TNPSC Thervupettagam

ரயில் ஓட்டும் பெண்களின் வேதனைகள்

September 29 , 2024 60 days 146 0

ரயில் ஓட்டும் பெண்களின் வேதனைகள்

  • இந்திய ரயில்வேயில் ரயில் டிரைவர்களாகப் (லோகோ பைலட்) பணிபுரியும் பெண்களுக்குப் பணி காரணமாக உடல், மனநலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதைப் பற்றி ரயில்வே உயர் நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் கண்டுகொள்ளப்படவில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இப்போது முறையிட்டுள்ளனர். தகவல் அளித்த பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர்களுடைய பிரச்சினைகள்:
  • மத்திய பிரதேச மாநிலத்தில் பணிபுரியும் உதவி டிரைவர் (அசிஸ்டெண்ட் லோகோ பைலட்) மீனாவுக்கு 2021 மே மாதம் வயிற்றில் சுரீலென்று வலி ஏற்பட்டு காய்ச்சலும் கண்டது. அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு வலிமறப்பு மாத்திரைகள் தந்து, சோனோகிராபி என்ற சோதனை செய்தனர். சிறுநீர்ப்பாதை தொற்றாக இருக்கும் என்று மீனாவும் நினைத்தார். ஆனால், அந்தக் கடுமையான வலிக்குக் காரணம் சிறுநீரகத்தில் ஏற்பட்ட சீழ்க்கட்டி என்று பிறகு தெரிந்தது. சிறுநீர்ப்பாதை தொற்று பெரிதாகி சீழ்க்கட்டியாகிவிட்டது.
  • சரக்கு ரயில் ஓட்டும் மீனா, ஒருமுறை ரயிலில் ஏறினால் பணி முடிக்க குறைந்தது 12 மணி நேரம் பிடிக்கும். பணியின்போது கழிப்பறைக்குச் செல்ல முடியாது என்பதால் தண்ணீர் உள்ள பானங்களை மிகவும் குறைவாகவே அருந்துவார். மீனாவைப் போலவே 33 லோகோ பைலட்டுகளின் மருத்துவ அறிக்கையைப் பரீசிலித்தபோது, இது அவர்களுக்கு வேலை காரணமாக ஏற்படுவது தெரிகிறது. ரயில் ஓட்டுவது மிகவும் கடினமான, அதிக கவனத்துடன் செய்ய வேண்டிய பணி. இதைச் செய்யும் பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று, கருப்பையில் நார்த்திசு கட்டிகள், உயர் ரத்த அழுத்தம், கருச்சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன.
  • 1990களில் ரயில் என்ஜின்களிலேயே சிறு கழிப்பறைகளை ரயில்வே நிர்வாகம் நிறுவத் தொடங்கியது. ஆனால், இது எல்லா ரயில் என்ஜின்களிலும் இல்லை, மிகக் குறைவான என்ஜின்களில்தான் பொருத்தப்பட்டுள்ளது. அப்படி கழிப்பறை இருந்தாலும் அதில் நீரை நிரப்புவதில்லை. இதனால் அங்கே மூத்திர வாடை வீசுவதால் பெண்கள் அதைப் பயன்படுத்தவும் முடிவதில்லை.
  • உத்தர பிரதேசத்தில் லோகோ பைலட்டாக இருக்கும் சமீரா சொல்கிறார்: கழிப்பறைகள் ரயில் என்ஜினுக்குள் மட்டுமல்ல, ரயில் நிலையங்களில்கூட எங்களுக்கு இரண்டுவிதப் பிரச்சினைகளைத் தருகின்றன. பெண் டிரைவர்கள் தங்கும் பொது அறைகளில் கழிப்பறைகள் கிடையாது. நிலையத்தில் அனைவரும் பயன்படுத்தும் பொது கழிப்பறைகளுக்குத்தான் நாங்களும் செல்ல வேண்டும் அல்லது ரயில் நடைமேடையில் டிரைவர்கள், கார்டுகளுக்கென்று உள்ள தனியிடங்களின் கழிப்பறைகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு செல்வதற்கே ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தேவைப்படும்.

பெண் டிரைவர்கள் முறையீடு

  • தங்களுக்குச் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதுடன் பணிசெய்யும் இடத்தில் பாதுகாப்பும் குறைவாக இருப்பது குறித்து அனைத்திந்திய ரயில் ஊழியர்கள் கூட்டமைப்பு மூலம் மனு அளித்துள்ளனர். ரயில் டிரைவராகவும் இருந்துகொண்டு குடும்பத்தைக் கவனிப்பதும் பெரிய போராட்டமாக இருக்கிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். ரயில்வே துறையிலேயே டிரைவர் அல்லாமல் வேறு பணிகளுக்குத் தங்களை மாற்றிவிடுமாறும் கோரியுள்ளனர்.
  • இந்திய ரயில் துறையில் சுமார் 2,000 பெண் டிரைவர்கள் உள்ளனர், அதில் 1,500 பேர் இந்தக் கோரிக்கையை ஆதரித்துக் கையெழுத்திட்டுள்ளனர். 2018 முதலே ரயில் பெண் டிரைவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை ரயில்வே நிர்வாகத்துக்குத் தெரிவித்துவருகின்றனர்.

ராகுலிடம் முறையீடு

  • மேற்கு வங்கத்தில் காஞ்சன் ஜங்கா ரயில், விபத்தில் சிக்கியது; ரயில் டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நேரிட்டதாக ரயில்வே நிர்வாகம் முதலில் தெரிவித்தது. பிறகு நீண்ட விசாரணைக்குப் பிறகு, அது டிரைவருடைய தவறு அல்ல என்று தெரிவித்தது. இதை அடுத்தே ரயில் ஓட்டுநர்களின் பிரச்சினைகள் அதிகம் வெளியில் தெரியத் தொடங்கின. ரயில் ஓட்டுநர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஜூலை மாதம் சந்தித்து விரிவான மனு அளித்தனர். அது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக அவரும் உறுதி அளித்தார்.

பெண்களுக்கேற்ப இல்லை

  • ரயில் என்ஜின்களில் பெண் டிரைவர்கள் எளிதில் பணிபுரிவதற்கேற்ற வசதிகள் இல்லை. இந்தியப் பெண்களின் சராசரி உயரம் ஐந்தடி முதல் ஐந்தரை அடி வரையில்தான். ரயின் என்ஜின்களில் ஏறுவதற்கான சிறு ஏணி தரையில் படாதபடிக்கு உயர்த்திப் பொருத்தப்பட்டிருக்கும். எனவே, பெண்கள் தரையிலிருந்து மூன்று அல்லது நான்கு அடி தாவி, கைப்பிடியைப் பிடித்து ஏறியாக வேண்டும் என்கிறார் சமீரா.
  • என்ஜினில் ஏறுவதற்கு முன் உடலின் முழு எடையையும் சில நிமிடங்கள் கைகளில் தாங்கி, தொங்கியபடிதான் படிகளில் கால் வைத்து ஏற வேண்டும் என்கிறார் ஜூஹி. 2023 ஜூனில் அப்படி ரயில் என்ஜினில் ஏற முயன்றபோது கைப்பிடி நழுவி, ரயில் பாதையிலேயே விழுந்து பலமாக அடிபட்டுக்கொண்டார் ஜூஹி. அவருடைய தோள்பட்டையில் தசை நாண்கள் அறுந்துவிட்டன. ஒரு மாதத்துக்கும் மேல் மருத்துவ விடுப்பில் இருந்தார். மீண்டும் பணிக்குத் திரும்பிய பிறகு அலுவலகத்தில் மாற்று வேலை போட்டுத் தந்தனர். அந்த ஒரு மாதத்தில் தோள்பட்டை முழுதாக குணமாகவில்லை. எனவே, மேலும் சில முறை விடுப்பை நீட்டித்துக்கொண்டார்.
  • ஒரு கட்டத்தில் ரயில்வே நிர்வாகம் அவரை மீண்டும் ரயில் ஓட்டப் போக வேண்டுமென்று உத்தரவிட்டது. பணிக்குத் திரும்பிய சில நாள்களுக்கெல்லாம் தோள்வலி முன்பைவிட கடுமையாகிவிட்டது. பிறகு மீண்டும் விடுப்பு எடுத்துக்கொண்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள், அவர் பணிசெய்யும் தகுதியிலேயே இருப்பதாகக் கூறிவிட்டனர். பிறகு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கே எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யச் சொன்னார்கள். மேல் சிகிச்சைக்காக அவர் விடுப்பு எடுத்துக்கொண்டார். பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக அளிக்கும் விடுமுறையில், அதைக் கழித்தார்கள்.

பேறுகாலப் பிரச்சினைகள்

  • பெண் டிரைவர்கள் பேறு காலங்களில் படும் பிரச்சினைகள் அதிகம். 2021 அக்டோபரில் சமீரா வெளியூரில் ரயில் ஓட்டும் பணியைச் செய்தார். திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதும், மாதவிடாய்தான் என்று முதலில் நினைத்தார். பிறகு அது வேறுவிதமாகத் தொடரவும் மருத்துவரிடம் சென்றார். கருத்தரித்திருந்தார் என்பதே சமீராவுக்குத் தெரியாது. கருக்கலைப்பு நடந்துவிட்டது என்று மருத்துவர் சொன்னபோது தாங்க முடியாத அதிர்ச்சிக்கு ஆளானார்.
  • முதல் குழந்தையின் வருகையை எதிர்பார்த்த அவருக்கு, கருவுற்றதும் அது கலைந்ததும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையுமே அளித்தது. பிறகு மீண்டும் 2023இல் மறுமுறை கருவுற்றார். கரு வளர்ந்து மூன்று மாதமானதுபோது மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. எவ்வளவோ கவனமாக இருந்தும், கடினமான வேலைகளைத் தவிர்த்தும்கூட, ரயில் ஓட்டும் வேலையின் கடினத்தன்மை காரணமாக மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது.
  • இன்னொரு முறை கருவுற விரும்பியபோது, டிரைவர் வேலைக்குப் பதில் அலுவலகத்திலேயே வேலைதருமாறு கோரினார். நிர்வாகம் வழக்கம்போல மறுத்துவிட்டது. எனவே, ஊதியமில்லாத நெடும் விடுப்பை எடுத்துக்கொண்டுவிட்டார். வருமானத்தைவிட குழந்தைச் செல்வம் பெரிது என்பதால் இந்த முடிவுக்கு அவர் வந்தார். ரயில் துறையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை செய்ய வேண்டுமென்றால் கருவுரும் காலங்களிலாவது அவர்களுக்கு உடல் – மன அழுத்தம் குறைவாக ஏற்படுத்தும் வேலைகளைத் தர வேண்டும் என்று கோருகிறார்.

நிர்வாகத்துக்கு சங்கம் கடிதம்

  • ரயில்வே வாரியத்துக்கு ரயில் ஓட்டுநர்கள் சங்கம் இது தொடர்பாக விரிவான கடிதம் எழுதியிருக்கிறது. “பெரும்பாலான பெண் ஓட்டுநர்கள் கருச்சிதைவுக்கு ஆளாகிறார்கள். மகப்பேறு சுகமாக நடைபெற, மகப்பேறு காலத்திலாவது அவர்களுக்கு இந்த ஓட்டுநர் பணிக்கு பதிலாக, சுமை குறைந்த வேலைகளைத் தர வேண்டும். ரயில் ஓட்டும் வேலை என்பது தொடர்ச்சியாக ஆறு மணி முதல் 11 மணி நேர வேலையாக இருக்கிறது. பேறுகாலத்தில் பெண்கள் எளிதில் பலவீனம் அடைகிறார்கள். அவர்களுக்கு தலைசுற்றல், மசக்கையால் வாந்தி, லேசான மயக்கம் போன்றவை ஏற்படும். ரயிலை ஓட்டுவதற்கு உடலில் வலிமையும் இடைவிடாத கவனமும் தேவைப்படுகிறது.
  • பேறுகாலப் பெண் டிரைவர்கள் ரயிலை ஓட்டுவது அவர்களுக்கு மட்டுமல்ல ரயில் பயணிகள் அல்லது சரக்கு ரயில்களுக்கும் பாதுகாப்பானதல்ல. பெண் டிரைவர்கள் ரயில் என்ஜினுக்குள் போவதற்கே தாவி ஏற வேண்டும், படிகளில் ஏறி – இறங்க வேண்டும். வழியில் ரயில் பழுதாகி நின்றாலோ வேறு காரணங்கள் என்றாலோ ரயில் ஓட்டுநர் இறங்கி சோதிக்க வேண்டும். ரயில்கள் இரவு நேரங்களில் காட்டு வழியாகவும் ஆளரவமற்ற பகுதிகளிலும் சிக்னல்களுக்காகவும் நிற்க நேர்கிறது. எனவே, பெண் டிரைவர்களின் பாதுகாப்பு கருதி பேறுகாலத்தில் மாற்று வேலை தர வேண்டும்” என்று கடிதம் கோரியிருக்கிறது. பேறுகாலத்தில் நிர்வாகம் கனிவு காட்டாததால், உடல் நலனுக்காக வெவ்வேறு வகை விடுப்புகளைப் பெண் டிரைவர்கள் எடுக்க நேர்வதைக் கடிதம் விவரித்துள்ளது.

சமீராவின் பிரச்சினை

  • சமீரா இப்போது மூன்றாவது முறையாக கருவுற்றிருக்கிறார். இப்போது ஆறு மாதம். இள மாதத்தின் தொடக்க காலத்தில் அலுவலத்தில் லகுவான பணிகளைத் தந்தனர். பிறகு மீண்டும் ரயில் ஓட்டும் வேலைக்குப் போகச் சொல்லிவிட்டனர். அவர் மகப்பேறு நிலையை எடுத்துக் கூறியும் ரயில் மருத்துவமனை மருத்துவர்களும், உயர் அதிகாரிகளும், ‘வேண்டுமென்றே நடிப்பதாகக் கூறி’ அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே, மகப்பேறு கால மருத்துவ விடுப்பை முன்கூட்டியே எடுத்துக்கொண்டார் சமீரா.
  • குழந்தை பிறந்தவுடன் உடன் இருக்க விடுப்பு போதாதே என்ற கவலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய மாமியார் உடல் நலமில்லாதவர், முதியவர். அவருடைய கணவர் ராணுவ ஊழியர், எல்லைப்புறத்தில் வேலை செய்கிறார். குழந்தையைப் பராமரிக்க ஆள்களைப் போடலாம் என்றாலும் சிறு குழந்தைக்கு தாயாரின் கவனிப்புபோல் வருமா என்று கேட்கிறார் சமீரா. வெளியூரில் வேலை என்றால் வீடு திரும்ப மூன்று அல்லது நான்கு நாள்களாகிவிடும். பெண் டிரைவர்களில் இரண்டு அல்லது மூன்று முறை கருச்சிதைவுக்கு ஆளானவர்கள் எனக்குத் தெரிந்து பலர் இருக்கின்றனர், அது கொடுங்கனவு, அதிலிருந்து மீள்வது எளிதல்ல என்றும் கூறுகிறார் அவர்.

நள்ளிரவில் சங்கிலி இழுப்பு

  • பயணியர் ரயிலை ஓட்டும்போது நள்ளிரவு நேரத்திலும் ரயில் சங்கிலியை யாராவது இழுத்துவிடுவார்கள். அது எந்த இடம், பாதுகாப்பானதா என்றெல்லாம் யோசிக்காமல் சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டி எது, ஏன் இழுத்தார்கள் என்று பார்க்க இருட்டில் நடந்து சென்றே தீர வேண்டும். உதவி டிரைவர் ரயில் என்ஜினிலேயே காத்திருப்பார். அந்த நேரத்தில் சமூக விரோதிகளோ பயணிகளோ தாக்கினால் தப்பிக்க வழி ஏதுமில்லை.
  • ரயில்கள் தாமதமாகச் செல்ல நேர்ந்தாலோ, மேற்கொண்டு போக சிக்னல் கிடைக்காமல் ரயிலை மெதுவாக ஓட்ட நேர்ந்தாலோ, ரயில் பயணிகள் அதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் எங்களைப் பார்த்ததும் கேலிசெய்வார்கள் அல்லது இகழ்ச்சியாகப் பேசுவார்கள். ஒருமுறை சிக்னலுக்காக நீண்ட நேரம் காத்திருந்தபோது கீழே இறங்கிய பயணியில் ஒருவர் கல்லெடுத்து எங்கள் கேபின்மீது அடித்துவிட்டார்.

பணிக்குச் செல்வதற்கே…

  • இது மட்டுமல்ல, சில நாள்களில் இரவு நேர வேலைக்காக ரயில் நிலையம் வருவதற்கே அலைய வேண்டியிருக்கும். அதிகாலை புறப்பட வேண்டிய ரயிலுக்காக, ரயில் நிலையத்துக்கு அதிகாலை 2 மணிக்கே நிலையத்துக்குச் சென்றாக வேண்டும். அந்த நேரம் பொதுப் போக்குவரத்து இருக்காது. வீட்டில் இருப்பவர்கள் துணைக்கு வராவிட்டால் ஆட்டோ, டாக்சி ஆகியவற்றை நம்பியும் போக முடியாது. இதுபோன்ற நேரங்களில் ரயில்வே துறையே டிரைவர்கள் போன்றவர்களை அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறோம் என்கிறார் சமீரா.

குழந்தைகள் ஏக்கம்

  • அம்மா வேலைக்குப் போய் இரண்டு மூன்று நாள்களாகிவிட்டதே என்று குழந்தைகள் ஏக்கத்துடன் காத்திருப்பார்கள். அவர்களுக்கு உடல் நலமில்லாதபோதும் தேர்வுகளின்போதும் உடன் இருக்க விரும்புவோம். விடுப்பு கிடைப்பதைப் பொருத்துத்தான் அது நிறைவேறும். நேரங்கெட்ட நேரத்தில் வேலைக்குப் புறப்படுவதாலும் வீடு திரும்புவதாலும் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய நேரமும் குறையும்.
  • இந்த மன உளைச்சல்களையும் நாங்கள்தான் தாங்க வேண்டும். ஆண் டிரைவர்கள் வேலைக்குப் போகும்போது உணவு தயாரித்து அவருடைய மனைவியே தயாராக அளிப்பார். பெண்களான எங்களுக்கு அந்த உதவிகள் கிடையாது, நாங்களே சமைத்து எடுத்துச்செல்ல வேண்டும். அலுவலக வேலையுடன் வீட்டு வேலையையும் சேர்ந்தே பார்க்க வேண்டும் என்கிறார் ஜூஹி.

பதவி உயர்வே வேண்டாம்

  • ரயின் என்ஜினில் உதவி டிரைவராக இருக்கும் ஒரு பெண், எட்டு ஆண்டுகள் ஆகியும் ‘பதவி உயர்வே வேண்டாம், டிரைவர்களுடைய பொறுப்பும் மன உளைச்சலும் எனக்குத் தெரியும், இப்படியே உதவியாளராக இருந்துவிடுகிறேன்’ என்று நிர்வாகத்துக்கு எழுதியே கொடுத்துவிட்டார். ‘இப்போதுள்ள பணிச்சுமையே அதிகம், மேலும் அதிக பொறுப்புகளைச் சுமக்க முடியாது’ என்று காரணம் கூறியிருக்கிறார்.
  • இந்த வேலையில் சூழல் இப்படியே இருந்தால் எங்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திலும் பெண்களுக்கு உகந்த வேலை இதுவல்ல என்று கூறும் பெண் டிரைவர்கள், ‘இது ஆணாதிக்கம் நிறைந்த உலகம், இந்த வேலையும் ஆண்கள் மட்டுமே செய்துவந்த வேலை. சில விதிகளைத் திருத்தி பணிநிலையை மேம்படுத்தினால்தான் பெண்களாலும் ரயின் என்ஜின் டிரைவர் வேலையைத் தொடர முடியும்’ என்று கூறுகின்றனர்.
  • பெண்கள் ரயில் ஓட்ட வேண்டும் என்று விரும்பும் நிர்வாகம், அவர்களுடைய குறைகளை மட்டும் தீர்க்காமல் இருக்கிறது என்று ஆதங்கப்படுகின்றனர்.

நன்றி: அருஞ்சொல் (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories