TNPSC Thervupettagam

ரத்தக் கொதிப்புக்கு ‘5 எஸ்' செயல்முறை

November 16 , 2024 61 days 84 0

ரத்தக் கொதிப்புக்கு ‘5 எஸ்' செயல்முறை

  • எகிறும் ‘பி.பி.’யால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். வெளுத்தது எல்லாம் பால் ஆகாது. அப்படித்தான், எல்லா விபரீதங்களும் எல்லாருக்கும் ஏற்படாது. அவரவர் உடல் தன்மை, ‘பி.பி.’யின் அளவு, சிகிச்சை முறை, பரம்பரை ஆகியவற்றைப் பொறுத்து விபரீதம் மாறும். ஒருவருக்குச் சிறுநீரகத்தில் சிக்கல் என்றால், அடுத்தவருக்கு இதயத்தில்; இன்னொரு வருக்குக் கண்ணில்.
  • பொதுவாக, ரத்தக் கொதிப்பு நாள்பட்ட வர்களுக்கே ஆபத்து நெருங்கும். ஆனாலும், விதிவிலக்காகச் சிலருக்கு ஆரம்பக் கட்டத்தி லேயே ஆபத்து ஆரம்பமாகும். ஆகவே, ‘பி.பி.’ அதிகரிப்பதை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியது முக்கியம்.
  • அடுத்து, ‘பி.பி.’யைக் கட்டுப்படுத்துவது என்பது பெரிய விஷயமே இல்லை.
  • அதிலும் ரத்தக் கொதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் இதைக் கட்டுப்படுத்துவது மிக மிக எளிது. நம் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்துகொண்டாலே போதும், அங்குசத்துக்கு அடங்கும் யானைபோன்று ‘பி.பி.’ நம் கட்டுப் பாட்டுக்குள் வந்துவிடும். இந்த மாற்றத்தை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். எப்படி?

உணவு ஒழுங்குமுறை:

  • எடை குறைப்பு, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு எதுவானாலும் “டயட்டில் இருங்கள்” என்கிறோம். ஆனால், ‘டயட்’ என்றால், அது உணவைக் குறைப்பது அல்லது உணவு வகையை மாற்றுவது என்கிற அளவில்தான் பலருக்குப் புரிதல் இருக்கிறது. அறிவியல்படி, தினமும் பின்பற்ற வேண்டிய உணவு ஒழுங்கு முறை அது. வாழ்க்கை முழுவதுமான உணவு முறையாக அது மாற வேண்டியது முக்கியம்.

கைகொடுக்கும் ‘டேஷ் டயட்’ (DASH Diet) 

  • சரி, ரத்தக் கொதிப்பைக் கட்டுப் படுத்தும் ‘டயட் பிளான்’ எது? ‘டேஷ் டயட்’. அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம் எதுவானாலும் முழுத் தானிய உணவாக இருக்கட்டும். நிறை கொழுப்புள்ள இறைச்சி வகைகள், தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், சீஸ் போன்ற பால் சார்ந்த உணவு, ஊடுகொழுப்பு (Trans fat) மிகுந்த சாஸ், கிரீம், கேக் உள்ளிட்ட பேக்கரி பண்டங்கள், இனிப்பு வகைகள், செயற்கை பானங்கள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவை அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
  • எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவு வகைகள் குறைக்கப்பட வேண்டும். பாமாயில், வனஸ்பதி ஆகவே ஆகாது. ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைச் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு அரை லிட்டர் எண்ணெய் பயன்படுத்தினால், ரத்தக் கொதிப்புக்குக் கடிவாளம் போடலாம்.
  • சைவப் பிரியர்கள் காய்கறி, கீரை, நட்ஸ், பீன்ஸ், விதை உணவை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அசைவப் பிரியர்கள் தோலுரித்த கோழிக்கறி, முட்டை, மீன் சாப்பிட்டுக்கொள்ளலாம். காபி தினமும் மூன்று கப் குடிக்கலாம். பிளாக் டீ, லெமன் டீ, கிரீன் டீ குடிப்பது நல்லது. பொட்டாசியமும், மெக்னீசியமும் ‘பி.பி.’யைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் தாதுக்கள். ஆப்பிள், ஆரஞ்சு, உலர் திராட்சை, எலுமிச்சை, வாழைப் பழம், இளநீர் ஆகியவற்றில் இந்த இரண்டு சத்துகள் அதிகம்.

நடக்க நடக்க நன்மை:

  • ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கவும் வந்து விட்டால் கட்டுப்படுத்தவும் உடல் எடை சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஆரோக்கிய உணவுப் பழக்கம் முக்கியம். அதோடு, தினமும் 40 நிமிடங்கள் அல்லது வாரத்துக்கு 150 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். நீச்சலும் சைக்கிள் ஓட்டுதலும் நல்லது. யோகா, ‘புல் அப்ஸ்’ போன்ற தசைப் பயிற்சிகளையும் செய்யலாம்.

மாத்திரைகள் எப்போது அவசியம்?

  • ‘பி.பி.’யை நிர்வகிப்பது நம் வாழ்நாள் கடமை. சரியான வாழ்க்கை முறைகளுக்கு அது அடங்கவில்லை என்றால் மாத்திரைகள் தான் கைகொடுக்கும். நமக்கு வயதான பிறகு தள்ளாடாமல் நடக்கக் கைத்தடி தேவைப் படுகிற மாதிரிதான், ‘பி.பி.’ மாத்திரைகள். கடைசி வரை அவை தேவைப்படும். மருத்து வரின் பரிந்துரையின் பேரில்தான் மாத்திரை சாப்பிட வேண்டும்.
  • மருத்துவர் சொல்லாமல் மாத்திரையைக் குறைப்பதோ, நிறுத்துவதோ கூடாது. தொடர்ந்து மாத்திரையைச் சாப்பிட்டுக் கொண்டு, மாதா மாதம் ‘பி.பி’யைச் சோதித்துக் கொண்டு, அதைக் கட்டுப்படுத்திவிட்டால் ரத்தக் கொதிப்பும் மழையில் நனைந்த பட்டாசுதான்!

ரத்தக் கொதிப்பு - அறிகுறிகள்:

  • பொதுவாக, ரத்தக் கொதிப்பு எந்த அறிகுறியும் காட்டாமல் மிகவும் சமத்தாகவே இருக்கிறது. ஆனாலும், சிலருக்குச் சில வேளைகளில் சில அறிகுறிகளைக் காட்டும். கடுமையான தலைவலி, நெஞ்சுவலி, கிறுகிறுப்பு, படபடப்பு, மயக்கம், மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, பார்வை மங்குவது, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவது, காதில் இரைச்சல், மனக்குழப்பம் போன்றவை ரத்தக் கொதிப்புக்கு முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே உஷாராகிவிட வேண்டும்.

‘5 எஸ்’ செயல்முறை:

  • உங்களில் பலர் ‘5 எஸ்’ முறையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெரிய நிறுவனங்களில் இதைக் கடைப்பிடிக்கிறார்கள். நாம் வேலை செய்யும் இடத்தை ஒழுங்குபடுத்தினால் போதும்; நம் வேலையைத் திறமையாகவும் திறன்படவும் பாதுகாப்பாகவும் செய்ய முடியும் என்பதைக் குறிக்கும் ஜப்பானியச் செயல்முறை இது. இது போல் ‘பி.பி.’யை நிர்வகிப்பதற்கும் ‘5 எஸ்’ செயல்முறை இருக்கிறது. ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் வாழ்வியல் முறை இது.

முதல் ‘எஸ்’ (Salt):

  • ரத்தக் கொதிப்புக்கு உரம் போடுவது சமையல் உப்பு (Sodium chloride). இதுதான் முதல் ‘எஸ்’. “உப்பைக் குறை”. இது ‘ஆத்திசூடி’ சொல்லாதது. ஆனாலும், நமக்குத் தேவையானது. இயல்பாக உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஐந்து கிராம் உப்பு போதுமானது.
  • ஆனால், நாம் சாப்பிடுவதோ தினமும் 15 கிராம் உப்பு. ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் நான்கு கிராமுக்கும் குறைவாக உப்பு எடுத்துக்கொள்வது நல்லது. ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக் கண்டம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், நொறுவை, பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவு, உடனடி உணவு, செயற்கை வண்ண உணவு ஆகியவற்றில் உப்பு குவிந்திருக்கும். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது ‘எஸ்’ (Smoking):

  • ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும்போதும் 5லிருந்து 10 மி.மீ. வரை ‘பி.பி.’ கூடுகிறது. 20 நிமிடங்கள் வரை ரத்தக் குழாய்களில் அது ஆதிக்கம் செலுத்துகிறது. அப்போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, புகைப் பழக்கத்தை அறவே நிறுத்துங்கள். மதுவுக்கும் ‘நோ’ சொல்லுங்கள்.

மூன்றாவது ‘எஸ்’ (Sleep):

  • தினமும் எட்டு மணி நேரம் உறக்கம் அவசியம். வாரம் ஒருநாள் ஓய்வு அவசியம். ஓய்வு என்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும்தான். ஆகவே, வார இறுதியைக் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்.

நான்காவது ‘எஸ்’ (Stress):

  • மன அழுத்தம் ரத்தக் கொதிப்புக்குத் தோரணம் கட்டும். தினமும் தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும். ஆனால், இது ஆரம்பக் கட்டத்துக்கே சரிப்பட்டுவரும். மன அழுத்தம் அடுத்த கட்டத் துக்குத் தாண்டினால், மாத்திரைகளும் தேவைப்படும். மனநல ஆலோசனை இதற்கு உதவும்.

ஐந்தாவது ‘எஸ்’ (Social involvement):

  • சுழற்சங்கம், அரிமா சங்கம், தொழிற்சங்கம், மூத்தோர் சங்கம் போன்றவற்றுடனோ இலக்கிய அமைப்புகளுடனோ இணைந்துகொண்டு சமூக ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories