TNPSC Thervupettagam

ராஜதந்திரப் பயணங்கள்!

September 3 , 2019 1898 days 1003 0
  • பிரதமர் நரேந்திர மோடி 2014 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்றதிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாடுகளுக்கு 53 அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். ஆறு கண்டங்களிலுள்ள 60 நாடுகளுக்கு இதுவரை பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்கள் எதிர்க்கட்சியினராலும், சமூக ஊடகங்களாலும் விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், இன்றைய உலக அரசியல் சூழலில் பல்வேறு தளங்களிலான பிரச்னைகளை எதிர்கொள்ளும் இந்தியா சர்வதேச அரசியலை சரியாகக் கையாளாமல் போனால் நிலைகுலைந்துவிடும் என்கிற உண்மையை அவர்கள் உணர வேண்டும்.
பொருளாதார சீர்திருத்தம்
  • 1991-இல் பிரதமர் நரசிம்ம ராவின் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசால், பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் உலகமயசூழலுக்குள் இந்தியா தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவால் தன்னிச்சையாக எந்தவொரு முடிவும் எடுத்துவிட முடியாத பொருளாதார, பாதுகாப்பு சூழல் ஏற்பட்டிருக்கிறது.
  • நரசிம்ம ராவுக்குப் பிறகு வந்த பிரதமர்கள் தேவெ கெளடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரும் உலக வங்கியையும், சர்வதேச நிதியத்தையும் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்து இந்தியாவை சந்தைப் பொருளாதாரமாக மட்டுமல்லாமல், அந்நிய மூலதனம் சார்ந்த பொருளாதாரமாகவும் மாற்றிவிட்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை தவிர்க்க முடியாதது.
  • இந்தப் பின்னணியில்தான் ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் இந்த வாரம் கிழக்கு ரஷிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறைப் பயணத்தை அணுக வேண்டும். ஆசிய அரசியல் சூழல் குழப்பத்தில் இருக்கும் நிலையில், விளாடிவோஸ்டாக்கில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடனான இந்திய பிரதமரின் வருடாந்திர சந்திப்பும் நடைபெற இருக்கிறது.
பொருளாதார மாநாடு
  • ஜப்பானும், கிழக்கு ரஷியா பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதால், இந்தியா, ரஷியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் விவாதிக்கப்படுவதுடன், ஆசிய அரசியல் சூழலில் இந்த மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படக் கூடும்.
  • சீன-அமெரிக்க வர்த்தகப் போர் கடுமையாகிக் கொண்டிருக்கிறது; தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவில் பிரச்னைகள் எழுந்திருக்கின்றன; ஹாங்காங்கில் நடக்கும் ஜனநாயகப் போராட்டத்தை ராணுவத்தின் துணையுடன் சீனா அடக்க முற்படலாம் என்கிற நிலைமை;
  • சீனாவுடனான நெருக்கம் ஏற்படுத்தும் துணிவினால், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் நிலைப்பாடு வலுக்கிறது - இந்தப் பின்னணியில்தான் விளாடிவோஸ்டாக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா அதிபர் விளாதிமீர் புதினையும், ஜப்பான் அதிபர் ஷின்úஸா அபேயையும் சந்திக்க இருக்கிறார்.
  • ஆசியாவின் அரசியல் சூழல் ஐந்து முக்கியமான அதிகார மையங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், ரஷியா ஆகியவற்றுக்கு இடையேயான உறவும் விரிசலும்தான் ஆசிய அரசியல் சூழலை நிர்ணயிக்கும்.
  • தன்னை மையப்படுத்தி ஆசிய அரசியலையும் உலக அரசியலையும் சீனா உருவாக்க நினைக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானை பயன்படுத்தும் சீனா, ஒரு பலவீனத்தை எதிர்கொள்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ரஷியா என்கிற நான்கு சக்திகளும் ஒருங்கிணையுமேயானால், சீனா சுற்றிவளைக்கப்படும் என்பதுதான் அந்த பலவீனம்.
பொருளாதாரத் தடை
  • ரஷியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையும், சீனபொருள்கள் மீதான இறக்குமதி வரிவிதிப்பும் உலகின் மிகப் பெரிய அணு ஆயுத சக்தியான ரஷியாவையும் உலகின் பெரிய இரண்டாவது பொருளாதாரமான சீனாவையும் நெருக்கமாக்கி இருக்கின்றன. அடிப்படையில் ரஷியாவும் சீனாவும் நட்பு நாடுகளல்ல. ரஷியாவின் வீழ்ச்சியில்தான் சீனாவின் வளர்ச்சி அமைந்தது. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை, சீனா தன்னுடைய மறைமுகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பது மாஸ்கோவை மறைமுகமாக அச்சுறுத்துகிறது. வெளிப்படையாக ரஷியாவும் சீனாவும் நட்புப் பாராட்டினாலும், இரண்டு நாடுகளுக்குமிடையே பரஸ்பர சந்தேகம் நிலவுகிறது என்பதுதான் உண்மை.
  • இந்திய - ரஷிய உறவைப் பொருத்தவரை, வெளிப்படையாகக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, அடிப்படையில் அரசியல் ரீதியான நட்பு நெருக்கமாகவே தொடர்கிறது. சமீபத்தில் காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்கு சீனா எடுத்துச்செல்ல முற்பட்டபோது, இந்தியாவுக்கு ஆதரவாக அதைத் தடுத்து நிறுத்தியது ரஷியாதான்.
     ரஷியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுடனான இந்தியாவின் உறவுக்கு முக்கியமான காரணம் சீனாவின் ஏகாதிபத்ய கண்ணோட்டம். அமெரிக்க அதிபர் டிரம்ப், முந்தைய அதிபர்களைப்போல சர்வதேச அரசியலில் ஆர்வம் காட்டாத நிலையில், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு ரஷியாவுடனும், ஜப்பானுடனும் நெருக்கம் அவசியமாகிறது. ஆசியாவில் சீனாவின் மேலாதிக்கத்தை சமன்படுத்த வேண்டும் என்பதில் இந்தியாவைப் போலவே ரஷியாவும் ஜப்பானும் முனைப்புக் காட்டுகின்றன.
  • விளாடிவோஸ்டாக்கில் இந்திய - ரஷிய வருடாந்திர மாநாட்டில், அமெரிக்காவுடனும், பிரான்ஸுடனும் ஏற்படுத்திக் கொண்டது போல, ரஷியாவுடனும் ராணுவ ஒப்பந்தம் ஒன்றை இந்தியா செய்துகொள்ள இருக்கிறது. இதேபோல ஒப்பந்தம் ஜப்பானுடனும் ஆஸ்திரேலியாவுடனும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் பிரதமர் மோடியின் விளாடிவோஸ்டாக் அரசுமுறைப் பயணம் அணுகப்பட வேண்டும்.

நன்றி: தினமணி(03-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories