி மூலதனம் கொண்டுவருவதற்கு அனுமதி கேட்டதாம். ரிசர்வ் வங்கியும் ஆறு மாத காலமாக அதற்காகக் காத்திருந்ததாம். இது ஏற்கும்படியாக இல்லை. பிரச்சினை மூலதனத்தில் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் மூன்றே வருடங்களில் வகைதொகை இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது; அவற்றில் பல கடன்கள் உள்நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், பல வாராக்கடன்களை நல்ல கடன்போல் யெஸ் வங்கி நிர்வாகம் காண்பிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதை எப்படி மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எதிர்கொள்ளப்போகின்றன என்பதுதான் பிரதான கேள்வி.

தொடரும் தனியார் வங்கிகளின் திவால்

  • 1969-ல் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டதற்கு முன்பு நூற்றுக்கணக்கான தனியார் வங்கிகள் திவாலாகின. மக்களின் சேமிப்பு பறிபோனது. 1969-க்குப் பின்னர் வீழ்ந்த 25-க்கும் மேற்பட்ட வங்கிகள் அரசு வங்கிகளோடு இணைக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணம் காப்பாற்றப்பட்டது.
  • தனியார் வங்கிகள் ஏற்படுத்திய நஷ்டத்தை அரசு வங்கிகள்தான் சுமந்தன. அந்த வரிசையில் 2004-ல் குளோபல் ட்ரஸ்ட் வங்கி என்ற புதிய தனியார் வங்கி தொடங்கப்பட்ட பத்தே ஆண்டுகளில் ரூ.1,100 கோடி நஷ்டத்துடன் திவாலாகி அரசு வங்கியான ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது. ஆனால், நஷ்டம் ஏற்படுத்திய உயர்மட்ட நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  • தற்போது யெஸ் வங்கியின் பங்குகளில் 49%-ஐ அரசு வங்கியான ஸ்டேட் வங்கி வாங்கப்போவதாக ஒரு திட்டம் ரிசர்வ் வங்கியால் வகுக்கப்பட்டுள்ளது. அப்படியானால்யெஸ் வங்கி தொடர்ந்து தனியார் வங்கியாகத்தான் இருக்கும். ஒரு அரசு வங்கி தனக்குப் போட்டியான வங்கியைத் தானே எப்படி நிர்வகிக்க முடியும்? இது முரணை உருவாக்கும். விதிகளுக்குப் புறம்பாக உள்நோக்கத்துடன் செயல்பட்டு நஷ்டத்தை உண்டாக்கியவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதுடன் அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு, நஷ்டம் ஈடுகட்டப்பட வேண்டும். யெஸ் வங்கியின் வாராக்கடனை முழுமையாக வசூலிக்க வேண்டும்.
  • மேலும் சில தனியார் வங்கிகளின் நலன் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அரசு வங்கிகள் மட்டும்தான் மக்களின் சேமிப்புக்குப் பாதுகாப்பாக இருக்கும். அவை மட்டும்தான் மக்கள் நலனைப் பேணும் வகையில் கடன் சேவை செய்ய முடியும். எனவே, அனைத்து தனியார் வங்கிகளையும் அரசுடமையாக்க வேண்டும். ‘இனி தனியார் வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படாது’ என்ற கொள்கை அறிவிப்பை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமே மக்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் ஒரே வழி.

நன்றி: இந்து தமிழ் திசை (10-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories