TNPSC Thervupettagam

ரயில் போக்குவரத்து: பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்

June 6 , 2023 589 days 491 0
  • ஒடிஷா மாநிலத்தின் பாலேசோரில் ஜூன் 2 அன்று நடந்த கோர ரயில் விபத்து மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி, அதில் 275 பேர் உயிரிழந்திருப்பதும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகள் முறையாக நடக்கின்றனவா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
  • ரயில்வே துறையை மறுசீரமைப்பு செய்யப்போவதாக வாக்குறுதி அளித்தவர் பிரதமர் மோடி. எனினும், கடந்த 10 ஆண்டுகளில் அத்துறை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளும் பின்னடைவுகளும் அவரது நோக்கத்தை நிறைவுசெய்வதாக இல்லை. 2017இல் ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைத்தது மத்திய அரசு. ரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காக, ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக, ஒவ்வோர் ஆண்டும் ரூ.20,000 கோடி செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
  • ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தத் தொகையைச் செலவழித்திருக்காத ரயில்வே துறை, பாதுகாப்புப் பணி அல்லாத பிற ரயில்வே பணிகளுக்காக ரூ.2,300 கோடி செலவழித்திருக்கிறது. 2023-24 பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வே துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • எனினும், ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, ‘வந்தே பாரத்’ ரயில்களின் உற்பத்தியை அதிகரிப்பது ஆகியவற்றுக்கே அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இத்தனைக்கும், இருப்புப் பாதைப் பராமரிப்பு, சிக்னல் உள்ளிட்ட அம்சங்களில் குறைபாடுகள் இருப்பதால் விபத்துகள் நிகழ்வதாக, கடந்த ஏப்ரலில் நடந்த கூட்டத்தில் ரயில்வே வாரியத் தலைவர் ரயில்வே அமைச்சகத்துக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார். 2017 முதல் 2021 வரை 1,127 ரயில் தடம்புரண்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன எனத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
  • கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ‘கவச்’ எனும் ரயில் பாதுகாப்பு அமைப்பு, ரயில்கள் மோதி விபத்து நேர்வதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. எனினும், இந்தப் பாதுகாப்பு அம்சம், 2% ரயில்களில் மட்டும்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒடிஷாவில் விபத்துக்குள்ளான ரயில்களில் இது பொருத்தப்பட்டிருக்கவில்லை.
  • இதைத் தவிர, ரயில்வே துறையில் 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாதது, பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது, ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பு, பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் அதிகரித்திருக்கும் பிரச்சினைகள், ரயில்வே துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் கூடுதலாக இரண்டு முக்கியத் துறைகளைக் கவனிப்பதால் துறை ரீதியாக ஏற்பட்டிருக்கக்கூடிய சுணக்கங்கள் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசு முகங்கொடுத்தாக வேண்டியிருக்கிறது. அதே நேரம் இந்த விபத்து திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ள ரயில்வே வாரியம், சிபிஐ விசாரணையைக் கோரியுள்ளது. இது தொடர்பான விசாரணை எந்த விதமான அரசியல் நெருக்கடிக்கும் இடம் தராமல் நடக்க வேண்டும்.
  • கூடுதல் கட்டணத்தில் மேம்பட்ட வசதிகளை அளிக்கும் ‘வந்தே பாரத்’ ரயில்களில் காட்டும் அக்கறையை, அடிப்படைக் கட்டமைப்பு, பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு முழுமையாகச் செலுத்த வேண்டும். இந்தியாவையே உலுக்கியிருக்கும் இந்த விபத்துக்குப் பிறகேனும் அரசு பாடம் கற்க வேண்டும்!

நன்றி: தி இந்து (06 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories