TNPSC Thervupettagam

ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள்: தீவிர மறுபரிசீலனை தேவை!

October 15 , 2024 152 days 277 0

ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள்: தீவிர மறுபரிசீலனை தேவை!

  • இந்தியாவில் ரயில் விபத்துகள் தொடர்கதையாகிவருவது கவலையளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதிய விபத்து இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்த அவசியத்தையும் இந்த விபத்து மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறது.
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் அக்டோபர் 11ஆம் தேதி இரவு, இணைப்பு தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு - தர்பங்கா இடையேயான பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் மொத்தமாக 13 பெட்டிகள் தடம்புரண்டன.
  • 20 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் நேரவில்லை. விபத்து தொடர்பாக, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான விசாரணை அக்டோபர் 16, 17 தேதிகளில் நடத்தப்படவிருக்கிறது. இன்னொரு புறம், இது சதிவேலையாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்திருப்பதால், தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) இது தொடர்பாக விசாரணை நடத்திவருகிறது.
  • அதேவேளையில், மனிதத் தவறுகளால் அடிக்கடி விபத்துகள் நடப்பதையும் அரசு தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்ஜின் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களின் பணிச் சுமை அதிகரித்திருப்பது, அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவை அவர்களுக்குக் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இவை களையப்பட வேண்டும். ரயில்வேக்கான பிரத்யேக பட்ஜெட் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், ரயில்வே பாதுகாப்பில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
  • பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்துவது, ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள், சிக்னல்கள் என அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துவது எனப் பல்வேறு அம்சங்கள் பின்பற்றப்பட வேண்டும். விபத்து நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தயங்காமல் பொறுப்பேற்றுக்கொள்வதும் பணியில் கவனக்குறைவாக இருப்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்குவதும் அவசியம். சதிச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு அமைப்புகள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
  • 2023இல் ஒடிஷாவின் பாலாசோரில் நடைபெற்ற ரயில் விபத்தைப் போலவே கவரைப்பேட்டை விபத்து நேர்ந்திருந்தாலும், இந்த முறை பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படாததற்கு, பாக்மதி விரைவு ரயிலின் லிங்க் ஹாஃப்மேன் பஷ் (எல்ஹெச்பி) அம்சம் முக்கியக் காரணியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எல்ஹெச்பி ரயில் பெட்டிகள் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளைக் கொண்டவை. 2003ஆம் ஆண்டு முதல் பல்வேறு ரயில்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
  • இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் அனைத்து ரயில்களிலும் எல்ஹெச்பி, வந்தே பாரத் வகை ரயில் பெட்டிகள்தான் பயன்பாட்டில் இருக்கும் என்றும், இதன் மூலம் பராமரிப்புச் செலவில் 40% சேமிக்கப்படும் என்றும் கடந்த ஆண்டு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த கட்டணம் கொண்ட ரயில்கள் முதல் அனைத்து வகையான ரயில்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
  • வந்தே பாரத் ரயில்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் ‘கவச்’ அமைப்புக்கு ரயில்வே துறை அளிப்பதில்லை என்னும் விமர்சனமும் உண்டு. விபத்துகளுக்கு வித்திடும் மனிதத் தவறுகளைத் தடுக்கும் அதிநவீன சாதனமான ‘கவச்’ஐ நிறுவும் பணி சவாலானது.
  • ரயில் இன்ஜின்கள், தண்டவாளங்கள், தகவல் மையங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்படும் கவச் அமைப்பு, இந்திய ரயில்வேயில் இதுவரை மொத்தம் 2% மட்டுமே பொருத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. நாடு முழுவதும் கவச் அமைப்பு பொருத்தும் பணியை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும். ரயில் பயணங்கள் அச்சுறுத்தலானவையாக மாறிவிடும் சூழல் உருவாவதைத் தடுக்க அரசு முன்வர வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 10 – 2024)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top