TNPSC Thervupettagam

ரஃபேல் நடால்: டென்னிஸ் களத்தின் காளைச்சண்டை வீரன்

October 18 , 2024 89 days 115 0

ரஃபேல் நடால்: டென்னிஸ் களத்தின் காளைச்சண்டை வீரன்

  • ஸ்​பெயின் நாட்டைச் சேர்ந்த மகத்தான டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தொழில்​முறைப் போட்டிகளி​லிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். டென்னிஸ் ரசிகர்​களுக்கு இதுவொன்றும் அதிர்ச்​சி​யூட்​டக்​கூடிய செய்தி​யல்ல. கடந்த சில வருடங்​களாகவே காயங்​களாலும் அறுவை சிகிச்​சைகளாலும் அவருடைய உடல் விளையாடு​வதற்கு ஒத்துழைக்க மறுத்​துக்​கொண்​டிருந்தது. கடுமையான உடல் வலிகளை மீறிப் பல ஆண்டுகள் தொடர்ச்​சியாக மிக உயர்ந்த தரத்துடன் விளையாடிவந்த வீரர் டென்னிஸ் சரித்​திரத்​திலேயே நடாலாகத்தான் இருப்​பார்​.
  • ​விளை​யாட்டுக் களத்தைப் போர்க்​களத்தோடு ஒப்பிடுவது அபத்தமென்​றாலும், நடாலின் ஆட்டம் ரத்தம் சிந்தாத போர்க் காட்சி​யாகத்தான் தெரிந்​திருக்​கிறது. டென்னிஸ் களத்தில் நடால் ஒரு ஸ்பானியக் காளைச் சண்டை வீரரைப் போலத்தான் போராடி​யிருக்​கிறார்.

தணியாத போர்க் குணம்:

  • டென்னிஸ் சரித்​திரத்தில் புள்ளி​விவரக் கணக்கு​களால் நடால் நினைவு​கூரப்பட மாட்டார். இவ்வளவுக்கும் ‘கிராண்ட் ஸ்லாம்’ என்று அழைக்​கப்​படும் உலகின் நான்கு முதன்​மையான டென்னிஸ் போட்டிகளான விம்பிள்டன், ஃபிரெஞ்சு ஓபன், யு.எஸ்​.ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் 22 முறை அவர் வென்றிருக்​கிறார்.
  • ஜோகோவிச் 24 வெற்றிகளோடு முதலிடத்​தி​லும், ஃபெடரர் 20 வெற்றிகளோடு மூன்றாவது இடத்திலும் உள்ளனர். சாதனைக் கணக்கில் வரலாற்றின் ஆகச்சிறந்த இம்மூவரின் அருகில்கூட பழைய வீரர்கள் எவரும் இல்லை. ஆனாலும் நடாலின் சிறப்பு 22 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளோ, அசாதாரண சாதனையான 14 ஃபிரெஞ்சு ஓபன் வெற்றிகளோ அல்ல.
  • தலைசிறந்த டென்னிஸ் வீரர்​களின் வெற்றிக்கான அடிப்படை அம்சங்கள் என - விளையாட்டுத் திறமை, உடல்தகுதி, மனவலிமை, வியூகத்​தந்​திரம் ஆகிய நான்கு திறன்​களைச் சொல்லலாம். சமீபத்திய உதாரணங்களான ஃபெடரர், ஜோகோவிச், முன்னாள் வீரர்களான சாம்ப்​ராஸ், அகஸ்ஸி, பெக்கர், மெக்கன்ரோ, போர்க், கானர்ஸ் ஆகியோரிடம் மேற்குறிப்​பிட்ட நால்வகைத் திறன்​களும் இருந்​தா​லும், இவர்களைத் தாண்டி நடால் உயர்ந்து நிற்பது போர்க் குணம் என்கிற ஐந்தாவது திறனால்​தான்.
  • மன வலிமைக்கும் போர்க் குணத்​துக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. அது 2022ஆம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதிப் போட்டியில் டெய்லர் ஃபிரிட்​ஸுடன் நடால் மோதியபோது துலக்​க​மானது. அந்த வருடம் விம்பிள்​டனில் நடால் ஆடுவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அறுவைசிகிச்சை செய்திருந்த காயங்கள் முற்றிலும் குணமாகி​யிருக்க​வில்லை.
  • ஆனாலும் ஆட வந்தார். பழைய மணிக்​கட்டுக் காயம், வழக்க​மாகத் தொல்லை கொடுத்து​வரும் கால் தசைக்​கிழிசல் ஆகியவற்றோடு கடுமையான வயிற்றுத் தசைப்​பிடிப்பும் சேர்ந்​து​கொள்ள, நரக வேதனையோடு ஃபிரிட்ஸ் என்ற அந்தத் துடிப்பான இளம் வீரரோடு நடால் அன்று ஆடியது விளையாட்​டல்ல, பொருதல் என்றே சொல்ல வேண்டும்.
  • அன்றைய ஆட்டம் உண்மையில் நடாலுக்கும் ஃபிரிட்​ஸுக்கும் இடையில் நடைபெற்​றதல்ல. அது நடாலின் மனதுக்கும் உடலுக்கும் இடையே நடைபெற்ற போர். உடல் வலி எல்லை மீறும்​போது, மன வலிமை சற்றுச் சுணங்​கினாலும், நடாலின் உள்ளார்ந்த போர்க் குணமே அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.

முழுமையான ஆட்டத்​திறன்:

  • நடால் டென்னிஸ் ஆடும் முறை ஃபெடரரைப் போல நளினமானதல்ல, முரட்டுத்​தன​மானது. ஜோகோவிச் போல எல்லா ‘ஷாட்​’டு​களும் கைவரப் பெற்றவரோ, அவரளவுக்கு வேகமாக ஓடக்கூடியவரோ அல்ல. ஆனால், இவ்விரு​வரை​யும்விட வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறி நடாலிடம் இருந்தது. தோல்வி நிச்சயம் என்கிற கட்டத்​தில்கூட கடைசிப் புள்ளிவரை அவர் சோர்வடைந்ததோ, விட்டுக்​கொடுத்ததோ கிடையாது.
  • நடாலைப் போலவே முரட்டுத்​தனமாக ஆடிய வீரர்கள் இதற்கு முன்பும் இருந்​திருக்​கிறார்கள் - தாமஸ் முஸ்டரைப் போல. ‘பேஸ்​லைன்’ எனப்படும் மைதானத்தின் பின் கோட்டை ஒட்டியே ஆடிக்​கொண்டு, வலையின் அருகே பெரும்​பாலும் வராமல் பந்தை மிகவும் வலுவாக அடித்து ஆடியவர்​களும் இருந்​திருக்​கிறார்கள் - லெண்டில், அகஸ்ஸியைப் போல.
  • அவர்களுக்கும் நடாலுக்கும் இடையி​லிருந்த முக்கியமான வேறுபாடு, எதிராளியின் பலவீனப் பகுதியையே தொடர்ந்து தாக்கிக்​கொண்​டிருப்பது. அந்த உத்தியை எல்லா விதமான வீரர்​களுக்கும் எதிராகப் பயன்படுத்து​வதற்கு ஒருவரிடம் முழுமையான ஆட்டத் திறனும் மதி நுட்பமும் இருந்தாக வேண்டும். அது நடாலிடம் இருந்தது.

மகத்தான யுத்தங்கள்:

  • விம்பிள்​டனில் இயல்பான புல்தரை ஆட்டம் ஆடுகின்ற பெக்கர், எட்பெர்க் போன்றோரை வீழ்த்து​வதற்காக லெண்டில் தனது சொந்த ஆட்ட முறையையே மாற்றி, ‘சர்வ் அண்டு வாலி’ ஆட்டத்தை ஆடியதால்தான் விம்பிள்டனை வெல்லவே முடிய​வில்லை. ஆனால், விம்பிள்டன் சரித்​திரத்​திலேயே மகத்தான ஆட்டம் என்று கருதப்பட்ட 1980ஆம் வருட போர்க், மெக்கன்ரோ போட்டியையே பின்னுக்குத் தள்ளிய போட்டி, ரோஜர் ஃபெடரர் என்கிற விம்பிள்டன் நாயகனை நடால் 2008இல் இறுதிப் போட்டியில் வீழ்த்​தியது.
  • நடாலின் ஆட்டம் புல்தரை ஆட்டத்​துக்கு ஏற்றதல்ல. விம்பிள்​டனைப் பொறுத்தவரை ஃபெடரர் உச்சத்தில் இருந்த காலம் அது. புல்தரையில் அவரிட​மிருந்து ஒரேயொரு ‘செட்’டை அபகரிப்​பதுகூட மற்ற வீரர்​களுக்குச் சாத்தி​யமற்றதாக இருந்த நேரத்​தில், முதல் இரண்டு செட்களை வென்று, அடுத்த இரண்டு செட்களை இழந்தும் ஐந்தாவது செட்டில் நம்ப முடியாத ஆட்டத் திறனை வெளிப்​படுத்தி ஃபெடரரை அதிர்ச்​சிக்கு உள்ளாக்​கினார்.
  • டென்னிஸ் உலகின் மகத்தான காதல் கதை என்று நடாலுக்கும் ஃபிரெஞ்சு ஓபன் அரங்கமான ரோலண்ட் கரோஸுக்கும் இடையிலான பந்தத்​தைத்தான் சொல்லலாம். களிமண் ஆட்டக்களம் அவரின் தாய்நிலம். ஃபிரெஞ்சுக் களிமண் எனும் செம்மண் தரை புல்தரைக்கு நேரெதிரானது. மின்னல் வேக சர்வீஸ்கள் செம்மண்ணில் எடுபடு​வ​தில்லை. பந்து ‘டாப் ஸ்பின்​’னாகி அதிகமாக எழும்​பிவரும். தோள்பட்டை உயரத்​தில்தான் பந்தைச் சந்தித்து அடிக்க வேண்டி​யிருக்​கும்.
  • மிக வலுவான உடற்தகுதி தேவைப்​படும் ஆட்ட முறை அது. நடால் 2005ஆம் வருடத்​திலிருந்து சென்ற வருடம் வரை 14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருக்​கிறார். நான்கு முறைதான் தோல்வி. தொழில்​முறைப் போட்டிகளாக டென்னிஸ் மாற்றப்​பட்​டதற்குப் பிறகு, எந்தவொரு வீரரும் ஒரு குறிப்​பிட்ட போட்டியில் நடாலைப் போல ஆதிக்கம் செலுத்​தி​ய​தில்லை.
  • பெரும்​பாலான விளையாட்டு வீரர்​களின் ஆட்ட முறையைப் போலவேதான் அவர்களுடைய உண்மையான குணமும் இருக்​கும். ஆனால் முரட்டுத்​தனமாக, வெறிக் கூச்சலிட்டுக்​கொண்டு விளையாடும் நடால், இயல்பில் மிகவும் மென்மை​யானவர். அது மட்டுமல்​லாமல் ஜோகோவிச், கானர்ஸ் போல போட்டி​யாளர்களை மதிக்​காமல் இகழ்ந்​தவரல்ல. ஃபெடரர் ஓய்வு பெற்றபோது நடால் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுததை உலகமே கண்டு வியந்தது.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள், பெற்றோரின் மணமுறிவு, இடைவிடாமல் துன்புறுத்​திக்​கொண்​டிருந்த காயங்கள் என்று சோதனைகள் சூழ்ந்​திருந்​தாலும் நடாலின் ஸ்பானிய ரத்தத்தில் கலந்திருந்த புறமுதுகு காட்டாத போர்க் குணம், அவரை 18 வருடங்​களாகத் தலைசிறந்த டென்னிஸ் வீரராக உச்சத்தில் வைத்திருந்தது. விளையாட்டு வீரர்​களின் வாழ்க்கையில் வெற்றிகளோடு தோல்வி​களும் வருவது இயற்கை. ஆனால், நடாலைப் போன்ற வீரர்​கள்தான் தோல்வி​யுறும்​போதும் தோற்றவர்களாக இருப்​ப​தில்​லை.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories