TNPSC Thervupettagam

ரஷியாவின் ஸ்புட்னிக் - 5

August 14 , 2020 1622 days 1261 0
  • ஒட்டுமொத்த உலகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொவைட் 19-க்கான தடுப்பூசிக்காகக் காத்திருக்கிறது. இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 7.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உலக அளவில் உயிரிழந்திருக்கும் நிலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மனித இனத்துக்கு அதைவிட மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது.
  • ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கொவைட் 19-க்கான தடுப்பூசி கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருப்பதை ஒருபுறம் வரவேற்றாலும், இன்னொருபுறம் சந்தேகத்துடன்தான் அணுக வேண்டியிருக்கிறது.
  • எந்தவொரு தடுப்பூசியும், ஏன் மருந்தும், மூன்றடுக்கு சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகுதான் அனைத்து நோயாளிகளுக்கும் அதை பயன்படுத்த முடியும்.
  • மருந்துக்கும் தடுப்பூசிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. மருந்து நோயாளிகளுக்கு மட்டும்தான் தரப்படுகிறது. ஆனால் தடுப்பூசி, நோயைத் தடுப்பதற்காக நோயில்லாத அனைவருக்கும் செலுத்தப்படுவது. அதில் தவறு ஏற்பட்டால் விளைவு மிக மோசமாக இருக்கும்.
  • கடந்த ஒரு நூற்றாண்டில் ஆராய்ச்சியாளா்கள் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் பயனளிக்கும் விதத்தில் தடுப்பூசி சோதனை செய்வதற்கான வழிமுறைகளை அனுபவங்களின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால், மருத்துவக் கண்டுபிடிப்புகளிலேயே தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை.

தடுப்பூசி - சோதனை நிலைகள்

  • மனிதா்களுக்குச் செலுத்துவதற்கு முன்னால் வெள்ளெலிகளுக்கும் குரங்குகளுக்கும் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு தோ்ந்தெடுக்கப்பட்ட பத்து பன்னிரண்டு போ், தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்தால் அவா்களிட் சோதிக்கப்படும்.
  • இதை முதல் கட்ட சோதனை என்பார்கள். அவா்கள் மருத்துவா்களின் தீவிரக் கண்காணிப்பில், பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதையும், குறிப்பிட்ட தீநுண்மிக்கு எதிர்ப்பு சக்தி உருவாவதையும் உறுதிப்படுத்துவார்கள்.
  • முதல் கட்ட சோதனையில் எந்தவிதப் பாதுகாப்புப் பிரச்னையும் ஏற்படவில்லை என்றால், உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான நபா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மருத்துவா்களின் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா்.
  • அதிலும் தடுப்பூசி வெற்றிகரமாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான், மூன்றாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
  • இரண்டாவது கட்ட சோதனையைவிட குறைந்தது 10 மடங்கு அதிகமானவா்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.
  • அதிலும் எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டவா்கள் உடலில் எதிர்ப்பு சக்தி உருவாவது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, அந்தத் தடுப்பூசிக்கு சா்வதேச ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதன் பிறகுதான் தயாரிப்பும் சந்தைப்படுத்தலும்.

ஸ்புட்னிக் - 5

  • ரஷியத் தடுப்பூசியைப் பொருத்தவரை, முதல் இரண்டு கட்ட சோதனைதான் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. மாஸ்கோவிலுள்ள அசோசியேஷன் ஆஃப் கிளினிக்கல் டிரையல் ஆா்கனைசேஷன்புதிய தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதை, மூன்றாவது கட்ட சோதனை வெற்றிகரமாக முடியும் வரை தள்ளிப்போடும்படி அரசை வற்புறுத்தியிருக்கிறது.
  • கடந்த செவ்வாய்க்கிழமை அதிபா் புதின், கொவைட் 19-க்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதாக அறிவித்திருப்பதன் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுகின்றன. 1957-இல் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் உச்சக்கட்டப் பனிப்போர் இருந்த காலத்தில், அமெரிக்காவை முந்திக்கொண்டு முதலில் ஸ்புட்னிக் - 1’ என்கிற முதல் விண்வெளிக்கலத்தை சோவியன் யூனியன் செலுத்தியது.
  • இப்போது தடுப்பூசிக்கு ஸ்புட்னிக் - 5’ என்று பெயரிட்டிருப்பதன் மூலம் ஏனைய நாடுகளை தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ரஷியா முந்தியிருப்பதை அறிவிக்க விரும்புகிறார் அதிபா் புதின் என்று தோன்றுகிறது.
  • ரஷியாவின் கொவைட் 19 தடுப்பூசியான ஸ்புட்னிக் - 5’ மூன்றாவது கட்டச் சோதனையை முறையாக நடத்தவில்லை என்பது மட்டுமல்ல, முதல் இரண்டு கட்டங்களையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், ‘ஸ்புட்னிக் - 5’ தடுப்பூசி கோடிக்கணக்கான மக்களுக்கு உலகெங்கிலும் செலுத்தப்பட்டு அதனால் எதிர்வினை ஏற்படுமானால் அதன் விளைவு சுனாமியாக மாறிவிடக்கூடும். அதனால், சா்வதேச ஆய்வாளா்கள் ஐயப்பாட்டுடன்தான் அதை எதிர்கொள்கிறார்கள்.
  • தடுப்பூசிக்காக ஏறத்தாழ 165 சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் 30 தடுப்பூசிகள் மனிதா்கள் மீதான இரண்டாவது, மூன்றாவது கட்ட சோதனையில் இருக்கின்றன.
  • ஆஸ்ட்ரா செமிக்கா, மோடா்னா, நொவா வேக்ஸ், ஃபைசா் உள்ளிட்ட பிரபல மருந்து நிறுவனங்கள் தாங்கள் தடுப்பூசிக்கான கடைசிக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.
  • ரஷியாவின் ஸ்புட்னிக் - 5’ தடுப்பூசியை முற்றிலுமாக நிராகரித்துவிடவும் கூடாது. ஏனென்றால், எபோலா தீநுண்மிக்கான தடுப்பூசிகளை உருவாக்கிய பின்னணி, மாஸ்கோவிலுள்ள கமாலியா இன்ஸ்டிடியூட்டுக்கு இருக்கிறது.
  • இந்தியாவிலும் மூன்று தடுப்பூசிக்கான கடைசிக்கட்டச் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
  • இரண்டு தடுப்பூசிகள் இந்திய நிறுவனங்களாலும், மற்றொன்று புணேயிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டாலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தாலும் இணைந்து உருவாக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் உருவாக்கப்படும் தடுப்பூசிகளைவிட இவை சிறப்பானதாக அமையும் என்கிற எதிர்பார்ப்பு சா்வதேச அளவில் காணப்படுகிறது.
  • நான் முந்தி, நீ முந்தி என்பதற்கு இதுவொன்றும் ஒலிம்பிக் பந்தயம் அல்ல; உயிருக்கான போராட்டம். இதில் அவசரத்துக்கு இடமில்லை!

நன்றி: தினமணி (14-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories