TNPSC Thervupettagam

ரயில்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

February 12 , 2025 5 hrs 0 min 16 0

ரயில்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

  • வேலூர் அருகே, பெண்களுக்கான ரயில் பெட்டியில் அத்துமீறி நுழைந்த நபர், அதில் பயணித்த கர்ப்பிணியைப் பாலியல் வன்முறை செய்ய முயன்று, ரயிலிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பைக் கேள்விக்கு உள்படுத்தும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், பெண்களுக்கான பிரத்யேக ரயில் பெட்டியிலும் இப்படியான குற்றங்கள் நிகழ்வது அதிர்ச்சியளிக்கிறது. இவ்விஷயத்தில், ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் தொய்வு ஏற்படுவது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது.
  • திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஆந்திரத்தைச் சேர்ந்த பெண், தனது சொந்த ஊர் செல்வதற்காக பிப்ரவரி 6 அன்று கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் விரைவு ரயிலில் மகளிருக்கான பெட்டியில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
  • அப்போது ஜோலார்பேட்டையில் ஹேமராஜ் என்கிற இளைஞர் அப்பெட்டியில் ஏறியுள்ளார். மகளிருக்கான பெட்டியில் ஏறியதை அந்தப் பெண் சுட்டிக்காட்டிய பின்னரும், அதைப் பொருட்படுத்தாத இளைஞர், அப்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீற முயன்றிருக்கிறார்.
  • நான்கு மாதக் கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், கடுமையாகப் போராடித் தன்னைத் தற்காத்துக்கொண்ட நிலையில், அந்தப் பெண்ணை ஓடும் ரயிலிலிருந்து அந்த இளைஞர் தள்ளிவிட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், நல்லவேளையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டுவிட்டார். ஆனால், அவரது வயிற்றில் இருந்த சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
  • மிக மோசமான இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ஹேமராஜ் ஏற்கெனவே கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. மோசமான நடத்தை கொண்ட ஒருவர் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் அளவுக்குச் சட்ட நடவடிக்கைகள் காத்திரமாக இல்லாதது குறித்த விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இன்னொருபுறம், ரயில் பயணிகள் - குறிப்பாகப் பெண் பயணிகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் ரயில்வே துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிறது என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
  • சம்பந்தப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, பெட்டியில் இருந்த பெண் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் வேண்டுமென்றே அந்தப் பெட்டியில் அந்த நபர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறார். பாதுகாப்புக்காகப் பெண் காவலர்கள் அந்தப் பெட்டியில் இல்லை என்பதையும், அவசர உதவி கோரும் வகையில் அருகில் எந்த ரயில்வே அதிகாரியும் இல்லை என்பதையும் அப்பெண்ணின் வாக்குமூலம் உறுதிப்படுத்துகிறது.
  • இருபாலருக்கும் பொதுவான பெட்டிகளிலும் பாலியல் சீண்டல்களைப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். வேலூர் சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலும், பிப்ரவரி 10இல் தூத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ரயிலில் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கைதாகியிருக்கிறார் ஓர் இளைஞர்.
  • இந்தியாவில் உள்ள ரயில்களில் ஒரு நாளில் சராசரியாக 2.3 கோடி பேர் பயணம் செய்கிறார்கள். அவர்களில் 46 லட்சம் பேர் பெண்கள் என 2021இல் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றன என்பது முக்கியக் கேள்வி. ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும் போதிய அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், ரயில்வே போலீஸ் ரோந்து நடைமுறை இல்லாததே இத்தகைய குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
  • தலைநகர் டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில் நிலையத்திலேயே, கடந்த இரண்டு ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை 105%அதிகரித்திருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு மூலம் 2024இல் தெரியவந்திருக்கிறது. இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமானவை. இந்த நிலை தொடரக் கூடாது. ரயிலில் பயணிக்கும் பெண்களைப் பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இத்தகைய குற்றங்களைக் களைய முடியும்!

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories